Published : 21 Jan 2014 12:00 AM
Last Updated : 21 Jan 2014 12:00 AM

பூவுலகின் நண்பர்கள்: பாரம்பரியம் காக்க ஐம்பூதம்

சுற்றுச்சூழல் அக்கறையை நமது பாரம்பரியத்தி லிருந்து மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக ‘ஐம்பூதம்’ என்னும் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. பிப்ரவரி 2ஆம் தேதி சென்னை லயோலா கல்லூரியில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி "நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவற்றைக் குறித்த நமது அணுகுமுறையைப் பற்றியதாக இருக்கும்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் கு. சிவராமன்.

"‘மண் திணிந்த நிலனும், நிலம் ஏந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும் வளி தலைஇய தீயும், தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போல...’ என்கிறது புறநானூறு. அதேபோல், ‘காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு நன்று; திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன’ என்றார் பாரதி. இவ்வாறு ஐம்பூதங்களின் அடிப்படையில் அமைந் தது வாழ்க்கை என்பதை நமது முன்னோர் உணர்ந்திருந்தனர். உலகின் பாரம்பரிய மருத்துவங்களின் அடிப்படை ஐம்பூதங்களே. தமிழ்த் தொன்ம வரலாற்றில் ஐம்பூதங்கள் குறித்த துல்லியமான புரிதல் இருந்ததைச் சங்க இலக்கியம் முதல் பாரதி வரை அறிய முடிகிறது" என்று இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான சீனிவாசன் இந்நிகழ்ச்சியின் பின்புலத்தை விவரிக்கிறார். "தமிழ்ச் சூழலில் இன்றைக்கு அவற்றின் நிலைமை என்ன? நவீன கால மாற்றங்கள் அவற்றின் மீது செலுத்தியிருக்கும் தாக்கங்கள் என்னென்ன? அவற்றைச் சார்ந்து வாழும் நாம் அவற்றுக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகள் என்ன? அவற்றை எப்படி எல்லாம் மாசுப்படுத்துகிறோம்? சுரண்டுகிறோம்? அவற்றைக் காக்கச் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன என்பதைப் பற்றி ஆக்கப்பூர்வமான கருத்துகளை நிபுணர்கள் எடுத்துரைப்பார்கள்" என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இயற்கை சார்ந்த இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவருகிறது. 2012இல் நடைபெற்ற ஐந்திணை விழாவில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய திணைகளின் மற்றொரு பரிமாணத்தைப் பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்கள் உணர்த்தினார்கள். 2013இல் நடைபெற்ற முந்நீர் விழவு விழாவில் கடல் நீர், ஆற்று நீர், நன்னீர் ஆகியவற்றின் ஆதி முதல் தற்போதைய நிலைமை வரை நிபுணர்கள் எடுத்துரைத்தார்கள்.

3,000 ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட தமிழ்த் தொன்மத்தின் மகத்துவத்தை நினைவுபடுத்துவதும், அதன் நவீனச் செயல்பாடுகளைக் குறித்து விவாதிப்பதுமே ஐம்பூதம் நிகழ்வின் நோக்கம் என்று சீனிவாசன் குறிப்பிடுகிறார். "ஆதித் தமிழ்ப் பரப்பில் ஐம்பூதங்கள் இருந்த நிலை தொடங்கி, தற்காலத் தமிழ்ச் சமூகத்தில் அவை எதிர்கொள்ளும் நெருக்கடிகள்வரை பல விவரங்களையும் ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்" என்கிறார் அவர்.

விழாவில் சுற்றுச்சூழல் தொடர்பான சுமார் 20 புதிய புத்தகங்களும் வெளியிடப்படு கின்றன. சூழலுக்கு இணக்கமான கட்டடக் கலைஞர் லாரி பேக்கரைப் பற்றி அவரது மனைவி எலிசபத் பேக்கர் எழுதிய ‘பறவைக் கும் கூடு உண்டு’, மருத்துவர் சிவராமனின் ‘நறுமணமூட்டிகள்’, நீரஜ் ஜெயினின் ‘அணுப்பித்து’, ஜெயக்குமார், கார்த்தியின் ‘பத்துப்பாட்டில் பறவைகள்’ அவற்றில் சில.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x