Published : 01 Nov 2013 11:15 AM
Last Updated : 01 Nov 2013 11:15 AM
உலகிலேயே முதல்முறையாக மத்தியப் பிரதேசம் விந்திய மலைத் தொடரின் பன்னா வனத்தில் முற்றிலுமாக அழிந்துப்போன புலிகள் இனத்தை மீண்டும் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர் விஞ்ஞானிகள் மற்றும் வன அதிகாரிகள். இந்த சாதனைக்கு சொந்தக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒரு தமிழர் என்பது கூடுதல் பெருமை.
கடந்த நூற்றாண்டில் உலகில் சுமார் ஒரு லட்சம் புலிகள் இருந்தன. அதில் இந்தியாவில் இருந்தவை சுமார் 60 ஆயிரம். இன்று உலகில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 3500-ஐ தாண்டாது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 1,706 மட்டுமே.
இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் மட்டுமே புலிகள் வசிக்கின்றன. இந்தியாவில் புலிகள் அழிந்த - அழிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று மத்தியப் பிரதேசத்தின் விந்திய மலைத் தொடர் - பன்னா வனப்பகுதி. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட புலிகள் வசித்தன. இது வன உயிரியல் மாஃபியாக்களின் கண்களை உறுத்தின. அதைத் தொடர்ந்து அப்பகுதி, புலிகள் வேட்டைக்காக மாஃபியாக்களின் சொர்க்க பூமியானது. குறிப்பாக, வட இந்தியாவின் பாரம்பரிய புலி வேட்டைக்காரர்களான பஹாரியாஸ் மற்றும் பாருதி சமூகத்தினர் அங்கு இருந்த மொத்தப் புலிகளையும் வேட்டையாடி தீர்த்தனர். ஒருகட்டத்தில் அங்கு புலிகள் இனமே அழிந்துபோனது.
அதன்பின் பல ஆண்டுகள் அங்கு புலிகள் வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்ட திட்டங்கள் பலன் தரவில்லை. 2008-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலைய (Wildlife Institute of India) மூத்த விஞ்ஞானியான ரமேஷ் ஒருங்கிணைப்பில் தொடங்கப்பட்ட ‘பன்னா புலிகள் மீட்டெடுப்பு மற்றும் மறு உருவாக்கம் திட்டம்’ இன்று அங்கு கணிசமான எண்ணிக்கையில் புலிகளை உருவாக்கியிருக்கிறது. இதுகுறித்து ரமேஷிடம் பேசினோம்.
புலிகள் மறு உருவாக்கம்
‘‘புலிகள் மறு உருவாக்கம் என்பது அரிதினும் அரிதாகவே வெற்றிப் பெறக்கூடியத் திட்டம். ஏனெனில் அதன் வாழ்க்கை முறை, அதன் மீதான வேட்டைகள், மனிதன் - புலி மோதல்கள் அதனை அழிவுப்பாதைக்கு கொண்டுச் செல்கின்றன. மேலும், புலிகள் தூண்டப்பட்ட சினை முறை (Induced ovulation) மூலமே கர்ப்பம் தரிக்கின்றன. அதாவது, ஒரு பெண் புலி, பல ஆண் புலிகளுடன் பல முறை இணை சேர்ந்தாலும் அதுவாக விரும்பினால் மட்டுமே கருத்தரிக்கும். இது பூனைகள் குடும்பத்துக்கும் சில நாய்கள் குடும்பத்துக்கும் உரிய உயிரியல் உண்மை. இதனால், புலிக்குட்டிகள் உயிர் வாழும் வாய்ப்பு 50 சதவீதத்துக்கும் குறைவே.
ராஜஸ்தானின் சரிஸ்கா புலிகள் காப்பகம், தென் ஆப்பிரிக்கா உள்பட உலகின் பல வனங்களில் இதுபோன்ற திட்டங்கள் முயற்சிக்கப்பட்டாலும் அவை வெற்றி பெறவில்லை. அந்த சூழலில்தான் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம் என்னிடம் இத்திட்டத்தை 2008-ம் ஆண்டு ஒப்படைத்தது. திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான என் தலைமையில் டாக்டர் ஜான்சன், டாக்டர் சுபரஞ்சன் சென் மற்றும் சில உதவியாளர்களுடன் களம் இறங்கினேன்.
மொத்தம் 543 சதுர கி.மீ. கொண்ட பன்னா வனப்பகுதியில் எங்கள் குழுவினர் ஓர் ஆண்டு கள ஆய்வு செய்தோம். ஆய்வில் அங்கு சராசரியாக ஒரு சதுர கி.மீ. பரப்பில் 45 மான்கள் வரை இருப்பது தெரிந்தது. அதன்படி இங்கு 25 முதல் 35 புலிகள் வரை வசிக்கலாம்.
2009-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் பென்ஞ் புலிகள் காப்பகம், பந்தாவ்கார் புலிகள் காப்பகம், கன்ஹா புலிகள் காப்பகம் ஆகிய இடங்களில் இருந்து இரு பெண் புலிகள், ஒரு ஆண் புலி என மூன்று புலிகளைக் கொண்டுவந்து பன்னாவில் விட்டோம். என்ன ஆச்சரியம். அடுத்த ஆண்டே இரு பெண் புலிகளும் தலா நான்கு குட்டிகளை ஈன்றன. 2011-ம் ஆண்டு கன்ஹா புலிகள் காப்பகத்தில் இருந்து மேலும் இரு பெண் புலிகளை கொண்டு வந்தோம். அவைகளும் ஐந்து குட்டிகளை ஈன்றன. இப்படியே கடந்த நான்கு ஆண்டுகளில் பன்னா வனத்தில் புலிகளின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு புலியின் கழுத்திலும் செயற்கைக்கோள் உதவியுடன் இயங்கும் ஜி.பி.எஸ். ரேடியோ காலர் பொருத்தப்பட்டு, அதன் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.
இதுவரை இங்கு ஆறு புலிக்குட்டிகள் இறந்துள்ளன. புலிக்குட்டிகளின் உயிர் வாழும் சாத்தியம் 50 சதவீதம்தான். ஆனால், பன்னாவில் அதை 83 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். இந்த சதவீதம் ஓர் உலகச் சாதனை. இப்படி ஒரு மறு உருவாக்கம் இதுவரை உலகில் எங்குமே சாத்தியப்படவில்லை.
தொடர்ந்து மத்திய அரசு இத்திட்டத்துக்காக கூடுதலாக 1000 சதுர கி.மீ. வனப்பகுதியை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் இச்சாதனை சாத்தியமானது. குறிப்பாக, பன்னா வன உயர் அதிகாரிகள் தொடங்கி அடிமட்ட ஊழியர்களின் பங்கு இதில் மகத்தானது. விரைவில் பன்னா மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்துவோம்” என்றார்.
டாக்டர் ரமேஷ் பற்றி…
இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் ரமேஷ் ஒரு தமிழர். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவுக்கு உட்பட்ட மருத்துவக்குடி கிராமம். மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் எம்.எஸ்.சி. வன உயிரியல் படித்த இவர், கடந்த 16 ஆண்டுகளாக இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றுகிறார். இணை ஆய்வாளரான டாக்டர் ஜான்சனும் தமிழரே. தூத்துக்குடியைச் சேர்ந்த இவர் மீன்கள் ஆராய்ச்சியாளர்.
இச்சாதனை வெளிநாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட சில நாடுகள் இதன் உயர் தொழில்நுட்பம் மற்றும் செயல்திட்டத்தை கேட்டுப் பெற்றுச் சென்றுள்ளன. சமீபத்தில் கம்போடியா நாட்டின் வனத்துறை அழைத்ததின்பேரில் ரமேஷ் அங்கு சென்று இத்திட்டத்தை விளக்கம் அளித்துவிட்டு வந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment