Published : 12 Sep 2015 12:26 PM
Last Updated : 12 Sep 2015 12:26 PM
மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையே இந்திய எல்லை ஓரமாக இச்சா நதி பாயும் பகுதியில் தேங்காய்ப்பூ சம்பா என்ற பாரம்பரிய நெல் ரகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நெல்லுக்கு வங்க மொழியில் வேறு பெயரும் உண்டு.
தேங்காய்ப்பூ
இந்த ரகம் பொரி தயாரிப்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது. காலை உணவாகத் தண்ணீரில் பொரியை ஊறவைத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துச் சாப்பிடுகின்றனர். மேற்கு வங்கத்தில் பிரபலமான இந்த நெல் ரகம், தமிழகத்திலும் சோதனை அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டது. மணல், மணல் சார்ந்த பகுதிக்கும் கடலோரப் பகுதிக்கும் ஏற்ற ரகமாகவும் இருக்கிறது. நான்கு அடி வளரும் இப்பயிர் கொஞ்சம் சாயும் தன்மையுடன் இருந்தாலும், அறுவடையில் பாதிப்பு இருக்காது.
தமிழகத்தில் பொரி பயன்பாடு அதிகம். அதற்கான புதுப்புது ரகங்களுக்கு ஆராய்ச்சி நிலையங் களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் பொரிக்கு ஏற்ற ரகமாக, தேங்காய்ப்பூ சம்பா இருக்கிறது.
வித்தியாச நெல் ரகம்
பாரம்பரிய நெல் ரகங்களிலேயே மிகவும் வித்தியாசமான நெல் ரகம் இது. நம்முடைய நெல் மணிகள் இதழ் இதழாக இருக்கும். ஆனால், தேங்காய்ப்பூ சம்பா கொத்துக் கொத்தாக இருக்கும்.
தமிழகக் கடலோர மாவட்டங்களில் இந்த நெல்லை சாகுபடி செய்து பொரி தயாரிப்புக்கும் உணவுக்கும் பயன்படுத்துகிறார்கள். மஞ்சள் நெல், வெள்ளை அரிசி, மோட்டா ரகம். நடவு செய்யவும், தெளிக்கவும் ஏற்றது. ஏக்கருக்கு இருபத்து ஐந்து கிலோ விதை போதுமானது. மகசூல் இருபத்தி இரண்டு மூட்டைவரை கிடைக்கும்.
(நெல் ஜெயராமன் எழுதிவந்த ‘நம் நெல் அறிவோம்' தொடர், இந்தப் பகுதியுடன் நிறைவடைகிறது)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT