Published : 08 Apr 2017 10:33 AM
Last Updated : 08 Apr 2017 10:33 AM
வறட்சி காலத்தில் ஏற்பட்டுள்ள பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கக் கால்நடைத் துறை சார்பில் மண்ணில்லாமல் வளர்க்கும் முறையில் ரூ.19 செலவில் எட்டு கிலோ பசுந்தீவனத்தை ஏழு நாட்களில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதோடு, கோடை வெப்பமும் உக்கிரமாக உள்ள நிலையில் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் வறட்சியால் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.
குறைந்த பரப்பில் பசுந்தீவனம்
வறட்சி காரணமாக விவசாயச் சார்புத் தொழிலான கால்நடைத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கால்நடைகளுக்குப் பசுந்தீவனத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால், பல விவசாயிகள் கால்நடைகளைச் சந்தையில் அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, வறட்சி காலத்தில் மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு (ஹைட்ரோபோனிக்ஸ்) முறையைக் கால்நடைத் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மூன்று அடி அகலம் ஆறு அடி உயரம் கொண்ட சிறிய அறையில் பசுந்தீவனம் விதையிட்டு ஏழு நாட்களில் எட்டு கிலோ பசுந்தீவனத்தை அறுவடை செய்து பயன்பெறலாம். இது குறித்துச் சேலம் கால்நடைத் துறை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் ஜெயந்தி கூறியதாவது:
கோடை தொடங்கும் முன்னரே நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வறட்சியின் பிடியில் விவசாய நிலங்கள் சிக்கியுள்ளன. தண்ணீர் பற்றாக்குறையும், கடும் வெயிலும் கைகோத்துக் கொண்ட நிலையில், தீவன வளர்ப்பு அபூர்வமாகிவிட்டது. கோடை வறட்சிக்குத் தாக்குப்பிடித்து, கால்நடைகளுக்குத் தீவனம் வழங்கும் விதமாக, மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு முறையை அறிமுகம் செய்துள்ளோம்.
மக்காச்சோள இலைகள்
மக்காச்சோள விதையை 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ‘ஃபாடர் மிஷின்’ மூலம் மக்காச்சோளம் விதையை 15 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ்வரை வெப்பப்படுத்தி, 60 சதவீதம் முதல் 70 சதவீதம் ஈரப்பதமாக்க வேண்டும். இவற்றைச் சாக்குப் பைகளில் போட்டு, தண்ணீர் தெளித்தபடி இருந்தால், மூன்று-நான்கு நாட்களில் முளைவிட்டுப் பயிர் வளர ஆரம்பிக்கும்.
பின்னர்த் தனித்தனி அடுக்குகளில் டிரேவில் வைத்து முளைவிட்ட பயிருக்குத் தண்ணீர் ஊற்றிவந்தால், ஏழு நாட்களில் எட்டு கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு மூன்றரை லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ விதை ரூ.19 செலவும் செய்தால், ரூ.64 மதிப்புள்ள எட்டு கிலோ பசுந்தீவனத்தைப் பெற முடியும். இந்த முறையை மாநிலம் முழுவதும் பரவலாக்க விவசாயிகளிடம் கால்நடைத் துறை மற்றும் வேளாண் துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது” என்றார்.
மானிய விலையில் இயந்திரம் தேவை
பசுந்தீவன வளர்ப்பு தொடர்பாகச் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த அபிநவம் கிராம விவசாயி ஜெயராமன் கூறியதாவது:
மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு முறை அருமையான திட்டம். இதற்கான இயந்திரம் ரூ.61 ஆயிரம். இதை மானிய விலையில் விவசாயிகளுக்கு அளிப்பதன் மூலம் குறைந்த இடத்தில், மலிவு விலையில் விவசாயிகள் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து மூன்று மாடு, 30 ஆடுகளுக்குப் பற்றாக்குறையில்லாமல் வழங்க முடியும். கிலோ எட்டு ரூபாய் கொடுத்து வைக்கோல் வாங்கும் நிலையில், வெறும் நான்கு ரூபாய் செலவில் தினசரி எட்டு கிலோ தீவனம் கிடைப்பது வரவேற்புக்குரியது.
கால்நடைத் துறை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத் தொடர்புக்கு: 9629986159
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT