Published : 13 Jul 2019 11:49 AM
Last Updated : 13 Jul 2019 11:49 AM

சமையல், சுகாதாரத்திலும் ஞெகிழியைத் தவிர்க்கலாம்

சமையலறை, சுகாதாரத்தில் ஞெகிழிப் பொருள்களை எப்படித் தவிர்ப்பது?

சமையலறை

எண்ணெய்: ஞெகிழிப் பாக்கெட்களிலும் ஞெகிழிக் குடுவைகளிலும் கிடைக்கும் எண்ணெய்க்கு மாற்றாக செக்கில் ஆட்டிய எண்ணெய்யை நம்முடைய பாத்திரங்களில் நிரப்பித் தரும் கடைகளைத் தேடுங்கள். பல இயற்கை அங்காடிகளும் செக்கில் ஆட்டுபவர்களும் ஞெகிழிப் பொருட்கள் இல்லாமலேயே எண்ணெய்யை விற்றுக்கொண்டுள்ளனர். அவர்களிடமே வாங்குங்கள்.

தயிர்: கடையில் கிடைக்கும் தயிரைத் தவிர்த்து, வீட்டிலே பாலை உறைக் குத்தினால் தினம் ஒரு ஞெகிழி உறை அல்லது ஞெகிழி டப்பாவைத் தவிர்க்கலாம். கலப்படமற்ற சுத்தமான தயிராக வீட்டிலேயே கிடைப்பதும் கூடுதல் சிறப்பு.

பாத்திரங்கள்: சமையலறையில் இருக்கும் ஞெகிழி டப்பாக்களை ஒவ்வொன்றாகக் குறைக்க முற்படுங்கள். ஒரே நேரத்தில் அத்தனை ஞெகிழி டப்பாக்களையும் பாத்திரங்களையும் தூக்கி எறிய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பொருள்களை அவற்றின் கடைசிக் காலம்வரை பயன்படுத்துங்கள். காலம் முடிந்து காயலாங்கடைக்கு சென்ற பிறகாவது, ஞெகிழியற்ற பொருள்களுக்கு மாறுங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள்: பதப்படுத்தி ஞெகிழி உறைகளில் இட்டு விற்கப்படும் உணவுப் பொருள்களை முற்றிலும் தவிர்க்கலாம். இது நூடுல்ஸுக்கு மட்டுமல்ல மிளகாய்த் தூள், உப்பு, கேழ்வரகு மாவு முதல் இட்லி மாவுவரை அனைத்துக்கும் பொருந்தும். இட்லி மாவாகவே இருந்தாலும் பாத்திரத்தைக் கொண்டு சென்று கடைகளில் வாங்குங்கள். உப்பை சாக்கில் வைத்துத் தெருத்தெருவாக விற்கும் மனிதர்கள் எஞ்சி இருக்கிறார்கள். அவர்களைத் தேடி ஆதரியுங்கள்.

சுகாதாரம்

பனை நார் துடைப்பான்: தரை, கழிவறை போன்றவற்றைத் தூய்மைப்படுத்த பனை நாரில் செய்யப்பட்ட துடைப்பான்களைப் பயன்படுத்துங்கள். இதைப் போன்ற அதிகம் உராயும் பொருள்களில் இருந்துதான் நுண்ஞெகிழி நீருக்குள் கலக்கிறது.

பற்பொடி: பற்பசைக் குழாய் என்பது மக்காத ஞெகிழி, அலுமினியம் போன்றவற்றை சேர்த்து செய்யப்பட்ட ஒரு பொருள். அதை மறுசுழற்சி செய்வது மிகவும் கடினம். பற்பசைகளைத் தவிர்த்து பற்பொடிகளைப் பயன்படுத்திப் பாருங்கள். பல்லும் வலுவாகும் சுற்றுச்சூழலும் சீர்கெடாமல் இருக்கும்.

மாதவிடாய் நாப்கின்: சூழலியலுக்கு மட்டுமல்ல, பெண்களின் உடல்நலனுக்கும் ஞெகிழியால் செய்யப்பட்ட மாதவிடாய் நாப்கின் நல்லதல்ல என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் பெண்கள் மீண்டும் துணி நாப்கின்களுக்கு மாறி வருகிறார்கள். துணியால் ஆன மாதவிடாய் நாப்கின்கள், சிலிகான் கப் போன்றவை தூய்மைப்படுத்திவிட்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை.

குழந்தைகள் டயபர்கள்: முதல்முதலில் பயன்படுத்தப்பட்ட டயபர் பூமியில் இன்னமும் மக்காமலேதான் உள்ளது. அதைப் பயன்படுத்திய குழந்தைக்கு இப்போது வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். அதனால், துணி டயபர்களையே பயன்படுத்துவோம்.

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்

தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x