Published : 01 Jul 2017 10:20 AM
Last Updated : 01 Jul 2017 10:20 AM
“அடிக்கிற வெயிலுக்கு இப்போ எந்தப் பறவையும் வெளிய வராது. நீ எங்க கிளம்பிட்ட” என்று அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து ஒலித்தது. “மாடிக்குத் தாம்மா போறேன்” என்றேன். வெயில் எட்டிப் பார்க்கும் முன்னரே என் தினசரி 15 நிமிடப் பறவை நோக்குதலை முடித்துவிடுவேன். ஆனால், அன்று நான்கு மணி அளவில்தான் என்னுடைய குறிப்பேட்டையும் இருநோக்கியையும் எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றேன்.
வழக்கம்போலவே இரண்டு அண்டங்காக்கைகளும் மைனாக்களும் தென்னங்கிளையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. பக்கத்து வீட்டு முருங்கைப் பூவிலிருக்கும் தேனைக் குடிக்கத் தவறாமல் வரும் தேன்சிட்டு வந்தது. முதலில் ஆண் வந்த சில நிமிடங்கள் கழித்து, பெண் வரும். செல்லும்போது இரண்டும் ஒன்றாகப் பறந்துவிடும். தவிட்டுக்குருவிகளின் கீச்சிடும் எச்சரிக்கை ஒலி வல்லூறு அமர்ந்திருந்த கிளையைக் காட்டிக் கொடுத்தது. சில நொடிகளில் அந்த வல்லூறு கீழே பாய்ந்து ஒரு ஓணானை வேட்டையாடிச் சென்றது.
அருகிலிருக்கும் சிறிய குளத்தில் கம்புள்கோழி இணை தன் அழகிய ஆறு குஞ்சுகளுடன் இரை தேடிக்கொண்டிருந்தது. இந்த அற்புதமான தருணத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தேன். நான்கு சின்னான்கள் ஒன்றை ஒன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்தன. எப்போதும் தனியாகச் செல்லும் பாம்புத்தாரா அன்று மேலும் ஒன்பது உறுப்பினர்களுடன் வானில் வட்டமடித்தது.
பொதுவாகச் சில நொடிகள்கூட வீட்டின் அருகே நிற்காத செம்மார்புக் குக்குறுவான் அன்று நீண்ட நேரம் ‘குக்.. குக்.. குக்...’ என்று கத்தியது. பார்க்க முடியாவிட்டாலும் வீட்டின் பின்னிருந்து ஆண் குயிலின் பாட்டு செவிகளை வந்தடைந்தது. இவை அனைத்தையும் வெறும் 15 நிமிடங்களுக்குள்ளாகவே நான் பதிவுசெய்தேன்.
குழந்தைகளுக்குக் கடத்தலாமே!
இப்படி நம் வீட்டைச் சுற்றிப் பல விஷயங்களை இயற்கை நமக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நாம் அவற்றைக் கவனிப்பதில்லை; நம் குழந்தைகளுக்கும் காண்பிப்பதில்லை. பள்ளி விடுமுறைக் காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டுமென ‘சம்மர் கேம்ப்’பில் சேர்த்துவிடுகிறார்கள். இந்நிலையில் இலவசமான, வண்ணமயமான ‘பறவை நோக்குதல்’ (Bird Watching) என்னும் இனிய கலையைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.
காலை, மாலை வேளையில் நம் வீட்டிலிருந்தோ அருகிலிருக்கும் வறண்டு போகாத நீர்நிலையிலோ பறவைகளைப் பார்த்து ரசிக்கலாம். குழந்தைகளுக்கு எத்தனையோ விலையுயர்ந்த பரிசுப் பொருட்களைப் பல பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். அதில் ஒன்றாகக் குழந்தைகளுக்கு இருநோக்கியைப் (8x40, 10x50 பைனாகுலர்) பரிசளிக்கலாம். காணும் புதிய பறவைகளின் பெயர்களைக் கண்டுபிடிக்க களவழிகாட்டிகளான (Field guide) ரிச்சர்ட் கிரிம்மெட், கரோல் & டிம் இன்ஸ்கிப் எழுதிய ‘Birds of the Indian Subcontinent (2nd edition)’ என்ற புத்தகத்தையோ தமிழில் ப. ஜெகநாதன் & ஆசை எழுதிய ‘பறவைகள்: ஓர் அறிமுகக் கையேடு’ என்ற புத்தகத்தையோ வாங்கலாம். ஓவியங்கள்-படங்கள் நிறைந்த இந்தப் புத்தகங்கள் குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிப்பதுடன், நிறைய கற்றுக்கொள்ளவும் உதவும். இது போன்ற சிறு முயற்சிகளே பின்னாளில் இயற்கைக்கும் அவர்களுக்குக்குமான தொடர்பை அறுபடாமல் பாதுகாக்கும்.
இது இயற்கையைப் பாதுகாப்பதன் முதற்படிகளுள் ஒன்று. நம்மில் பலர் அதை இழந்துவிட்ட காரணத்தால்தான் இன்றைக்கு நம் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தெரிந்தாலும் நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாததுபோல் சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறோம்.
கண் – காது ஒருங்கிணைப்பு
பறவை நோக்குதல் மூலம் நம் குழந்தைகளின் கண் – காது ஒருங்கிணைப்புத் திறனும் வளரும். உதாரணத்துக்கு ஒரு காகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, சுற்றுவட்டாரத்தில் கேட்கும் பல பறவைகளின் ஒலிகளை வைத்து, ஒவ்வொன்றும் என்ன பறவை என்று சொல்லும் திறன் இது. இதன் மூலம் கண்களும் காதுகளும் சீராகவும் ஒரே நேரத்திலும் வேலைசெய்து கவனக்குவிப்பை அதிகரிக்கச் செய்யும். பலருக்குப் படிப்பில் கவனம் செலுத்தவும் இது உதவக்கூடும். தொடர்ந்து பறவை நோக்குதலில் ஈடுபடுவதன் மூலம் இத்திறன் வலுப்பெறும்.
நம் வீட்டிலிருந்தே தினசரி குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்குப் பறவைகளைப் பார்த்துக் கணக்கிட்டு ‘eBird’ (www.ebird.org/india) என்னும் இணையதளத்தில் அதைச் சமர்ப்பிக்கலாம். பறவைகளைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு இது பெரிதும் உதவும்.
இயற்கை மிச்சமிருக்க…
கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பறவை ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களைத் தொடர்புகொண்டு குழந்தைகளைக் குதூகலிக்கவைக்கும் பறவை நோக்குதல் குறித்து ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் தரச் சொல்லலாம். இது போன்ற செயல்பாடுகளின் மூலம் நம்மைச் சுற்றி உள்ள பகுதியின் சூழலியல் மாற்றங்களைப் புரிந்துகொண்டு பறவைகளையும் மற்ற உயிர்களையும் பாதுகாக்கும் முயற்சியில் அனைவரும் பங்கெடுக்க முடியும். நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கும் இயற்கையை உயிர்ப்புடன் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள், இதுபோன்ற சிறுசிறு நடவடிக்கைகளில் இருந்தே தொடங்குகின்றன.
பறவைகள் தேடி வர...
பறவைகளை நாம் தேடிச் செல்லாமல், நம்மைத் தேடி சில பறவைகளை வரவழைக்கலாம்.
பறவைகள் வெப்பத்தை எதிர்கொள்வதற்கு வசதியாக மண்சட்டியில் நீர் ஊற்றி வைக்கலாம். இப்போது தமிழகத்தில் அவ்வப்போது மழை எட்டிப் பார்த்தாலும், அடிக்கும் வெயிலுக்குக் குறைவில்லை. பறவைகள் தாகம் தணித்துக்கொள்ளவும் குளிக்கவும் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தும். பிளாஸ்டிக் அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் ஊற்றிவைத்தால் நீர் சூடாகிவிடும். இப்படிக் குளிர்வித்துக்கொள்ள வரும் பறவைகளை ஜன்னல், கதவுக்குப் பின்னால் மறைந்து நின்று நோக்கலாம்.
கட்டுரையாளர், கல்லூரி மாணவர் மற்றும் பறவை ஆர்வலர்
தொடர்புக்கு: enviroganeshwar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT