Published : 11 Jun 2016 01:33 PM
Last Updated : 11 Jun 2016 01:33 PM
மலைகள், பாறைகள், கற்கள் ஆகியவற்றின் மீது உருண்டோடும் நீர் எழுப்பும் ஒலி, 'மானுடத்தின் இசை' என்கிறார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த். அப்படிப்பட்ட நீர், மனிதர்களின் உயிர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? 'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவன் வாக்கு. உலகம் மட்டும்தான் நீரால் ஆனதா? அலோக் ஜா எழுதிய 'தி வாட்டர் புக்' எனும் புத்தகத்தைப் படித்தால், இந்தப் பிரபஞ்சமே நீராலானது என்கிற உண்மை புரிய வருகிறது. பிரபல நாளிதழான 'தி கார்டிய'னில் செய்தியாளராக இருந்தவர் அலோக் ஜா. சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொடர்பாக எழுதிவரும் இவரின் முதல் புத்தகம் இது.
புரிந்துகொள்ளப்படாத நீர்
ஒரு முறை விஞ்ஞானிகளுடன் அண்டார்டிக்காவுக்குச் செல்வதற்கான வாய்ப்பு இவருக்கு அமைந்தது. சுமார் ஒரு மாதப் பயணத்தில் நீர் குறித்து அவர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் விளைவுதான் இந்தப் புத்தகம்.
‘H2O'!
உலகில் இருக்கிற வேதியியல் குறியீடுகளிலேயே மிகவும் எளிதானதும், எளிதில் மறக்க முடியாத ஒன்றாகவும் இருப்பது நீரின் வேதியியல் குறியீடுதான். ஆனால், ‘நீர்' எனும் அசாதாரணமான ஒரு விஷயத்தைப் பற்றி நம்மில் எத்தனை பேர் ஆழமாக அறிந்திருக்கிறோம்? இதைத்தான் ஃபெலிக்ஸ் ஃபிராங்க்ஸ் எனும் வேதியியலாளர் இப்படிச் சொன்னார்: ‘உலகிலேயே மிகவும் பரவலான ஆய்வுக்கு உள்ளானதும், அதிகம் புரிந்துகொள்ளப்படாததுமாக ஒரு விஷயம் உண்டென்றால், அது நீர்தான்!'
குளிர்ந்து பொழிந்த மழை
‘நமது சூரியக் குடும்பம் உருவாவதற்கு முன்பே, பூமியின் ‘வெளி 'யில் நீர் மிதந்து கொண்டிருந்தது. அந்த நீர் தூசி மேகங்களாகவும் பனிக்கட்டிகளாகவும் மாறச் சுமார் 2 கோடி ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. பூமி உருவான நேரத்தில் இந்த நிலம் கடுமையான வெப்பம் தகிக்கும் இடமாக இருந்தது. பூமி உருவாகிப் பல நூறு லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகே வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவு குறைந்தது.
அந்தச் சமயத்தில்தான் பூமி சற்றுக் குளிர்ந்தது. அப்போதுதான் நீரைப் பிடித்து வைப்பதற்கான ஒரு சூழல் ஏற்பட்டது. காற்றில் கலந்திருந்த நீர் தூசி மேகங்கள் ஒன்றாகத் திரண்டு, மழையாகப் பொழியத் தொடங்கின. பல கோடி ஆண்டுகளாக மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது' என்று நீரின் தோற்றத்தை விளக்கும் அலோக் ஜா, செவ்வாய் கோளில் ஒரு காலத்தில் நீர் இருந்திருக்க வேண்டும் என்கிறார்.
நீரைப் பின்தொடர்
‘சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருந்த கோள்களில், சூரிய வெளிச்சம் இல்லாததால் நீர் மூலக்கூறுகள் எல்லாம் பனிக்கட்டியாக உறைந்திருக்க வேண்டும். இந்தப் பனிக்கட்டிகள் வெண்மையாக இருப்பதால், எந்த வெளிச்சம் அவற்றின் மீது விழுந்தாலும், அந்த வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். பனிக்கட்டிகளால் அந்தக் கோள்கள் மேலும் குளிர்ந்த பிரதேசமாக மாறின. செவ்வாய்க் கோளிலும் இதுதான் நிகழ்ந்திருக்க வேண்டும்' என்கிறார்.
ஆக, பூமியைத் தவிர இன்னொரு கோளில் உயிர்கள் இருப்பதைக் கண்டறிவதற்கான முதல் படி, அங்கு நீர் உள்ளதா என்பதைக் கண்டறிவதுதான். அதனால்தான் இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசா ‘ஃபாலோ தி வாட்டர்' எனும் விதியைக் கடைப்பிடிக்கிறது.
இன்று உலகம் வெப்பமயமாகி வருவதால், துருவங்களில் இருக்கும் பனிப் பாறைகள் எல்லாம் உருகிவிடும் ஆபத்து உள்ளது என்ற குரல்கள் கேட்கின்றன. ஆனால், அண்டார்க்டிக்காவில் உள்ள பனிப்பாறைகள் எல்லாம் உருகினால் அடலி பென்குவின் களுக்குத்தான் பெரும் பாதிப்பு என்கிறார் ஆசிரியர். அது எப்படி என்பதை நூலைப் படித்துத் தெரிந்துகொள்க!
நீர்... சில உண்மைகள்
# சுமார் 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதன், 42 லிட்டர் அளவு தண்ணீரைக் கொண்டிருப்பார். அதில் 28 லிட்டர் நீர், அவரின் உடலில் உள்ள செல்களில் இருக்கும். மீதமுள்ள 13 லிட்டர் நீர் ரத்த பிளாஸ்மா மற்றும் செல்களுக்கு இடையிலான இடைவெளி ஆகியவற்றில் இருக்கும்.
# நீரின் வேதியியல் ஃபார்முலாவான ‘H2O', என்பதை யார் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார் என்பதற்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய மோதலே நடந்தது. 1780-களில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்றி கேவண்டிஷ் என்பவரும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வாட் என்பவரும் ‘பற்றி எரியக்கூடிய காற்று' என்ற ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதுதான் ஹைட்ரஜன். கேவண்டிஷ் முதலில் கண்டுபிடித்திருந்தாலும், ஜேம்ஸ் வாட்தான் இந்த வாயு குறித்து முதலில் அறிவியல் கட்டுரையை வெளியிட்டார். இதனால் யாருக்கு ‘நீரின் சமன்பாட்டைக் கண்டுபிடித்தவர்' என்ற பட்டத்தைக் கொடுப்பது என்பது குறித்து இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையில் பெரும் மோதல் ஏற்பட்டது. இதுதான் பின்னாளில் ‘விக்டோரியன் வாட்டர் கான்ட்ரவர்ஸி' என்று அறியப்பட்டது!
# மனிதர்கள் தயாரிக்கும் ஒரு பொருளில் எவ்வளவு சதவீதம் தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறியும் ‘வாட்டர் ஃபுட் பிரிண்ட்' எனும் விஷயத்தை 2003-ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் அர்ஜென் ஹோக்ஸ்ட்ரா எனும் நெதர்லாந்தில் உள்ள ட்வென்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT