Published : 28 Mar 2015 02:18 PM
Last Updated : 28 Mar 2015 02:18 PM
'தென்னகத்தில் உள்ள மரங்களில்
விநோதப் பழங்கள் காய்க்கின்றன
இலைகளில் ரத்தம் வேர்களிலும் ரத்தம்
வீசுகின்ற தெற்கத்தி காற்றில்
அசைந்தாடும் அந்தக் கறுப்பு உடல்கள்
புன்னை மரங்களில் தொங்கும்
விநோதப் பழங்கள்'
நம் காலத்தின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையை மையச் சரடாகக்கொண்டு வெளிவந்துள்ள ஒரு குறும்படத்தில், அமெரிக்காவின் ஜாஸ் இசைப் பாடகி பில்லி ஹாலிடே பாடியிருக்கும் வரிகள் இவை.
இசையமைப்பாளர் ஜிப்ரான் தயாரித்த குறும்படம் ஒன்று கான் (Cannes) சர்வதேசத் திரைப்பட விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாயின. ஆனால் வெளிவராத மிக முக்கியமான செய்தி, அது சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவரைப் பற்றிய படம் என்பது!
வேதி ஆயுதம்
60களில் வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த போரின்போது ரசாயன ஆயுதமாக 'ஏஜெண்ட் ஆரஞ்ச்' எனும் ஒரு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டது. அது தாவரங்களில் இருந்து இலையை உதிர்க்கச் செய்வதுடன், பயிரை அழிக்கவும் கூடியது.
பின்னாளில் அதுவே 'களைக்கொல்லி' என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதைப் பயன்படுத்திய நாடுகளில் மண் வளம் சீரழிந்தது. உலகளவில் உருவான எதிர்ப்பைத் தொடர்ந்து பல நாடுகளிலும் அதைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தை மையப் பொருளாகக்கொண்டு உருவாகியுள்ளது ‘ஸ்வேயர் கார்ப்பரேஷன்' எனும் குறும்படம்.
அர்ஜுனின் கதை
கதையின் நாயகனான அர்ஜுனுக்கு 23 வயது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கருத்துகளைப் பேசும் அவனுக்கு ஒரு லட்சியம் உண்டு. அது மேற்கண்ட களைக்கொல்லியை இந்தியாவில் தயாரிக்கும் 'ஸ்வேயர் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியை (சி.இ.ஓ.) கொல்வது!
அந்த அதிகாரி காரைக்கால் வரும்போது, அவரைத் தீர்த்துக்கட்ட அர்ஜுன் திட்டமிடுகிறான். அதற்காகக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணிக்கும் கார் ஒன்றை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டு புதுச்சேரி செல்கிறான். அந்தக் காரை ஓட்டி வருபவர் ஒரு முதியவர்.
அந்தப் பயணத்தின்போது இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடலே மீதிப் படம். அர்ஜுனின் திட்டத்தை அறிந்துகொள்வதுடன், அவனை நல்வழிப்படுத்தவும் முயற்சிக்கிறார் அந்த முதியவர். அவருடைய கருத்துகளை அர்ஜுன் கேட்டானா, அந்தச் சி.இ.ஓ. கொல்லப்பட்டாரா, அந்த முதியவர் யார் என்பதெல்லாம்... அவ்வளவு சஸ்பென்ஸ்! சுற்றுச்சூழல் குறித்த படம் என்றாலும், பிரச்சார நெடி இல்லாமல் இருப்பது இந்தப் படத்தின் பலம்.
சினிமா கனவு
படத்தின் இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் உடன் நிகழ்த்திய உரையாடலில் இருந்து:
“சின்ன வயதிலேயே சினிமாதான் கனவு. அப்பா மருத்துவர். அம்மா ஆசிரியை. அதனால் நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்கிற நெருக்கடி இயல்பாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க, பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு, கோவையில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டேன்.
இங்கே மல்டிமீடியா படிப்புகளைப் படித்து, கொஞ்சம் கொஞ்சமாக விளம்பரப் படங்கள் எடுக்க ஆரம்பித்து, தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தும் அளவுக்கு வளர்ந்தேன். அப்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இருந்து 'கார்ப்பரேட் பிலிம்' எடுக்க வாய்ப்பு வந்தது.
மரங்களை வெட்டி காடுகளை அழித்த அந்த நிறுவனமே, பாலைவனமாக உள்ள அதே நிலத்தைச் சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக இருப்பது போலக் காட்டுங்கள் என்று எனக்கு நெருக்கடி தந்தது. நாம் நம்புகிற ஒரு விஷயத்துக்கும் நாம் செய்கிற வேலைக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருப்பதாக உணர்ந்த தருணம் அது. அதோடு விளம்பரப் படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.
விவசாய அனுபவம்
பிறகு கொஞ்சக் காலம் ஆரோவில்லில் தங்கி விவசாயம் செய்தேன். சுற்றுச்சூழல் குறித்து நிறைய விஷயங்களை அறிந்துகொள்ள, அந்த அனுபவம் பேருதவியாக இருந்தது.
மறுபடியும் சென்னை வந்தபோது, இயக்குநர் சற்குணத்தின் அறிமுகம் கிடைத்து, அவருடைய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அப்படித்தான் இசையமைப்பாளர் ஜிப்ரானின் அறிமுகம் கிடைத்தது.
இதெல்லாம் போய்க்கொண்டிருந்த நேரத்தில், ‘கான் திரைப்பட விழாவுக்கு ஏன் ஒரு குறும்படத்தை எடுத்து அனுப்பக்கூடாது? ' என்று கேள்வி எழுந்தது. நம்மிடையே சுற்றுச்சூழல் அக்கறை மிகவும் குறைவு. அதனால்தான் அதை மையமாக வைத்துப் படம் எடுக்க நினைத்தேன்.
இது தொடர்பாக ஜிப்ரானிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் தயாரித்ததோடு நிறைய உதவிகளைச் செய்ய முன்வந்தார். துருக்கியைச் சேர்ந்த என் மனைவி பசாக் கஸிலரும் ஆதரவாக இருந்தார். இதோ படத்தை முடித்து, அது கான் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வும் செய்யப்பட்டுவிட்டது" என்று புன்னகைக்கிறார்.
தேவைக்கு மட்டும்
ஸ்வேயர் கார்ப்பரேஷனில் விவசாயம் முக்கிய இடம்பெற்றிருப்பதுடன், வேறு பல விஷயங்களும் அடியோட்டமாக உள்ளன. ரதீந்திரனுக்கு இயற்கை மீதான பிடிப்பு அதிகமாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. மார்க்சிஸ்ட்களாக இருந்த பெற்றோருக்குப் பிறந்த இவர், புத்த மதக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.
"இயற்கைக்கும் புத்த மதத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு. எதையும் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாதே என்பது பவுத்தத் தத்துவம். அதனால்தான் இந்தப் படத்தை 30 நிமிடங்களுக்குள் கொண்டுவர முடிந்தது. இந்தியாவில், படத்தின் நீளத்தைக் கொண்டு குறும்படம், முழுநீளப் படம் என்று பிரிக்கும் தன்மை உள்ளது. அப்படிப் பிரிப்பது தேவையில்லை. குறும்படமோ, முழுநீளத் திரைப்படமோ... ஒவ்வொன்றும் ஒரு தனித்த ஊடகம்" என்கிறார்.
ஒடுக்குமுறையின் பாடல்
படம் ஓடும் நேரம் குறைவாக இருப்பது போலவே, படத்துக்குப் பின்னணி இசையும் கிடையாது. அதை அற்புதமாகப் பதிலிடுகின்றன பில்லி ஹாலிடேயின் பாடல்கள். அமெரிக்காவில் கறுப்பின மக்களை அடித்து உதைக்கும் சம்பவங்களுக்கு எதிராக ஏபல் மீரோபோல் எனும் ஆசிரியர் எழுதியதுதான் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள கவிதை வரிகள். அதைப் பின்னாளில் பாடலாக எடுத்துச் சென்றவர் பில்லி ஹாலிடே.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அந்த வரிகள் தமிழகத்துக்கும் பொருந்தும்... நம்ம ஊர் விவசாயிகளும் உழைக்கும் மக்களும் அப்படிப்பட்ட மறைமுகத் தாக்குதலையே எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த அவலங்களுக்கு மத்தியில் சுற்றுச்சூழல் குறித்துக் குறும்படம் எடுக்க, ரதீந்திரனைப் போன்ற இளைஞர்களும் நம் திரைத் துறையில் இருப்பதுதான் ஒரே ஆறுதல்!
ரதீந்திரன் பிரசாத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT