Published : 28 Feb 2015 02:35 PM
Last Updated : 28 Feb 2015 02:35 PM
உலகின் வல்லரசான அமெரிக்கா தன்னுடைய ராணுவ பலத்தைக் கொண்டு எந்த நாட்டில் வேண்டுமானாலும் புகுந்துவிடுவது வழக்கமாக உள்ளது. முதல்முறையாக இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய ‘எதிரி’யை உள்நாட்டிலேயே அது சந்திக்கப் போகிறது. இந்த எதிரியை அதன் ராணுவ பலத்தாலும் பண பலத்தாலும் ஏதும் செய்துவிட முடியாது. தொழில் வளர்ச்சிக்காக சுற்றுச்சூழலை பலிகொடுத்ததன் விளைவை, தொழில்வள நாடான அமெரிக்கா இப்போது அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஆம், பருவமழை இல்லாமல் அமெரிக்காவின் பெரும் பகுதிகள் கடும் வறட்சியில் சிக்கிவருகின்றன.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இருந்திராத வகையில் மிகமிக மோசமான வறட்சி நிலைமையை அமெரிக்கா எதிர்நோக்கியிருக்கிறது. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிக்கும் மத்திய சமவெளிக்கும் இடைப்பட்ட பகுதியில் 2050-க்குப் பிறகு நெடிய வறட்சி ஏற்படவிருக்கிறது. வழக்கமாக வறட்சி ஏற்பட்டால், அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த ஆண்டு மழை பொழிந்து சரிக்கட்டிவிடும். இந்த முறை அப்படியெல்லாம் நேரப்போவதில்லை என்று ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ என்ற இணையதள அறிவியல் இதழ் எச்சரிக்கிறது.
மெகா வறட்சி
"21-வது நூற்றாண்டின் ஒவ்வொரு ஆண்டிலும் பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டேதான் போகப்போகிறது, குறையப்போவதில்லை. வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் வறட்சியின் தீவிரம் சில ஆண்டுகளில் இன்னும் கடுமையாக உணரப்படும். அமெரிக்காவின் மத்திய பகுதி, மேற்குப் பகுதிகளில் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு வறட்சி நிலவப்போவது 80% உறுதி" என்கிறார் ‘நாசா’ விண்வெளி ஆய்வு அமைப்பைச் சேர்ந்த வளிமண்டல விஞ்ஞானி பெஞ்சமின் குக்.
அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் எதிர்காலத்தில் தண்ணீருக்குக் கடும் கிராக்கியும் விலை உயர்வும் ஏற்படப்போகிறது என்று எச்சரிக்கிறார் கார்நெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் பெஞ்சமின் குக்குடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வருபவருமான டோனி ஆல்ட். இந்த மெகா வறட்சிகள் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று இருவரும் உறுதியாகச் சொல்கிறார்கள். 1930-களில் அமெரிக்காவில் ஏற்பட்ட வறட்சி 35 ஆண்டுகளுக்கு நீடித்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தீவிரம் கணிப்பு
அமெரிக்க நிலப்பரப்பின் வெவ்வேறு பகுதிகளில் நிலவும் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதன் மூலமும், 17 கணினிகள் பதிவு செய்து தரும் ‘உருவக ஆய்வு முடிவுகள்’ (சிமுலேஷன்) மூலமும் வரப்போகும் வறட்சி எப்படியிருக்கும் என்று எச்சரிக்க முடியும் என்கிறார் குக்.
கலிஃபோர்னியா, நெவாடா, உடா, கொலராடோ, நியூ மெக்ஸிகோ, அரிசோனா, வடக்கு டெக்சாஸ், ஓக்லஹாமா, கான்சாஸ், நெப்ராஸ்கா, தெற்கு டகோடா, அயோவாவின் பெரும் பகுதி, தெற்கு மின்னசோட்டா, மேற்கு மிசௌரி, மேற்கு அர்கன்சாஸ், வடமேற்கு லூசியானா ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தி குக் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் வெப்பம், காற்றின் ஈரப்பதம், குறைந்துவரும் மழையளவு, மரத்தின் ஆண்டுவளையம் (மரத்தின் அடிப்பகுதியை குறுக்காக வெட்டினால் தெரியும் வளையங்கள்) போன்ற தரவுகளைக் கொண்டு வறட்சியின் தீவிரம் கணக்கிடப் பட்டுள்ளது.
சமாளிக்க முடியுமா?
அமெரிக்காவில் கி.பி. 1,100-களிலும் 1,200-களிலும்கூட இதேபோல நீண்ட, நெடிய வறட்சி ஏற்பட்டிருக்கிறது. அப்போது இயற்கையான பருவ சுழற்சியால் வறட்சி ஏற்பட்டது. இப்போது தொழிற்சாலைகள் வெளியிட்டுள்ள கரிவாயுவின் (Co2) அடர்த்தி காரணமாகவும், புவி வெப்பநிலை உயர்வு காரணமாகவும் வறட்சி ஏற்படப்போகிறது என்பதுதான் முக்கியமான வித்தியாசம்.
புவி வெப்பநிலை உயர்வதால் வறட்சி ஏற்படும் என்பது விஞ்ஞானிகள் ஏற்கெனவே கணித்ததுதான். அது எவ்வளவு தீவிரமாகவும் நெடியதாகவும் இருக்கும் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கடந்த காலத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு வறட்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முறை அதை எளிதாகச் சமாளிக்க முடியாது என்பதுதான் முக்கியம்.
அதிரடி பாதிப்புகள்
13-வது நூற்றாண்டில் இப்படிப்பட்ட ஒரு கொடூர வறட்சி காரணமாகத்தான் அனசாஸி நாகரிகம் குன்றி அடையாளம் தெரியாமல் அழிந்துபோனது. 21-வது நூற்றாண்டில் ஏற்படப்போகும் இந்த வறட்சி, கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியை ‘வசந்தம்’ என்று சொல்லும் அளவுக்கு உக்கிரமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறார் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஜேசன் ஸ்மெர்டன்.
2,000-வது ஆண்டு தொடங்கியதிலிருந்தே வறட்சி ஆரம்பித்துவிட்டது. கலிபோர்னியாவில் நாலாவது ஆண்டாக வறட்சி தொடர்கிறது. இப்போது 6.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடை மந்தைகளைப் பராமரிக்க முடியாமல் விவசாயிகள் விற்றுவிட்டார்கள். பயிரிட முடியாத விவசாயிகள் தரிசாகவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நகரங்களில் தண்ணீருக்கு ரேஷன் வந்துவிட்டது. எதிர்காலத்தில் இந்த வறட்சி தொடரும் என்பதால் மக்கள், விலங்குகள், தாவரங்கள் என்று எல்லா தரப்புக்கும் வேதனை மோசமாகத்தான் இருக்கப் போகிறது.
மக்கள்தொகைப் பெருக்கமும் அதிகமாக இருப்பதால், பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. கலிபோர்னியாவிலும் தென்-மேற்குப் பகுதியிலும் நிலத்தடி நீர் வேகமாக வற்றி வருகிறது. விவசாயம், தோட்டக்கலை, கால்நடைப் பண்ணை போன்றவையும் கடுமையாக பாதிக்கப்படவிருக்கின்றன. இதை எதிர்கொள்வது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.
© தி அசோசியேடட் பிரஸ்,
தி கார்டியன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT