Published : 26 Sep 2013 01:09 PM
Last Updated : 26 Sep 2013 01:09 PM

தமிழகத்திலும் பயிரிடலாம் வட இந்தியக் காய்கறிகளை!

வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்குள்ள சில காய்கறிகளை முதன் முறையாகப் பார்த்துவிட்டு ஆச்சரியப்படுவது உண்டு. இதுபோல், நம் நாட்டிலேயே வடக்கில் உள்ள மாநிலங்களிலும் சில புது வகையான காய்கறிகள் உள்ளன தெரியுமா? டிண்டா, பண்டா, பச்சை காலி பிளவர், பர்வல் என இந்தியில் அழைக்கப்படும் காய்கறி வகைகள் வட மாநிலங்களின் ருசியான மற்றும் சத்தான காய்கறிகள்.

தென் இந்தியாவில் பார்க்க முடியாத இவைகளின் தன்மை மற்றும் பயிராகும் முறை பற்றி அறிய, உபி மாநிலத்தை சேர்ந்த அலிகர் நகரில் உள்ள டாக்டர்.சையது அஷ்ரப் மகபூப்பத்தை தி இந்து நாளிதழுக்காக அணுகினோம். இவர் அலிகர் முஸ்லீம் பல்கலை கழகத்தின் ரபி அகமது கித்வாய் அறிவியல் நிறுவனத்தில் துணை இயக்குநராக இருக்கிறார்.

டிண்டா: இதை ஆங்கிலத்தில் Squash Melon அல்லது Round Gourd என அழைக்கிறார்கள். பெரும்பாலும் வருடத்தின் பத்து மாதங்களும் கிடைக்கிறது. பழுக்காத தக்காளி போல் உருவத்தில் சற்று பெரிதாக இருக்கும் டிண்டாவில் கால்சியம் அதிகம். பஞ்சாப், உபி மற்றும் ராஜஸ்தானில் அதிகமாகப் பயிராகிறது.

லேசான பச்சை நிறம் மற்றும் பச்சை நிறம் என இருவகைகளில் இது பயிராகிறது. சுரைக்காய், புடலங்காய் மற்றும் தர்பூசணி வகைகளின் குடும்பத்தை சேர்ந்த இதில் சத்துகள் அதிகம். இதற்கு விளைவதற்ரு உகந்த வெட்பம் மற்றும் ஈரப்பதமான தட்ப வெட்பம் தென் இந்தியாவில் அதிகம் என்பதால் தமிழகத்தில் பயிர் செய்தால் டிண்டா நல்ல பலன் தரும்.

பர்வல்: நம்ம ஊர் கோவக்காயான இது இரு வகைகளில் கிடைக்கிறது. கொடியில் காய்க்கும் இருவகைகளில் கிடைக்கும் பர்வலில் ஒருவகை இளம் பச்சையாகவும், மற்றும் ஒரு வகை கரும் பச்சையில் வரி, வரியாகவும் இருக்கும்.

பெங்கால் மற்றும் அசாமில் கோடைக்கால பயிராக இருப்பினும், பஞ்சாப், உபி மற்றும் டில்லியில் மழைக்காலப் பயிராக உள்ளது. இதை ஒருமுறை பயிரிட்ட பின் அப்படியே விட்டுவிட்டாலும், திராட்சை கொடியை போன்று குளிர் காலத்தில் இந்த செடி காய்ந்து போன பின்பும் உயிருடன் இருக்கும் இதன் வேர், ஒரு மழை வந்தவுடன் செடியை துளிர்க்க வைத்து விடும். பர்வல் கொடியானது நிலத்தில் பரவ விடும் பொழுது அதிகமானக் காயை கொடுக்கும். பர்வலில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகமாக உள்ளது.

பச்சை காலி பிளவர்: இந்தியில் ‘ஹரி கோபி’ என அழைக்கப்படும் இது, இத்தாலிய மொழியில் Broccoli என அழைக்கப்படுகிறது. இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வகைப் பயிரான இது பார்ப்பதற்கு காலி பிளவரை போல் இருக்கும். ஆனால், காலி பிளவரின் வெள்ளையான பூ மட்டும் இதில், பச்சையாக இருக்கும். இலைகளும் சற்று அதிகமான கரும் பச்சையாக இருக்கும். வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் வரும் இந்த காய்கறியில் பச்சை நிற வகையில் மட்டுமே அதிக சத்து உள்ளது.

பண்டா: கிழங்கு வகையை சேர்ந்த இது கப்பக்கிழங்கைவிட தடினமாக கைப்பிடியுடன் இருக்கும். கால்சியம் சத்துமிக்கது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான சீசன்களில் விளையும் பண்டா பயிராகும் முறையும் சேப்பங்கிழங்கை போன்றதே ஆகும்.

மேற்கூறிய அனைத்து காய்கறிகளும் தமிழகத்தில் கண்டிப்பாக பயிராகும். நல்ல விளைச்சலையும் கொடுக்கும். ஒரே நாட்டில் இருந்து கொண்டு இவை தென் இந்தியாவில் விளையாமல் இருப்பது எங்களுக்கு ஆச்சரியம் தருகிறது.’ என்ற சையது அஷ்ரப் மகபூப், தோட்டக்கலைத் துறை பற்றி ஆய்வுகள் செய்து பல கட்டுரைகளை பன்னாட்டு இதழ்களில் வெளியிட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x