Published : 22 Jul 2017 10:47 AM
Last Updated : 22 Jul 2017 10:47 AM
நம்மைச் சுற்றி நிறைய திரையரங்குகள், வாகனப் பழுதுபார்ப்புப் பணிமனைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள் போன்றவை நிறைய இருக்கின்றன. அவற்றுடன் இயற்கையின் வளத்தைப் பிரதிபலிக்கும் நிறையப் பறவைகளும் உள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ‘தெரியுமே’ என்று சொல்லும் பெரும்பாலானோர் காக்கா, குருவி, மைனாவைத் தாண்டுவதில்லை. சிறிது முயற்சி செய்தால் நகரங்களிலேயே நூற்றுக்கணக்கான வகைப் பறவைகளைப் பார்க்க முடியும் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்கிறது ‘பேர்ட்ஸ் ஆஃப் கோயம்புத்தூர்’ எனும் புதிய புத்தகம்.
‘சென்னைப் பறவைகள்’ என்ற ஒரு புத்தகம் பத்து வருடங்களுக்கு முன்பு வந்தது. அதற்குப் பிறகு ஒரு மாவட்டத்தை மையமாகக் கொண்டு வெளியாகும் புத்தகம் இது. கோவை மாவட்டப் பறவைகளைப் பற்றி வெளியாகும் முதல் கையேடு இது. இதில் 321 பறவைகளின் பெயர்கள், தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பெரும் பணி
இந்தப் புத்தக உருவாக்கத்தில் நிறையப் பறவையியலாளர்களின் உழைப்பு உள்ளது என்றபோதிலும், அவர்களுக்குத் தலைமையேற்று வழிகாட்டியவர்கள் தமிழ்நாடு பட்டாம்பூச்சிகள் அமைப்பின் நிறுவனர் பாவேந்தன்; ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில்’ பறவையியல் குறித்துப் படித்த பிரகாஷ், பாலாஜி, கோயம்புத்தூர் இயற்கைக் கழகம், யங் இந்தியா ஆகியோரின் ஆதரவுடன் இந்தப் புத்தகம் வெளியாகியுள்ளது.
புத்தகத்தில் நீர்புலப் பறவைகள், வீட்டுக்கு அருகிலிருக்கும் பறவைகள், வயல்வெளிப் பறவைகள், சோலைக்காட்டுப் பறவைகள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பறவைகள், வறண்ட நிலப் பறவைகள் என்று அனைத்து வகைப் பறவைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பறவைகளின் ஒளிப்படங்கள் தெளிவாகவும் அழகாகவும் அமைந்திருக்கின்றன.
இந்தியாவில் இருக்கும் பறவைகளின் பெயர்களைப் பச்சை நிறத்திலும், வலசைப் பறவைகளின் பெயர்களை நீல நிறத்திலும் கொடுத்திருப்பது, புரிந்துகொள்ளலைச் சுலபமாக்குகிறது. சில பறவைப் பெயர்களை நிற அடையாளப்படுத்துவதில் குறைகளும் உண்டு.
பெயரை ஒலிபெயர்க்கலாமா?
புத்தகத்தின் கடைசிப் பக்கங்கள் நிச்சயம் பயனுள்ளவை. அடிக்கடி கேட்கக்கூடிய கேள்விகள் என்ற தலைப்பில் இருபத்தி ஐந்து பொதுச் சந்தேகங்களுக்கு விரிவான பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பறவைகள் ஏன் வலசை செல்கின்றன, பறவைகளின் கூட்டை ஏன் படம் எடுக்கக் கூடாது, மனிதர்கள் எப்படிப் பறவைகளைப் பாதுகாக்க முடியும், பறவைகளைப் படம் எடுப்பதற்கு எந்த கேமரா சிறந்தது, எங்கிருந்து பறவை பார்க்கத் தொடங்க வேண்டும் என்று நிறைய கேள்விகளுக்குத் தெளிவான பதில் கிடைக்கிறது.
எல்லாப் பறவைகளுக்கும் தமிழ்ப் பெயர்களைக் கொடுத்திருக்கிறார்கள். ‘லெக்ஸ் ஹாக் ஈகிள்’ பறவைக்கு லெக்கே குடுமிப் பருந்து என்றும், ‘மோண்டேகஸ் ஹாரியர்’ பறவைக்கு மொண்டேகு பூனைப் பருந்து என்றும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஏற்கெனவே, வழக்கத்திலிருக்கும் தமிழ்ப் பெயர்கள் அல்லது பொருத்தமான புதுத் தமிழ்ப் பெயர்களைத் தருவதற்குப் பதிலாக, ஆங்கிலத்தை ஒலிபெயர்ப்பது சரியாகத் தோன்றவில்லை.
கோயம்புத்தூரைச் சுற்றி இருக்கும் பறவை நோக்குதலுக்கு வசதியான இருபது இடங்களின் படம், கூகுள் வரைபடம், இடத்தின் தூரம், நுழைவுக் கட்டணம், எந்த மாதம், எந்த நேரம் செல்ல வேண்டும், அங்கு எந்த வகையான பறவைகளைப் பார்க்க முடியும் என்பன போன்ற பயனுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ‘பொன்னியின் செல்வன்’ படித்த பிறகு தஞ்சாவூரைச் சுற்ற வேண்டும் என்று பலருக்குத் தோன்றுவதுபோல, இந்தப் புத்தகத்தைப் படித்தவுடனேயே கோயம்புத்தூரைச் சுற்றி இந்தப் பறவைகளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி.
கட்டுரையாளர், பறவை ஆர்வலர்
தொடர்புக்கு:
lapwing2010@gmail.com
புத்தகத்தைப் பெற:
CII,
யூனிட் எண்: B-3A-1,
இரண்டாவது தளம், எலிசியம் செண்ட்ரல்,
கார்மெல் கார்டன் பள்ளி எதிரில்,
புலியகுளம் சாலை,
கோவை - 641045
தொலைபேசி: 0422 404 4555
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT