Published : 22 Apr 2017 10:07 AM
Last Updated : 22 Apr 2017 10:07 AM
உணவுப் பொருட்களில் தானியங்கள், பயறு வகைகளுக்கு அடுத்தபடியாக முக்கியமானதாகக் கருதப்படுபவை கிழங்கு வகைகள். உலகக் கிழங்கு உற்பத்தியில் ஆறு சதவீதம் இந்தியாவில் விளைகிறது. குறிப்பாக அந்தமான் நிகோபார் தீவுகளில் கிழங்கு வகைகளும், ஏராய்டு எனப்படும் வேர்களும் பன்முகத்தன்மையோடு பரவிக் காணப்படுவதால், இப்பகுதி இந்தோ-மலாய் பல்லுயிர் மண்டலத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.
அந்தமானில் விளையும் கிழங்கு வகைகளின் மகுடமான ‘நிகோபார் கிழங்குகள்’ வெளியுலகில் அதிகம் அறியப்படாமல் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டுவரும் பெருங்கிழங்கு (டயாஸ்கோரியா) வகையைச் சேர்ந்தவை. இவற்றின் வடிவம், நிறம், மணம், இலை நிறத்தின் அடிப்படையில் பழங்குடியினர் இவற்றை அச்சின், டோம்ரிட், போல்ட்டா, பால்ட்டு, திரோஸ், கனியா, தக்னியா, தக்காவு என ஏழு வகைகளாக அடையாளம் காண்கின்றனர்.
பரம்பரைப் பாதுகாப்பு
நிகோபாரிகள் அனைவரும் இவற்றைப் பயன்படுத்தினாலும் ஒவ்வொரு டுகேட்டும் (கூட்டுக் குடும்பம்) முதன்மையாக ஒன்றிரண்டு ரகங்களைப் பரம்பரையாகப் பாதுகாத்துவருகின்றனர். இது அதிக மாவுச்சத்தும் நுண்ணூட்டச் சத்தையும் கொண்டுள்ளதால் சிறந்த குழந்தை உணவாகும். இந்தக் கிழங்கு வகைகள் தீவுகளில் நிலவும் தட்பவெப்ப நிலையில் மானாவாரியாகவே வளர்ந்து நல்ல பலனைத் தருகின்றன.
இத்தீவுகளில் நல்ல வடிகாலும் குறைந்த அமிலத்தன்மையும் உடைய மண்ணில் 45 செ.மீ. ஆழம், அகலம், உயரமுடைய குழிகள் பறித்துச் சாம்பல், களிமண்ணில் தோய்க்கப்பட்ட பெருங்கிழங்கு அல்லது கருணைக்கிழங்கு வகைகள் கிழங்குத் துண்டுகள் மூலம் மானாவாரியாகப் பயிரிடப்படுகின்றன.
ஆனால் நிகோபார் தீவுகளில் வாழும் பழங்குடியினர் இயற்கையாக வளரும் கிழங்குகளை அறுவடை செய்த பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட கிழங்குத் துண்டுகளைத் தாய்த் தாவரத்தை விட்டு சற்றுத் தொலைவில் ஏப்ரல்-மே மாதங்களில் நடுகின்றனர். முளைப்புத்திறனை அதிகரிக்கத் தென்னை, மற்ற இலைகள் மூலம் மூடாக்கு செய்கின்றனர். தமிழக, கேரள மாநிலங்களில் இரும்பொறை மண்ணில் இவ்வகையைச் சேர்ந்த கோ-1, பஞ்சமுகி பல்லவி, ரூபா, கீர்த்தி ரகங்கள் நல்ல விளைச்சலைத் தருகின்றன.
விளைச்சல் அதிகரிப்பு அவசியம்
சேனைக்கிழங்கு அந்தமானில் தனியாகவும் தென்னை, பாக்கு மரங்களுக்கு இடையிலும் ஏப்ரல்-மே மாதத்தில் கிழங்குத் துண்டுகள் மூலம் பயிரிடப்படுகிறது. நல்ல விளைச்சல் தரும் கஜேந்திரா, பத்மா ரகங்களே இதில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. நிகோபாரில் உள்நாட்டு சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரகங்கள் ஒவ்வொரு குடியிருப்பிலும் மூங்கில் பெட்டிகளில் பாதுகாக்கப்படும் மிகச் சிறந்த உணவாகும். இவை கூன்வண்டுகளால் பாதிக்கப்படுவதில்லை.
இவற்றைத் தவிர அனைத்து மக்களும் பயன்படுத்தும் சிறு கிழங்கு (கொலகேசியா) வகைகள் பெரும்பாலும் இயற்கை முறையில் வளர்க்கப்படுகின்றன. சோம்பென் இன மக்கள் பண்டானஸ் மற்றும் பிற உணவுப் பொருட்களைச் சிறுகிழங்கு இலைகளில் சுற்றி வேக வைத்து உண்கிறார்கள். உகந்த வளர்வதற்கு சூழல் நிலவுவதால் இக்கிழங்குகளின் பன்முகத்தன்மையின் உச்சத்தை இத்தீவுகளில் காணலாம்.
இத்தீவுகளின் கிழங்கு உற்பத்தியில் இலைமட்கு, அங்ககப் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இக்கிழங்கு வகைகள் பருவநிலை மாறுதலுக்கு எதிராக இயற்கையால் காப்பீடு செய்யப்பட்ட உணவுப்பொருட்கள். எனவே, நாகரிகம் மாறும்போது மதிப்புக்கூட்டுத் தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படுவதால் அடுத்த பத்து ஆண்டுகளில் நான்கு லட்சம் டன் கிழங்குகள் இந்தியாவுக்குத் தேவைப்படும். அதனால், இவற்றின் உற்பத்தியை அதிகரிப்பது பெரிதும் பயனளிக்கும்.
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சிமன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT