Last Updated : 22 Jul, 2017 10:48 AM

 

Published : 22 Jul 2017 10:48 AM
Last Updated : 22 Jul 2017 10:48 AM

அழிவை நோக்கித் தள்ளப்படும் ஆமைகள்!

ஒரு பெண் கடல் ஆமை எந்த கடற்பகுதியில் பிறந்ததோ அதே கடற்பகுதியில்தான் மீண்டும் முட்டையிடும். அதேபோல கடல் ஆமைகளின் ஆண் - பெண் விகிதம், முட்டை அடைகாக்கப்படும் பகுதியின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும். இந்த ஆச்சரியங்களைத் தாண்டி, நம் கடற்பகுதிகளுக்கு வரும் கடல் ஆமைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

கடல்சார் சூழலியல் மிகவும் நல்ல முறையில் செயல்பட, தனது பங்கைச் செலுத்தும் முக்கியமான உயிரினங்களில் ஒன்று ஆமை. சுமார் 10 முதல் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து கடல் ஆமைகள் இந்த உலகில் இருக்கின்றன.

உலகளவில் மொத்தம் இரண்டு குடும்பங்களைச் சார்ந்த ஏழு வகையான கடல் ஆமைகள் உள்ளன. அதாவது, கடினமான மேற்புற ஓடுகளை கொண்ட ஆமைகள், கடினமான மேற்புற ஓடுகள் இல்லாத ஆமைகள் என இரண்டு குடும்பங்கள் உள்ளன. மொத்தமுள்ள ஏழு வகை ஆமைகளில், இந்தியக் கடற்பரப்பில் ஐந்து வகைகள் காணப்படுகின்றன

இவற்றில் பெருந்தலை ஆமை, பேராமை, அழுங்காமை, பங்குனி ஆமை ஆகியவை கடினமான மேற்புற ஓடுகளைக் கொண்டவை. தோனி ஆமைக்குக் கடினமான மேற்புற ஓடு இல்லை. இவை அனைத்தும் இந்தியக் கடற்பரப்பில் காணப்படுகின்றன. அனைத்து வகையான கடல் ஆமைகளும் அழிவின் விளிம்பில் உள்ளதாக இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம் கணித்துள்ளது.

இனப்பெருக்கம்

கடல் ஆமைகள் மாறுபட்ட இனப்பெருக்கப் பண்பைக் கொண்டவை. அவை, முட்டையிடுவதற்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து முட்டையிடும் இடத்தை அடைகின்றன. ஒரு பெண் ஆமை பல ஆண் ஆமைகளுடன் இனச்சேர்க்கை புரிகிறது. ஆண் ஆமைகளின் விந்தை சில மாதங்களுக்கு தன் உடலில் சேமித்து வைக்கும் தன்மையை அவை கொண்டிருக்கின்றன.

முட்டை உருவான பிறகு பெண் ஆமைகள் மணற்பாங்கான கடற்பகுதியில் முட்டையிடுகின்றன. இதில் ஆச்சரியமான அம்சம், ஒரு பெண் ஆமை எந்த கடற்பகுதியில் பிறந்ததோ அதே கடற்பகுதியில்தான் முட்டையிடுகிறது. பங்குனி ஆமைகள், கூட்டமாக ஒரே வேளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முட்டையிடுகின்றன. இதை ‘அரிபடா’ எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு ‘வருகை’ என்று பொருள்.

பெண் ஆமைகள் கடல் நீரிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் துடுப்புகளின் உதவியால் சின்னச் சின்ன குழிகளைத் தோண்டி முட்டையிடுகின்றன. பிறகு அந்தக் குழியை மூடிவிட்டு கடலுக்குத் திரும்பி விடுகின்றன. பொதுவாக இனப்பெருக்க காலத்தில் ஆமைகள் 50-லிருந்து 300 முட்டைகள்வரை இடும் வல்லமையுடையவை. முட்டையிட்ட 60 நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியேறும்.

கடல் ஆமைகளின் ஆண் - பெண் விகிதம், வெப்பநிலையைப் பொறுத்தே அமைவது மற்றொரு ஆச்சரியம். முட்டையிட்ட மணல் பகுதியின் வெப்பநிலை 85 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக இருந்தால், அனைத்து முட்டைகளும் பெண் குஞ்சுகளாக இருக்கும். 85 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் குறைவாக இருந்தால், அனைத்து முட்டைகளும் ஆண் குஞ்சுகளாக இருக்கும். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம், ஒரு பெண் ஆமை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் முட்டையிடும்.

அச்சுறுத்தல்கள்

உலகமயமாக்கல், தொழில்மயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் கடற்கரைப் பகுதிகளில் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஏற்பட்டு ஆமைகள் முட்டையிடும் பகுதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன.

கடற்கரை முழுவதுமிருக்கும் உல்லாச விடுதிகள், உணவகங்களின் பிரகாச விளக்குகளால் முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் போவதற்கு பதிலாக, நிலப்பரப்பை நோக்கித் திரும்பி உயிர்விடுகின்றன. தவிர, ஆமைகளும் அவற்றின் முட்டைகளும் உணவுக்காக வேட்டையாடப்படுகின்றன. இதுவே ஆமையினங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.

ஆமைகளுக்கு கரையில் இருந்தால் ஒரு வகைப் பிரச்சினை என்றால், கடலில் இருந்தால் இன்னொரு வகைப் பிரச்சினை உண்டு. அது, ஆண்டுதோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் மீன்பிடி வலைகளில் சிக்கி உயிர்விடுவதுதான். இழுவை வலை, மடி வலைகள் ஆயிரக்கணக்கான கடல் ஆமைகள் உயிர் இழப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.

ஆமைகள் எண்ணிக்கை குறைவதற்கு, கடல் மாசுபாடு இன்னொரு முக்கியக் காரணம். பேராமை ஒரு தாவர உண்ணி. இதர ஆமைகள் அனைத்தும் ஊனுண்ணிகள். அவை சொரி (ஜெல்லி) மீன்களை விரும்பி உண்ணும். சில நேரம் பிளாஸ்டிக் பைகளை சொரி மீன்கள் என நினைத்து உண்டு, அவை உயிர்விடுகின்றன.

அதேபோல, கடல் ஆமைகள் பல நோய்களால் பாதிக்கப்பட்டும் இறக்கின்றன. குறிப்பாக ‘ஃபிப்ரோபாப்பில்லோமாஸ்’ எனப்படும் ஆமையின் உடலெங்கும் கட்டிகள் தோன்றும் பிரச்சினை மோசமாக உள்ளது. கடல் மாசுபடுவதால்தான் ஆமைகளுக்கு இந்த நோய் வருகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பருவநிலை மாற்றம் - புவி வெப்பமாதல் போன்ற காரணங்களாலும் ஆமையினங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. ஏற்கெனவே கூறியதுபோல, கடல் ஆமைகளின் ஆண் - பெண் விகிதம் வெப்பநிலையைப் பொறுத்தே அமையும். அதனால் புவி வெப்பமாதல் ஆமைகளின் ஆண் - பெண் விகிதத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

எப்படிப் பாதுகாப்பது?

வேறு எவரையும்விட ஆமைகளுடன் அதிக நேரம் செலவிடுபவர்கள் மீனவர்கள்தான். எனவே, ஆமைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அவர்களிடமிருந்தே தொடங்க வேண்டும்.

அவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி வலைகளில், ‘டர்ட்டில் எக்ஸ்க்ளூசிவ் டிவைஸ்’ (சுருக்கமாக டெட்), எனும் கருவியைப் பொருத்திக்கொள்ள வலியுறுத்த வேண்டும். இதனால், தவறுதலாக வலைகளில் சிக்கும் ஆமைகள், தானாகவே வெளியேற முடியும்.

எல்லா உயிரினத்துக்கும் இனப்பெருக்கம் செய்து முட்டையிடும் இடங்கள் மிகவும் முக்கியம். அந்த உயிரினங்களைப் பாதுகாக்க, அவற்றின் இனப்பெருக்கப் பகுதிகளையும் பாதுகாப்பது மிக முக்கியம். ஆமைகளைப் பொறுத்தவரை, அவை முட்டையிடும் கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடற்கரையில் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். தவிர, கடல்சார் சட்டங்கள், விதிகள் ஆகியவற்றைக் கடுமையாக்க வேண்டும்.

கட்டுரையாளர்,

கடல்சார் சூழலியல் ஆய்வாளர்

தொடர்புக்கு: mparulguru@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x