Published : 01 Jul 2017 10:25 AM
Last Updated : 01 Jul 2017 10:25 AM
ஒரு பண்ணையை வடிவமைக்க சில அடிப்படையான கூறுகள் அவசியம். தொல்காப்பியம் ஒரு திணை நிலத்தின் கூறுகளாக, மூன்று அடிப்படைப் பிரிவுகளைக் கூறுகிறது. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்று பெரும் பிரிவுகளாக அவை விளக்கப்படுகின்றன. ஒரு தற்சார்புப் பண்ணை உருவாவதற்கு, மேற்கூறிய மூன்று அடிப்படைக் கூறுகள் முறையாக அமைக்கப்பட வேண்டும்.
முதலில் ஒரு பண்ணையின் முதற்பொருளான நிலம் பற்றியும், காலம் பற்றியும் தெளிவான புரிதல் வேண்டும். முதற்பொருளைப் பொறுத்தளவில் நமது பண்ணை எந்தத் திணை நிலத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்துகொள்ள வேண்டும். அது குறிஞ்சி நிலமா? முல்லை நிலமா? மருத நிலமா என்ற தெளிவு இருக்க வேண்டும். முதற்பொருளில் முதலாவதான நிலம், பல திணைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பருவகாலம், காற்று, மழை, வெயில், பொழுதுகள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட முதற்பொருளை, ஒரு பெரும் கூறாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
எதைக் கட்டுப்படுத்தலாம்?
அடுத்ததாக கருப்பொருளாகிய மரங்கள், கால்நடைகள், மக்கள் போன்ற காரணிகளை அடுத்த பெரும் கூறுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பண்ணை நிலத்தில் எந்த மாதிரியான மரங்கள், பயிர்கள் வளரும், எந்த மாதிரியான கால்நடைகள் பொருத்தமாக இருக்கும் என்பது பற்றிய அறிவைப் பெற வேண்டும். நேரடியாக உறவாடக் கூடிய கருவிகளாக இருப்பவை, இந்த கருப்பொருட்கள் என்று புரிந்துகொள்ளலாம். இவற்றை நாம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், முதற்பொருளை நாம் பெருமளவு கட்டுப்படுத்த முடியாது. பெய்யும் மழையையும், வீசும் காற்றையும் நாம் மாற்ற முடியாது. ஆனால் பனை வளர்க்க வேண்டுமா? தென்னை வளர்க்க வேண்டுமா? ஆடு வளர்க்க வேண்டுமா? கோழி வளர்க்க வேண்டுமா? மாடு வளர்க்க வேண்டுமா என்பதையெல்லாம் நாம் தீர்மானிக்க முடியும். எனவே, கருப்பொருள் பற்றிய விரிவான அறிவை நாம் பெருக்கிக்கொள்ள வேண்டும். தற்சார்புப் பண்ணையில் கருப்பொருளின் பங்கு மிகவும் முக்கியமானது.
எது ஒழுக்கம்?
அடுத்த அடிப்படைக் கூறாக உரிப்பொருளைப் பார்க்க வேண்டும். நமது செவ்வியல் இலக்கண நூல்கள் உரிப்பொருள் என்பது ஒழுக்கம் என்று விளக்குகின்றன. அதாவது இது விரிவான பொருளில் முற்பொருளும் கருப்பொருளும் எப்படி ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியது. ஒரு குறிப்பிட்ட நிலத்தில், ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பயிர் எப்படித் தனது வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்கிறது என்ற செயல்பாட்டை உரிப்பொருள் எனலாம். ஒரு செயல்பாடு திரும்பத் திரும்பச் செய்யப்படும்போது, அது பழக்கம் ஆகிறது. அந்தப் பழக்கம் மேலும் தொடர்ந்து செய்யப்படும்போது வழக்காக மாற்றம் பெறுகிறது. அந்த வழக்கம் மேலும் தொடரும்போது ஒழுக்கமாக நிலைபெறுகிறது.
செயல்பாடு - பழக்கம் - வழக்கம் - ஒழுக்கம் - பண்பாடு என்ற இந்த வரிசையின் அடிநாதமாக இருப்பது செயல்பாடு என்ற வினை. எனவே, ஒரு பண்ணையில் நடக்கும் அனைத்துச் செயல்பாடுகளும் அதன் உரிப்பொருள்.
(அடுத்த வாரம்: சந்தைப் புரிதல் வேண்டாமா?)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT