Published : 07 Feb 2015 02:16 PM
Last Updated : 07 Feb 2015 02:16 PM
ஃபிரெஞ்சு எழுத்தாளர் ழான் ழியோனோ எழுதிய ‘மரங்களை நட்டவன்' (The Man Who Planted Trees, 1953) என்ற கதை உலகப் புகழ்பெற்றது. பிரான்ஸில் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் தனியாய் வாழ்ந்த எல்செயார் புஃபியே என்ற ஆடு மேய்ப்பவரைப் பற்றிய கதை அது. தினசரி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லும்போது, தன் கையிலிருக்கும் நீண்ட கழியால் மலைப் பகுதியில் குத்தி, தன் பையிலிருக்கும் மர விதைகளைப் போடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சில ஆண்டுகளில் அவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மலைச்சரிவு, மரங்களால் போர்த்தப்பட்ட பின்னர், அடுத்திருந்த மலைக்குத் தன் மந்தையுடன் புலம்பெயர்ந்துவிட்டார். காலப்போக்கில் அந்த மலை தொடரே மரங்கள் நிறைந்து காடாக மாறிவிட்டது. ஓடைகள் உயிர் பெற்றன. சிற்றுயிர்கள், பறவைகள், பூச்சிகள் எல்லாம் செழிக்கத் தொடங்கின. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று எல்லோருக்கும் ஆச்சரியம். ஆனால், அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மற்றொரு மலைச் சரிவில் தன் வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தார்
அந்த ஆடு மேய்ப்பவர்.
இந்தக் கதையைப் படித்தவர்கள் எல்செயார் புஃபியே உண்மையிலேயே இருக்கிறார் என்றே நம்பினார்கள். ழியோனோவின் எழுத்து வன்மை அத்தகையது. இதைப் பற்றி சூழலியல் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு தவம்
ஒற்றை மனிதனால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. அது நிஜத்தில் நடக்கச் சாத்தியமில்லாதது என்றுதான் அனைவரும் நம்புகிறோம். உலகை வசீகரித்த 'மரங்களை நட்டவன்' கதையை நிஜமாக்கிவிட்டார் ஜாதவ் பயேங். இவரைப் பொறுத்தவரை காடு வளர்ப்பு, என்பது ஒரு தவம்.
அசாம் மாநிலம் பிரம்மபுத்திரா நதியின் நடுவே ஜோர்ஹாட் அருகேயுள்ள கோகிலாமுக் பகுதியில் மிகப் பெரிய காட்டுக்கு உயிர் கொடுத்தவர்தான் இந்த ஜாதவ் பயேங். கடந்த 35 ஆண்டுகளாக 1,360 ஏக்கர் / 550 ஹெக்டேர் பரப்புள்ள ஒரு மணல்திட்டு காடாகச் செழித்து வளரத் தன் வாழ்க்கையையே கொடுத்துள்ளார். ஆற்றிடை மணல்திட்டின் மீது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் காடு இதுதான்.
உள்ளூர்வாசிகள் இந்தக் காட்டை மொலாய் காதூனி - அதாவது மொலாயின் காடுகள் என்று சரியாகவே அழைக்கிறார்கள். கோகிலாமுக் காட்டின் பிரம்மா மொலாய். அதுதான் பயேங்கின் செல்லப் பெயர்.
காட்டு மனிதன்
"மரங்களையும் உயிரினங்களையும் இந்த மனிதர் தனது குழந்தைகளாகக் கருதுகிறார். பயேங்கைப் போல ஒரு ஆள் வேறொரு நாட்டில் இருந்திருந்தால், இந்நேரத்துக்கு அந்த நாடே கொண்டாடி இருக்கும்" என்கிறார் அசாம் துணை வனப் பாதுகாவலர் குனின் சைக்கியா.
2012-ம் ஆண்டில் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு பாராட்டு விழாவுக்குப் பிறகே, ஜாதவ் பயேங்கின் பிரம்ம பிரயத்தன சாதனை உலகின் கண்களில் பட ஆரம்பித்தது. 'இந்தியாவின் காட்டு மனிதன்' என்ற பட்டம் அப்போது வழங்கப்பட்டது.
'பிழைக்கத் தெரியாதவர்' என்று முத்திரை குத்தப்படும் பயேங்கைப் போன்ற இயற்கை நேசர்களுக்கு, அரசு அங்கீகாரம் எட்டாக் கனிதான். ஆனால், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் ஜாதவ் பயேங்குக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாகக் குறைந்தபட்ச அரசு அங்கீகாரம்கூட இல்லாமல், காட்டைக் காப்பாற்றிவந்த அவருக்குக் கிடைத்துள்ள பெரிய அங்கீகாரம் இது.
குடும்பம்
மிசிங் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அவருடைய மனைவி வினிதா, 2 மகன்கள், மகளுடன் மின்சாரமோ, தண்ணீர் வசதியோ இல்லாத சிறிய குடிசையில் வாழ்ந்துவருகிறார். காடு மீதான தீவிரக் காதல், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு எந்தப் பலனையும் வழங்கவில்லை. மனைவியோ, குழந்தைகளோ, அவருடைய ஆர்வத்துக்கு எந்தத் தடையும் போட முடியவில்லை. மாட்டுப் பால் விற்பதே, அவர்களுக்குக் கஞ்சி ஊற்றுகிறது.
எழுபதுகளில் அருணா சபோரி எனும் தீவில் சமூகக் காடு வளர்ப்புத் திட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தவர் ஜாதவ். தற்போது அவர் உருவாக்கியுள்ள கோகிலாமுக் காட்டிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அப்பகுதி உள்ளது. அந்தத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டு எல்லோரும் இடத்தைக் காலி செய்ய, ஜாதவ் மட்டும் ‘தன் கடன் பணி செய்தல்’ என இருந்தார்.
திருப்புமுனை
1979-ல் அசாமில் கடுமையான வெள்ளம் வந்தபோது, கோகிலாமுக் மணல்திட்டில் நூற்றுக்கணக்கான பாம்புகள் கரையொதுங்கின. வெள்ளம் வடிந்தபோது, வெயிலின் வெம்மையில் பாம்புகள் மடிந்து போய்ச் சடலங்கள் வரிசையாகக் கிடந்தன. அந்த மணல் திட்டில் மரங்கள் எதுவுமில்லை.
பாம்புகளின் சடலங்களுக்கு அருகே சென்றபோது ஜாதவ் பயேங்கால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அது கொலைக் களத்தைப் போலிருந்தது என்கிறார். 16 வயது இளைஞனான பயேங்கின் ஆழ்மனம், அந்தத் தருணத்தில் விழித்துக்கொண்டது. அவரது வாழ்க்கை புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியது.
வனத்துறை அதிகாரிகளைப் பார்த்து, மணல் திட்டில் மரம் வளர்க்க முடியுமா பாருங்கள் என்று கேட்டிருக்கிறார். மணல்திட்டில் எந்த மரமும் வளராது, மூங்கில் வேண்டுமானால் வளரலாம் என்றார்கள். அதை மந்திரம் போலப் பிடித்துக்கொண்டார்.
எறும்புகள் மாயம்
வீட்டையும் கல்வியையும் துறந்த அவர், அந்த மணல் திட்டிலேயே வாழ ஆரம்பித்தார். அக்கறை எனும் தண்ணீரை ஊற்றி ஒவ்வொரு மூங்கில் கன்றையும் பார்த்துப் பார்த்து வளர்த்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த மணல் திட்டு மூங்கில் புதரானது. அதன் பிறகு மரங்களை வளர்க்கும் நம்பிக்கை துளிர்க்க, மரக்கன்றுகளைச் சேகரித்து நட்டார்.
அப்புறம் அவர் செய்த முக்கியமான காரியம், தனது ஊரில் இருந்து சிவப்பு எறும்புகளைக் கொண்டுபோய் அந்த மணல்திட்டில் விட்டதுதான். எந்த ஒரு மண்ணையும் செழிக்க வைக்கும் மாயவித்தை எறும்பைப் போன்ற சிற்றுயிர்களிடம் ஒளிந்துள்ளது.
அவை மண்ணின் தன்மையையே உருமாற்றக் கூடியவை. இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை என்கிறார்.
உயிர்பெற்றது
அடுத்த சில ஆண்டுகளில் அந்த மணல்திட்டில் தாவரங்களும் உயிரினங்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் செழிக்க ஆரம்பித்தன. அங்கே இருந்த மான்களும் மாடுகளும் புலி போன்ற இரைகொல்லிகளை ஈர்த்தன. அவற்றின் வேட்டை எச்சத்தைச் சாப்பிடப் பிணந்தின்னிக் கழுகுகள் வந்தன. இன்றைக்கு ஜாதவின் காட்டில் அழிவின் விளிம்பில் உள்ள புலிகள் (5), காண்டாமிருகம், யானைகள், மான்கள், முயல்கள் உள்ளன.
அருகிலுள்ள பல கிராமங்களுக்குள் புகுந்து வெளியேறிய 100 காட்டு யானைகள் கோகிலாமுக் காட்டுக்குள் 2008-ம் ஆண்டு போனபோதுதான் உள்ளூர் வனத் துறைக்கே, அந்தக் காட்டைப் பற்றி தெரிய வந்தது. ஜாதவ் உருவாக்கிய காட்டால்தான் யானைகள் ஊருக்குள் வருகின்றன என உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டி, அவரை எதிர்த்தனர்.
அதை எதிர்கொண்டு காட்டுயிர் வேட்டையாடிகள், மரம்வெட்டிகளிடம் இருந்து கடந்த 35 ஆண்டுகளாகத் தனியொரு ஆளாகத் தன் காட்டைக் காப்பாற்றி வருகிறார். அவருக்கு மட்டுமல்ல, அவர் உருவாக்கிய காட்டுக்கும் அரசு எந்தப் பாதுகாப்பும் தரவில்லை.
வலி நிறைந்த அனுபவம்
"மனிதன் ஆறறிவு படைத்தவன், அனைத்தையும்விட உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்கிறான். ஆனால், நாமே அந்த உயிரினங்களை வேட்டையாடினால், வேறு யார் அவற்றைப் பாதுகாப்பார்கள்?
யாருக்கும் காட்டை உருவாக்கும் ஆர்வம் இல்லை. எனக்கு உதவ யாருமில்லை. காட்டுப் புலிகளுக்காக எனது மாடுகளை இழந்திருக்கிறேன். இந்தக் காட்டை உருவாக்கிய அனுபவம் வலிகள் நிறைந்ததுதான்.
யாரும் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத ஒரு விஷயத்தை நான் செய்திருக்கிறேன். ஆனால், இதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை எனும்போது, உங்களால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்கிறார்.
இத்தனையையும் தாண்டி மரங்கள், காடுகள், இயற்கை சூழ்ந்த இந்தப் பூமியின் மீது அக்கறையுடன் அவர் செயலாற்றிக்கொண்டிருக்கிறார் என்றால், அவற்றின் மீது அவர் வைத்துள்ள சுயநலமற்ற காதல்தான் காரணம்.
இந்தப் பூமியைக் காப்பாற்ற ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கான பதிலை ஜாதவ் பயேங் அற்புதமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT