Published : 08 Jul 2017 10:24 AM
Last Updated : 08 Jul 2017 10:24 AM

யானைகளையும் விட்டு வைக்காத வறட்சி

காடுகளையே வீடுகளாக்கி வசிக்கும் மலைவாழ் மக்கள், காடுகளையொட்டி விவசாயம் செய்யும் உழவர்கள், காடுகளின் இயற்கைச் சூழலை அழித்து அமைக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் என யாரைக் கேட்டாலும் அவர்கள் அஞ்சுகிற காட்டு விலங்கு யானை என்றே சொல்வார்கள். அதற்குக் காரணம், கடந்த கால் நூற்றாண்டாக அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்கள். யானைக் கூட்டம் வந்தால் அழிவை ஏற்படுத்தி செல்வதாகவும், வீடுகளையும், வீட்டுப்பொருட்களையும் மிதித்து உடைத்துச் சென்றுவிடுவதாகவும், விளையும் பயிர்களைத் தின்றும், காலில் மிதித்தும் விடுவதாகவும் ஆதங்கப்படுகின்றனர்.

உண்மையில் யானையின் உருவம் பிரம்மாண்டமாக இருந்தாலும், மனிதர்களுக்கு அதுவாகவே வந்து அச்சத்தை ஏற்படுத்துவதில்லை. மனிதர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விலங்காக தவறான பிம்பத்துடன் யானை சித்திரிக்கப்படுகிறது.

ஆதி காலம் முதல்

பண்டைய இந்தியாவில் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளில் பசுவுக்கும் குதிரைக்கும் அடுத்தப்படியாக யானை இருந்தது. மனித வேலைகளுக்குப் பல வகைகளில் யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதியில் கண்டுக்கப்பட்ட முத்திரைகளில் யானைகள் போற்றப்பட்டிருப்பதை காணலாம்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் காடுகளின் உள்ளே செல்வதற்கு வாகனமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. நன்கு வளர்ந்த ஒரு யானை, 540 கிலோ எடை வரை சுமக்கக்கூடியது. அதனால், காடுகளில் மரங்களை வெட்டவும், சுமக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஒருபுறம் வேட்டையாடுதலால் யானைகளின் எண்ணிக்கை குறைந்தாலும் மற்றொரு புறம் மனிதர்கள், கால்நடைகள் காடுகளில் புகுந்தது, காடுகள் அருகே பயிரிடப்படும் விளைநிலங்களில் அதிகப்படியான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாலும் யானைகளுக்கு பலவகை நோய்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதனால், நோய் தாக்குதலாலும் யானைகள் இறப்பு அதிகரித்துள்ளது.

மெலிந்து வரும் யானைகள்

தென்னிந்தியாவில் காட்டு யானைகளின் எண்ணிக்கை சுமார் 9,950 முதல் 15,080 வரை இருக்கின்றன. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

கடந்த காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எல்லா காலத்திலும் மழைப்பொழிவு இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக அந்நிலை முற்றிலும் மாறிவிட்டது. வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழைகளை நம்பிதான் இருக்க வேண்டிய உள்ளது. இடைப்பட்ட காலத்தில் மழை பெய்வதில்லை. தற்போது பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டும் ஏமாற்றி வருவதால் காடுகளில் வறட்சி தொடர்கிறது. அதனால், யானைகள் ஊருக்குள் புகுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் யானைகளில் பல தற்போது எலும்பும் தோலுமாக உடல் மெலிந்த நிலையில் பரிதாபமாக காணப்படுகின்றன. காடுகளுக்கு உள்ளே திரியும் யானைகளும் மெலிந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

மெலிவதற்குக் காரணம் என்ன?

"தற்போது நிலவும் அதிக வெப்பமான சூழல் யானைகளுக்கு ஒத்து போகவில்லை. அதனால் யானைகள் உடல் மெலிந்து காணப்படவில்லை. எத்தனை வறட்சி ஏற்பட்டாலும், உணவு இல்லாத சூழல் யானைகளுக்கு ஏற்படவே செய்யாது. அதன் வாழ்நாளில் எத்தனையோ வறட்சிகளைக் கடந்திருக்கும். அதற்கு தகுந்தாற்போல தன்னுடைய இடம்பெயரும் பகுதியையும், பருவத்துக்குத் தகுந்தபடி உணவுப் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை யானைகள்.

வறட்சிக்கு தகுந்தபடி ஒரு தமிழக யானை சாதாரணமாக 600 முதல் 650 சதுர கி.மீ. தொலைவுவரை இடம்பெயரும். யானைகள் 80 சதவீதம் புற்களைத்தான் உட்கொள்ளும். புல்லின் வேர்ப்பகுதியில் மண் மண்டி காணப்படும். மண்ணோடு புல்லை சாப்பிட்டால் யானைகளின் பற்கள் தேய்மானம் அடையும்.

யானைகளுக்கு பல்தான் உயிர்நாடி. பல் போய்விட்டால், அதன் வாழ்நாள் முடிந்துவிடும். அதனால், யானைகள் மழை நேரத்தில் புல்லைப் பறித்து வேரை அப்புறப்படுத்திவிட்டு புல்லை மட்டும் சாப்பிடும். வெயில் காலத்தில் புற்கள் காய்ந்து சாப்பிடத் தகுதியான சத்தான உணவாக இருக்காது. அதனால், மேலே உள்ள புற்களை அப்புறப்படுத்தி விட்டு மண்ணையும் உதறிவிட்டு வேரை மட்டும் தனியாகப் பிரித்து சாப்பிடும். யானைகளுக்கு சத்துணவு முக்கியம்.

வெயில் காலத்தில் போதுமான உணவு கிடைக்காது. இந்தக் காலத்தில் மரப்பட்டை, இலைகளை யானைகள் சாப்பிட ஆரம்பிக்கும். இயற்கையாகவே கோடை காலத்தில் யானை கள் எலும்பு தெரியும்படி உடல் மெலிந்து காணப்படும். இது பெரும்பாலும் கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உடல் மாற்றம்தான்”, என்கிறார் யானை ஆராய்ச்சியாளரும், கால்நடை மருத்துவருமான சி. அறிவழகன்.

வெளியேறும் யானைகள்

என்றைக்கு யானைகளின் இயற்கைச் சூழலை மனிதர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து ஆரம்பித்தது பிரச்சினை. காடழிப்பால் மழைப் பொய்த்து சிற்றோடைகள், முதல் அருவிகள்வரை தண்ணீர் இன்றி வறண்டன. யானைகளுடைய வாழிடங்களில் தண்ணீர், உணவுக்குக் கடும் பஞ்சம் ஏற்பட்டது. சுற்றுலா என்ற போர்வையில் காடுகளையும், யானைகளின் வழித்தடத்தையும் மனிதர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.

அதனால், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த யானைகள் தங்கள் வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்து உணவு, தண்ணீரைத் தேடி ஊருக்குள் வர ஆரம்பித்துள்ளன. அதனுடைய வீட்டை நாம் ஆக்கிரமித்ததால், இன்று அவை ஊருக்குள் வருகின்றன. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் யானைகள், காட்டெருதுகள், காட்டுப்பன்றிகள் போன்றவை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பேருந்து நிலையங்களுக்கே வர ஆரம்பித்துள்ளன.

ஆலோசனை

“யானைகள் அதிக அளவில் காட்டை விட்டு வெளியேறி வருகின்றன. அவை மனிதர்களால் கொல்லப்படுவதும், வாகனங்களில் அடிபட்டும், நோய்கள் தாக்கியும் இறக்கின்றன. மனிதனின் செயல்பாடுகளால் 90 சதவீதம் புல்வெளிப் பகுதிகள் அழிந்துவிட்டன. மனிதன், விலங்குகளுக்கு இடையேயான முரண்பாடுகள் அதிகரித்துவிட்டன. அதனால், காடுகளையும், அதில் வாழும் உயிரினங்களையும் பாதுகாக்க மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் காடுகள் நிறைந்த பகுதிகள் குறித்தும், யானைகள் வசிக்கும் பகுதிகள் குறித்தும் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்திவருகிறோம்.

இதில் சூழலியல் சார்ந்த இயற்கை ஆர்வலர்களை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டு காடுகளையும் அதில் வசிக்கும் விலங்குகளையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம். கோவையில் முதல் கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் கொடைக்கானலில் நடந்துள்ளது”, என்கிறார் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்க செயற்குழு உறுப்பினர் எஸ்.அண்ணாத்துரை.

இயற்கை ஆர்வலர்களும் அரசும் இணைந்து யானைகளை உரிய முறையில் பாதுகாக்க இனியாவது வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டியதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x