Published : 07 Feb 2015 02:25 PM
Last Updated : 07 Feb 2015 02:25 PM

சம்பங்கி சாகுபடியில் சாதிக்கும் பொறியாளர்: ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருமானம்

வெளியாட்களே இல்லாமல் 50 சென்ட்டில் சம்பங்கி சாகுபடி செய்தால் தினசரி வருமானம் கிடைப்பது மட்டுமில்லாமல், ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் ஈட்டலாம் என்கிறார் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தவசிமேடைச் சேர்ந்த ஹைடெக் விவசாயி வி.ஏ. மருதமுத்து. சம்பங்கி சாகுபடியில் தமிழகத்துக்கே இவர் முன்னோடியாக உள்ளார். இவரது சம்பங்கித் தோட்டத்தைப் பார்வையிட, தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகள் படையெடுக்கின்றனர்.

" அனைத்து வகை மண்ணிலும் சம்பங்கி வளரும். சரளை, செம்மண்ணில் நன்றாக வளரும். எல்லாக் காலத்திலும் சாகுபடி செய்யலாம். சம்பங்கியில், 'பிரஜ்வல்' வீரிய ரகச் சம்பங்கியை சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். பூவின் எடையும் அதிகமாக இருக்கும். சாதாரணச் சம்பங்கி பூக்கள், ஒரு கிலோ எடையுடன் இருந்தால், 'பிரஜ்வல்' சம்பங்கி பூக்கள் ஒன்றரை கிலோ எடை கிடைக்கும். மூன்றரை மாதத்தில் பூ பறிக்கத் தொடங்கலாம். ஆறாவது மாதத்துக்குப் பின் கணிசமான வருவாய் ஈட்டத் தொடங்கலாம்.

வேலை குறைவு

நான் 50 சென்ட்டில் நடவு செய்கிறேன். ஒரு நாளைக்கு 20 முதல் 25 கிலோ பறிக்கிறேன். 1,600 ரூபாய் வருவாய் கிடைக்கிறது. விலங்கு கழிவு, இலை தழை என இயற்கை உரமிடுவதால் செலவே இல்லை. மாதம் ஒரு முறை ஒரு சென்ட்டுக்கு அரை கிலோ புண்ணாக்கு வீதம் 25 கிலோ புண்ணாக்கு போட வேண்டும். பூ பறிக்க ஒரே ஒரு ஆள் போதும். அந்த வேலையை நாமே செய்துவிடலாம். மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்வதற்குப் போக்குவரத்துக்குச் செலவு ஆகும். வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

முகூர்த்தக் காலங்களில் கிலோ 200 ரூபாய் முதல் 800 ரூபாய்வரை கிடைக்கும். மாதத்தில் கண்டிப்பாக 5 முகூர்த்த நாள் இருக்கும் என்பதால், அந்த நாட்களில் நல்ல விலை போகும், மாதம் ரூ. 25 ஆயிரம் கிடைத்துவிடும். மற்ற நாட்களில் கிலோ 20 ரூபாய் முதல் 80 ரூபாய்வரை விற்கும். புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களில் மட்டுமே விலை குறையும். இதைக் கணக்கீட்டால் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் சம்பாதிக்கலாம். ஒரு நபர், ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டும் செலவு செய்தால் போதும். சம்பங்கி சாகுபடிக்குப் பெரிய உடல் உழைப்பும் தேவையில்லை." என்கிறார். தற்போது 30 சென்ட்டில் சம்பங்கி சாகுபடி செய்து, மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் மருதமுத்து.

இப்போது இவரைப் பார்த்து மாவட்டத்துக்கு 10 முதல் 20 பேர் சம்பங்கி சாகுபடி செய்கின்றனர். இவருக்கும் விவசாயத்துக்குச் சம்பந்தமே இல்லை. இன்ஜினியரிங் படித்துவிட்டு மென்பொருள் பொறியாளராகச் சென்னையில் பணிபுரிந்து வந்தார். இன்றைக்குப் பாரம்பரிய விவசாயிகளுக்கு வழிகாட்டியாக இருப்பது பெருமையாக இருப்பதாகச் சொல்கிறார். அதனால் ஆர்வமும், 50 சென்ட் நிலமும் இருந்தாலே போதும் சம்பங்கி சாகுபடியில் சாதிக்கலாம்.

பொறுத்திருந்து சாதனை

நான் எடுத்தவுடனேயே சாதித்துவிடவில்லை, லாபத்தை எடுத்துவிடவில்லை. முதல் ஐந்து ஆண்டு பல முறைகளில் சம்பங்கி சாகுபடி செய்து பார்த்தேன். முதலில் 60 சென்ட்டில் இலை தழைகளை ஊற வைத்து, எருவையும் சேர்த்து உரமாகப் போட்டுச் சாகுபடி செய்தேன். அடுத்த முறை, விலங்குகளின் கழிவை உரமாக இட்டேன். அடுத்த முறை, இடைவெளி விட்டுச் சம்பங்கி சாகுபடி செய்தேன். பொதுவாக ஒரு பயிருக்கு இடைவெளி ரொம்ப முக்கியம். நெருக்கமாகவோ, அதிக இடைவெளிவிட்டோ நடக்கூடாது.

அதனால், தேவையான அளவு இடைவெளிவிட வேண்டும். இடைவெளிவிட ஆண்டு பரிசோதனை முயற்சியால் 2 அடி முக்கோண நடவு முறையில் சாகுபடி செய்தபோது சம்பங்கியில் நல்ல மகசூல் கிடைத்தது. ஐந்து ஆண்டு முயற்சியால் சம்பங்கி சாகுபடியில் நான் கண்டுபிடித்த தேவையான இடைவெளி, விலங்குக் கழிவு, இலை தழைகளை உரமாக இடும் இயற்கை முறை, இப்போது மற்ற விவசாயிகளுக்கு உதவியாக இருக்கிறது, '' என்கிறார் மருதமுத்து.

விவசாயி மருதமுத்துவைத் தொடர்புகொள்ள: 9787642613

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x