Published : 01 Jul 2017 10:17 AM
Last Updated : 01 Jul 2017 10:17 AM
பஞ்ச கால உணவு, மீனவர் உணவைப் பற்றிப் பேசுகையில் ஆமை முட்டை பற்றியும் பேச வேண்டும். கோடைக் காலத்தில் அலைவாய்க்கரை மணல் தேரிகளில் ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளைச் சேகரித்து வீட்டுக்குக் கொண்டுவருவோம். கோழி முட்டை போலன்றி ஆமை முட்டை சவ்வு போன்ற உறையால் அமைந்தது. முழுமையாக வேகவைத்த முட்டை சுவைமிகுந்த புரத உணவு. பச்சையாகவும் குடிக்கலாம்.
சுறா முட்டை கிடைக்கும் காலத்தில் முட்டை தோசை செய்வார்கள். கெளிறு மீனின் இனப்பெருக்கக் காலத்தில் பிடிபடும் முரட்டுப் பெண் மீன்களின் வயிற்றுக்குள் பெரிய பச்சைத் திராட்சை அளவில் உருண்டையாகக் குலையும் கொத்துமாக முட்டை கிடைக்கும். வேகவைத்த கெளிறுமீன் முட்டையின் மணமும் சுவையும் தனித்துவமானது.
குடலுக்கும் ஏக்கம்
சுறா மீன்கள் கிடைக்கும் காலம், பெரும்பாலும் உணவுப் பஞ்சம் மிகுந்த நேரம்தான். சுறாமீன்களை ஏலமிட்டு வியாபாரிகள் கொள்முதல் செய்ததும், கீலம்வெட்டிகள் அதை விற்பனைக்கு வசதியாகத் துண்டங்களாக்குவார்கள். அதற்கு முன் தூவி (துடுப்பு- இதற்குத் தனி விலை), செவுள்-தலை, குடல் பகுதிகளை நீக்கிக் கழுவிச் சுத்தம் செய்வார்கள். இந்த மீனின் குடலை எனக்கு, உனக்கு என்று கைம்பெண்களும் பஞ்சத்தில் அடிபட்டவர்களும் கீலம்வெட்டியிடம் குறித்துப் போட்டுக் காத்திருப்பார்கள்.
குடலை வெறுமனே உப்பிட்டு வேகவைத்து உண்டு பசி தீர்ப்போரும் உண்டு. மசாலா பொருள் வாங்கக்கூடக் காசிருக்காது. கிழங்கோ, அரிசியோ வாங்கவும் வசதி இராது. சுறாவின் குடல் வயிற்றில் போனால், அத்தனை எளிதாகச் செரிக்காது. ஒரு பருவத்தில் இதனால் ஏராளமான பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதும் உண்டு.
முட்டையிருக்கா, முட்டே
அன்று வீடுதோறும் நாட்டுக் கோழிகள் வளர்த்தார்கள். சேவலென்றால் மாதா விண்ணேகிய ஆகஸ்ட் 15-க்கோ ஈஸ்டருக்கோ கிறிஸ்துமஸுக்கோ கொண்டாட்ட உணவாகும். பெட்டையென்றால் முட்டை ஒரு உப வருமானம். முட்டைகளைச் சேர்த்துக் குஞ்சு பொரிக்க வைத்துக் கோழிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவது ஓர் உபதொழில். தாய்க்கோழி கொத்தி விரட்டும் பருவத்தை எட்டிய விடலைக் குஞ்சுகளை விற்பது தனி வருமானம். நாள்தோறும் சமைக்கும் அரிசியிலிருந்து கைப்பிடி அரிசியைச் சேமிக்கும் அம்மா. கை காய்ந்துபோகிற நேரத்துக்கு அந்தச் சேமிப்பு கைகொடுக்கும்.
நாட்டு மருத்துவம், வசதியானவர்களின் உணவு என்பதாக நாட்டுக்கோழி முட்டைக்குப் பல வகைகளில் தேவையுண்டு. ‘முட்டையிருக்கா, முட்டே’ என்று வாரத்துக்கு ஒருமுறையாவது ஒரு நாடார் தாத்தாவோ பாட்டியோ தெருக்களில் வருவதைப் பார்க்கலாம். அல்லது பதனீர், கைக்குத்தல் அரிசி, பனங்கிழங்கு, பனம்பழம் விற்க வருபவர்கள் திரும்பிச் செல்லும்போது நாட்டு முட்டையைக் கொள்முதல் செய்து போவார்கள். நான்கைந்து முட்டை விற்றால் பிள்ளைகளின் பகல் பசியைப் போக்க மரவள்ளிக் கிழங்குக்கோ இராப்பட்டினியைத் தவிர்க்க ஆழாக்கு அரிசிக் கஞ்சிக்கோ ஆயிற்று. சில ஊர்களில் ஆடு, பன்றி வளர்ப்பதும் உண்டு.
மால்முடியும் வேலை
பஞ்ச காலத்தில் வீடுகளில் பின்கட்டு வளைவு, வீடுகளுக்கு இடையேயுள்ள சந்துகள், வீட்டருகேயுள்ள தென்னஞ்சோலைகளில் பெண்கள் கூட்டமாய் உட்கார்ந்து பகல் பொழுதைக் கழிப்பதைப் பார்க்கலாம். பசித்த வயிற்றை ஆற்ற மும்முரமான மால்முடியும் (மீன்வலை பின்னும் வேலை) கும்மிப்பாட்டுகளுமே துணை. சந்துகளில் பெண்கள் பாடும் இந்தச் சிந்துகள் தெருவெங்கும் எதிரொலிக்கும். பசியையும் பகலையும் பாட்டால் துரத்திவிரட்டுவார்கள் பெண்கள்.
கச்சாவலை, சாளாவலை, வழிவலை, இறால்வலை, மடிவலை வகைகளுக்கு எல்லாம் அந்தக் காலத்தில் பருத்தி நூலால் வலை பின்னுவார்கள். குடிகளில் பெண்கள்தான் ஒட்டுமொத்த வலைகளையும் பின்னுவார்கள். வலையைச் சிறுசிறு துண்டுகளாகத் தயாரிப்பார்கள். அதற்கு மால் என்று பெயர். மூங்கில் துண்டுகளை வலைகளுக்கான மாறுபட்ட கண்ணிகளுக்குப் ‘பலகை’ அளவாகச் செதுக்கிக்கொள்வார்கள். வலை பின்னும் ஊசிகூட மூங்கில்தான். கண்ணிகள் நீள நீள, மால் முடிப்பவர்கள் பின்னால் நகர்ந்துகொண்டிருப்பார்கள். நைலான் இழைகள் வந்த பிறகே இயந்திரவலை பின்னுதல் அறிமுகமானது. வலை பின்னுதல் என்னும் நெய்தல் குடிசைத் தொழில் ஒழிந்துபோனது.
கிடுக்கிப்பிடி கடன் சுறா
மால்வாங்கும் வலைக்கெட்டி / மடிக்கெட்டிகள் பஞ்ச காலத்தையே கொள்முதலுக்குத் தேர்ந்தெடுப்பார்கள். இரு தரப்புக்கும் இது நன்மை தரும். லாபகரமாகக் கொள்முதல் செய்யலாம். விற்பவர்கள் பஞ்சத்திலிருந்து ஓரளவு நிவாரணம் பெறலாம். மருத நிலத்தில் பஞ்சமும் வறுமையும் நில அடிமைகளை உருவாக்கின. நெய்தல் நிலத்தில் மீன் வியாபாரிகளும் மடிவலை முதலாளிகளும் பஞ்ச நிவாரணத்துக்குப் பணத்தைக் கடனாகக் கொடுப்பார்கள். அதற்கு வட்டி இல்லை. மீன் செழித்த காலத்தில் அந்தக் கடனை அடைத்துவிடலாம் என்றால், கொடுத்தவன் ஏற்கமாட்டான். ‘பஞ்ச காலத்தில் அல்லவா பணம் வாங்கினாய்? அடுத்த பஞ்ச காலத்தில் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்’ என்பான்.
பணம் கொடுத்தவன் வியாபாரி என்றால், அவன் வைத்த விலைக்கு மீனவன் தன் அன்றாட அறுவடையைக் கொடுத்தாக வேண்டும். மடிவலை முதலாளி என்றால், கடன் பெற்றவன் அவனது மடிவலை / கரைமடிவலையில்தான் சேவகம் செய்ய வேண்டும். புதிதாக வலை, கட்டுமரம் வாங்கிக்கொள்வதற்கும் வியாபாரிகளுடைய நிபந்தனையின் பேரில் வட்டியில்லாக் கடன் கொடுப்பார்கள். ஒரு கடலோடி வாழ்நாளில் மீண்டுவர முடியாத கிடுக்கிப்பிடி, இந்தக் கடன் சுறா.
‘மச்சம் பிடித்தவனுக்கு மிச்சம் இல்லை’ என்னும் பழமொழி பண்பாட்டுரீதியாகப் பொருள் மிக்கது. தொழில்நுட்பங்கள் வந்தன, மீன் அறுவடை பெருகியது, மீன்வளம் வளர்ந்தது, மீனவனுக்குத்தான் வளர்ச்சி எட்டாக் கனியாகிவிட்டது.
(அடுத்த வாரம்: ஜி.பி.எஸ். பிதாமகன் யார்?)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT