Published : 29 Jul 2017 12:04 PM
Last Updated : 29 Jul 2017 12:04 PM

கடலம்மா பேசுறங் கண்ணு 13: காலத்தை வென்ற கட்டுமரம்

ட்டுமரம் என்னும் பாரம்பரிய மரக்கலம், தமிழ்நாட்டின் மீன்பிடி மண்டலங்களுக்குத் தக்கவாறு பெற்றுள்ள வடிவ மாற்றங்கள் அபாரமானவை. அரபிக் கடலின் சீற்றம் மிகுந்த கடற்பரப்பை எதிர்கொள்ள ஒடுகலான வடிவம்; முத்துக்குளித்துறையின் தென்பகுதியில் ஆழிக்கடலைச் சமாளிக்க பரந்த- கனமான வடிவம்; சோழமண்டலக் கடற்கரையின் (வட தமிழ்நாடு) மாரியா வீச்சைச் சமாளிக்க அணியம் வளைந்து மேல்நோக்கிக் கூம்பிய ‘ஆந்திரா வடிவம்’.

இலக்கிய விமர்சகர் வேதசகாயகுமார் குறிப்பிடுவதுபோல, ‘இயற்கையின் சக்தியைத் தனதாக வரித்துக்கொள்ளும் பழங்குடி அறிவின் அற்புதமான படைப்பு கட்டுமரம்; எளிமைதான் அதன் பலம்’.

ஆதி மனிதர்கள் உருவாக்கிய தெப்பங்களின் மேம்பட்ட வடிவமே கட்டுமரம். ஒற்றைமர வள்ளம் (Dug out canoe), கெட்டு வள்ளம், கேரள சுண்டன் வள்ளம் (Snake boat), ஆந்திரா மசுலா படகு (Masula boat), டோங்கி, காயல், கழிவெளி, கால்வாய்களில் புழங்கும் கடத்துப் படகு (ferry boat), சரக்குப் படகு (cargo vessel) என்பவையெல்லாம் கட்டுமரத்தின் பரிணாம எழுச்சிதான்.

இழை அறாத மரபு

இலங்கைக் கழிவெளிகளில் மீன்பிடிப்பதற்குப் பெண்கள் இன்றும் ஆதிமனிதர்கள் உருவாக்கிய தெப்ப வடிவத்தைப் பயன்படுத்துகின்றனர். குடும்பமாய்ச் சேர்ந்து மீன்பிடிக்க கிழக்காசியப் பகுதிகளில் கூடாரப் படகுகளும் வழக்கத்தில் உள்ளன. மேற்கே மடகாஸ்கர் முதல் கிழக்கே இந்தோனேசியாவரை பரந்துபட்ட பயன்பாட்டில் இருக்கும் ‘ஒரூ’ (out trigger canoe), இந்தியாவில் மட்டும் இல்லாமல் போனது வியப்புதான்.

லம்பாடி வெளிப்பொருத்து இயந்திரப் படகுகளில் ஒரு கழையைப் பக்கவாட்டில் நீட்டமாகவிட்டு, அதன் வெளி விளிம்பில் கற்களைக் கட்டித் தொங்கவிட்டு, படகின் சமநிலையைப் பராமரிக்கும் முறையைத் தொண்டிக் கடற்கரையில்தான் முதன்முதலில் பார்த்தேன். ‘ஒரூ’வின் தத்துவத்தை மிக எளிமையாகச் செயல்படுத்தும் உத்தி இது. இரண்டு படகுகள் இயந்திர உந்திகளின் உதவியின்றிப் பாய்விரித்து இழுவைமடி இயக்கும் முறையையும் தொண்டியில்தான் முதன்முதலில் கண்ணுற்றேன்.

கொல்லணியில் ஓடாவி

ஒரு பாரம்பரியக் கடலோடி கிராமத்தில் புதிதாய் ஒரு கட்டுமரத்தை, படகை உருவாக்குவது உணர்ச்சிமயமான நிகழ்வு. நெய்தல் குடிமகனுக்குச் சமூகத்தில் அடையாளத்தைத் தருவது மரக்கலம்.

கட்டுமரம் சேர்வை செய்யும் ‘ஓடாவி’க்கும், மடிவலைகளை வடிவமைத்துத் தரும் ‘மடிக்கெட்டி’களுக்கும் நெய்தல் சமூகத்தில் தனி மரியாதை. கட்டுமரத்துக்கான மரங்களைத் தெரிவுசெய்வதற்குக் காடுகளை அடுத்த சில்ல மரத் தோட்டங்களுக்கு (அல்பீசியா மரம்) ஓடாவியை அழைத்துப்போவார்கள். நெடுகி உயர்ந்து நிற்கும் மரங்களைப் பார்வையிலேயே மதிப்பிட்டுச் சேர்வையாகும் தடிகளைத் தெரிவுசெய்யத் தனிப்புலமை வேண்டும். பச்சை மரங்களை லாரிகளில் ஏற்றி ஊரில் இறக்குவார்கள். பட்டை என்கிற புறத்தோலைச் சீவி நீக்கியபின், மரங்களைச் சேர்த்துக்கட்டிக் கடலில் தெப்பமிடுவார்கள்.

உப்புநீரின் தாக்கத்தால் அல்பீசியா மரங்கள் பால் உமிழ்ந்து லேசாவதற்கு இரண்டு மூன்று வாரங்கள் பிடிக்கும். அப்போதெல்லாம் தெப்பத்தைத் தொட்டுவிட்டுக் கரை திரும்பும் நீச்சல் போட்டியைச் சிறுவர்கள் எங்களுக்குள் நடத்துவோம். பருவெட்டு, சிறுசேவை (சேர்வை), தெப்பமிடல், கடியல் (வாரிக்கல்) இணைத்தல், மிதப்புச் சோதனை, மந்திரித்தல், (கடலில்) மரம் இறக்குதல் என்பதாக ஒவ்வொரு கட்டத்துக்கும் தனித்தனிச் சடங்குகள் உள்ளன. கட்டுமர உருவாக்கத்தில் பங்களிப்புச் செய்கிற ஒவ்வொருவருக்கும் மரியாதை செய்யப்படுகிறது.

நின்று, நிதானித்து, வியூகம் வகுத்து, சேல் செம்மை பார்த்து, ஓடாவி கட்டுமரத்தைச் செதுக்கி உருவாக்கும் அழகைக் கண்டு ரசிக்கக் கொல்லணியில் மீனவர்கள் கூடி நிற்பார்கள்.

கட்டமரன்

வில்லியம் டேம்பியர் என்னும் ஆங்கிலேய சாகசப் பயணி கெட்டுமரம் என்னும் சொல்லைக் கட்டமரன் (Catamaran) என்று ஆங்கிலமயமாக்கினார். இது நிகழ்ந்தது பதினேழாம் நூற்றாண்டில். அடுத்த நூற்றாண்டில் பாலினேசியத் தீவுகளுக்குப் போன ஆங்கிலேயப் பயணிகள் இணையடித் துடுப்புப் படகுகளுக்கும் (Double hulled paddle boats) இதே பெயரைச் சூட்டினர். ஆனால், ஐந்தாம் நூற்றாண்டிலேயே இணையடிப் படகுகளை வடிவமைத்திருந்தவன் ஒரு தமிழன்!

கட்டுமரத்தின் எளிமையும் நிலைப்புத்தன்மையும் வேகமும் அமெரிக்கக் கட்டுமானப் பொறியாளர் நத்தானியேல் ஹெர்ஷாவைக் கவர்ந்தன. விளைவு, நீர்ச்சறுக்கு விளையாட்டுக்கெனத் தனித்துவமாகக் கட்டுமரம் வடிவமைக்கப்பட்டது.

கண்ணாடியிழை திணிப்பு

1980-களில் பெல்ஜியம் பாதிரியார் பியர் ஜிலே- ஜெரெமி ஹெர்க்லாட்ஸ் குழுவானது முட்டத்தில் (கன்னியாகுமரி) மணல்வெளிக் கடற்கரையில் பயன்படுத்த ஏதுவாக, கட்டுமரத்துக்கு மாற்றான கண்ணாடியிழைப் படகுகளை உருவாக்க முயன்று தோற்றுப் போனது. அந்தத் திட்டத்தின் பெயர் ‘பொருந்திய தொழில்நுட்பம்’. கட்டுமரத்துக்குப் பதிலியாக, அதைவிட எளிமையான மரக்கலத்தை எவராலும் உருவாக்க முடியவில்லை. பாரம்பரியக் கட்டுமரத்தின் பலமே எளிமைதான். ஆனால், 2004 ஆழிப்பேரலைக்குப் பிறகு கண்ணாடியிழைப் படகுகள் வலிந்து திணிக்கப்பட்டன.

கட்டுமரத்தின் வரலாறு என்பது, அதை நம்பி வாழும் பாரம்பரியக் கடலோடிகளின் வரலாறுதான். மாற்றுத் தொழில்நுட்பம் என்னும் பெயரில் அவர்கள்மீது திணிக்கப்படும் தோல்விகளின் வரலாறும்கூட.

(அடுத்த வாரம்: படுவோட்டு மரம்)
கட்டுரையாளர், பேராசிரியர்
மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x