Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 26 Dec 2013 12:00 AM
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாட்டில் இருந்து வர்ண நாரை பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் குவிந்திருப்பதால், பார்வையாளர்களின் வருகையும் கணிசமாக அதிகரித்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைக்குத்தி நாரை, ஊசிவால் வாத்து, சாம்பல் நிற நாரை, வர்ண நாரை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பறவைகள் ஆண்டுதோறும் வருகை தரும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்தும் பலவகை பறவைகள் இங்கு வருகின்றன.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சரணாலயத்தில், ஆண்டுதோறும் அக்டோபர் பிற்பகுதியில் இருந்து சீசன் தொடங்குகிறது. ஏரியின் நீர் இருப்பைப் பொறுத்து, மார்ச் அல்லது ஏப்ரல்வரை பொதுமக்கள் பார்வைக்காக சரணாலயம் திறந்து வைக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் நாளில் 3,500 பேர்
இந்த ஆண்டு பருவமழை தாமதமானதால், சரணாலயம் திறப்பதும் தள்ளிப் போனது. அது கடந்த நவம்பர் 22-ம் தேதிதான் திறக்கப்பட்டது. பறவைகளின் வருகை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பார்வையாளர்களும் ஆர்வத்துடன் வருகின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் சுமார் 3,500 பேர் சரணாலயத்துக்கு வந்து சென்றனர்.
இதுகுறித்து வேடந்தாங்கல் வனச்சரகர் முருகேசன், ‘தி இந்து’விடம் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த சில வாரங்களாகவே பறவைகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, வேடந்தாங்கல் ஏரியில் 15 ஆயிரம் பறவைகள் வந்து குவிந்துள்ளன. இதனால் பார்வையாளர்களும் ஆர்வத்துடன் வந்து பறவைகளை பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.
சரணாலயம் திறக்கப்பட்டபின் கடந்த ஒரு மாதத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்துள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் 2,701 பெரியவர்களும் 702 சிறியவர்களும் வந்தனர். இவர்கள் மூலம் ரூ.24 ஆயிரம் வசூலானது.
இதுமட்டுமின்றி, கடந்த சில நாட்களாகவே சைபீரியாவில் இருந்து வர்ண நாரைகள் (பெயின்டட் ஸ்டார்க்) வரத் தொடங்கியுள்ளன. இதைப் பார்க்க பறவை ஆர்வலர்கள் அதிகம் வருகின்றனர். அடுத்த மாதத்தில் வர்ண நாரைகள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT