Published : 08 Apr 2017 10:35 AM
Last Updated : 08 Apr 2017 10:35 AM
மதுரை அழகர்கோவில் அருகே விவசாயி உற்பத்தி செய்யும் பப்பாளிப் பழங்கள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன்மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 5 ½ லட்சம் ரூபாய் அவர் லாபம் சம்பாதித்துவருகிறார்.
மதுரை மாவட்டத்தில் குடிநீர், விவசாயப் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ள சூழலில் அழகர்கோவில் அடிவாரம் கிழக்கு சுற்றுவட்டாரக் கிராமங்களில், தற்போதும் 200 அடியில் சுவையான தண்ணீர் கிடைக்கிறது. இந்தத் தண்ணீரையும் கரம்பை மண்ணையும் பயன்படுத்தி விவசாயிகள் இயற்கை விவசாயத்திலும், ‘ஹைடெக் ஹைபிரிட்’ விவசாயத்திலும் சாதித்துவருகின்றனர்.
நேரடிக் கொள்முதல்
அழகர்கோவில் சாம்பிராணிப் பட்டியைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன், தனது சகோதரர் கார்மேகத்துடன் சேர்ந்து ஆறு ஏக்கரில் கலப்பினப் பப்பாளி சாகுபடி செய்துள்ளார். ஒவ்வொரு மரத்திலும் பப்பாளிப் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்துக் குலுங்குகின்றன. ஒவ்வொரு பழமும் மூன்று கிலோ முதல் ஐந்து கிலோவரை இருக்கிறது. நான்கு நாட்களுக்கு ஒருமுறை பழங்களை அறுவடை செய்கின்றனர்.
ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, இவர்கள் விளைநிலத்துக்கே வந்து மொத்தமாகப் பப்பாளிப் பழங்களைக் கொள்முதல் செய்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இவர்கள் விளைவிக்கும் பப்பாளி பழங்களில் அதிகச் சுவை இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதனால், பப்பாளி சாகுபடியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செலவு போக இவர்கள் ஏக்கருக்கு 5 ½ லட்சம் ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றனர்.
முழுமையான மகசூல் பெற...
இது குறித்து விவசாயி கோபாலகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டது: தோட்டக்கலைத் துறை பண்ணையில் வாங்கிய 40 நாள் பப்பாளிக் கன்றுகளை ஆறு ஏக்கரில் நடவு செய்தோம். ஆறு மாதங்களில் இந்தப் பப்பாளி மரங்களில் காய்கள் பிடிக்க ஆரம்பித்தன. ஒன்பதாவது மாதத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை பப்பாளிப் பழங்களை அறுவடை செய்ய ஆரம்பித்தோம். அதிகபட்சமாக, எங்கள் மரங்களில் விளையும் பப்பாளி பழம் மூன்று கிலோ முதல் ஐந்து கிலோவரை காய்க்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து ஓர் ஏக்கருக்கு 1 ½ லட்சம் ரூபாய் செலவாகிறது. பப்பாளி சீசனுக்குத் தகுந்தாற்போல் ஒரு கிலோ ரூ.10 முதல் 18 ரூபாய்வரை விற்கிறது. ஓர் ஏக்கரில் 70 டன் முதல் 100 டன்வரை மகசூல் கிடைக்கிறது. சராசரியாக ஏக்கருக்கு 7 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. 1 ½ லட்சம் ரூபாய் செலவு, போக 5 ½ லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. நல்ல விலைக்கு விற்றால், கூடுதல் மகசூல் கிடைத்தால் லாபமும் கூடுதலாகும்.
பொதுவாக 20 அடி உயரம்வரை மரத்தை வளர வைத்து மூன்று ஆண்டுகளுக்கு மகசூல் பெறலாம். சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் ஏழு அடி, 10 அடியில் வளர்ச்சி நின்றுவிடும். வெள்ளை, பச்சை கொசுக்கள், மாவுப் பூச்சிகள் அதிகமாக இருந்தால் காய் பிடிக்காது. தண்டு அழுகல் நோய் வரும். இந்த நோயைக் கட்டுப்படுத்தத் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அறிவுரைப்படி அவ்வப்போது மருந்துகளை அடிக்க வேண்டும். நாங்கள் உற்பத்தி செய்யும் பப்பாளிப் பழங்களை அரபு நாட்டு மக்கள் சாம்பார் செய்யவும், பழங்களாகச் சாப்பிடவும் விரும்பி வாங்குகின்றனர் என்றார்.
- விவசாயி கோபாலகிருஷ்ணன் தொடர்புக்கு: 93603 84427
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT