Published : 20 May 2017 11:08 AM
Last Updated : 20 May 2017 11:08 AM
ஓட்டல் வணிகத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள தொழிலதிபர் வி.குமரேசன். அதைவிடவும் இமாம்பசந்த் மாம்பழங்கள் மூலமே பரவலாக அறியப்படுகிறார். தன் தொழில், சொத்துகளால் அடையும் மகிழ்ச்சியைவிட, இயற்கை வேளாண்மையே தன் வாழ்க்கைக்கான நிறைவைத் தருகிறது என்கிறார் குமரேசன்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள பெண்ணலூர்பேட்டை கிராமத்தில் உள்ளது குமரேசனின் தோட்டம். ஒரு காலத்தில் முந்திரி மரங்கள் நிறைந்திருந்த காட்டைத் திருத்தி, மாந்தோப்பாக மாற்றியிருக்கிறார். 110 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொண்டுவரும் இவர், தனது தோட்டத்தின் பெரும்பகுதியில் மா மரங்களைச் சாகுபடி செய்துள்ளார். இவரது தோட்டத்தில் 15 ஆயிரம் மா மரங்கள் உள்ளன. அவற்றில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இமாம்பசந்த் ரகத்தைச் சேர்ந்தவை. இங்கே மண்புழு உரம், பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி முழுவதும் இயற்கை வேளாண் முறையில் மாம்பழ உற்பத்தி நடக்கிறது.
சிரமமற்ற விற்பனை
சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களில் இருந்து மாம்பழ விளைச்சல் கிடைத்தாலும், அவற்றை விற்பனை செய்வதில் எந்தச் சிரமத்தையும் சந்திப்பதில்லை என்கிறார் குமரேசன். சென்னை மாநகரிலும், தமிழகத்தின் பல ஊர்களிலும் தான் உற்பத்தி செய்யும் இமாம்பசந்த் மாம்பழத்துக்குப் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர் எனப் பெருமிதமாகச் சொல்கிறார்.
சீசன் உச்சத்தில் இருக்கும் மே மாதத்தில் நாள்தோறும் ஒரு டன், இரண்டு டன் என இவரது தோட்டத்தில் இருந்து மாம்பழம் அறுவடை செய்யப்படுகிறது. சென்னை ஜி.என். செட்டி சாலையில் உள்ள பெனின்சுலா ஓட்டலுக்கு அவை கொண்டு வரப்படுகின்றன. அங்கே வந்தவுடனே பழங்கள் தீர்ந்துவிடுகின்றன. முன்னரே சொல்லி வைத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் பழங்கள் அனுப்பப்பட்டுவிடுகின்றன. அத்துடன் தரமான பழங்கள் என்பதால், இவரிடம் மொத்தமாக வாங்கி நாட்டின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் பலர் விற்பனை செய்துவருகின்றனர்.
முழுக்க மண்புழு உரம்
ஒருங்கிணைந்த பண்ணை விவசாய முறையால்தான், தனது விவசாயத் தொழிலை லாபகரமாக மாற்ற முடிந்திருக்கிறது என்ற ரகசியத்தைப் பகிர்கிறார் இவர். இது தொடர்பாக அவர் பகிர்ந்துகொண்டது:
வேளாண் உற்பத்தி அதிகரிப்பதால் மட்டும் ஒரு விவசாயிக்கு லாபம் கிடைத்து விடாது. உற்பத்திச் செலவைக் குறைப்பதில் ஒருவர் எந்த அளவு கவனம் செலுத்துகிறார் என்பதைப் பொறுத்தே லாபம் தீர்மானிக்கப்படுகிறது.
கடந்த 25 ஆண்டு கால அனுபவங்களின் அடிப்படையில் எனது தோட்டத்தில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைத்துள்ளேன். தோட்டத்தில் உரமிட இப்போது செலவு செய்வதே இல்லை. முழுக்க முழுக்க மண்புழு உரத்தை மட்டுமே பயன்படுத்துவதால், ரசாயன உரங்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. மொத்தத் தோட்டத்துக்குத் தேவையான மண்புழு உரமும் எங்கள் தோட்டத்திலேயே உற்பத்தியாகிறது.
மண்புழுக்களைப் பராமரிப்பதும், அவற்றில் இருந்து உரம் உற்பத்தி செய்வதும் மிகவும் எளிது. பராமரிப்பு வேலைகளை நானே பெரும்பாலும் பார்த்துக்கொள்கிறேன். தொடக்கத்தில் மண் புழு உர உற்பத்திக்காக ஒரு சிறு கொட்டகை அமைக்கக் கொஞ்சம் செலவு செய்தேன். அவ்வளவுதான்.
வீணாகும் மாம்பழங்கள்
அதேபோல, மரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபட்ட மாம்பழங்கள், பழுத்து அதிக அளவில் கனிந்துவிட்ட பழங்கள் போன்றவற்றை விற்பனைக்கு அனுப்புவதில்லை. தினமும் விற்பனைக்கு அனுப்பும் பழங்களுக்கு இணையாக, வீணான பழங்கள் தேங்கும். அவற்றைத் தூக்கிப்போடுவதில்லை. அந்தப் பழங்களின் தோலையும், சதைப் பகுதியையும் அகற்றிவிட்டு, விதைகளை மாங்கன்று உற்பத்திக்குப் பயன்படுத்துகிறோம்.
இவ்வாறு மாம்பழத்திலிருந்து தோலையும், சதைப் பகுதியையும் அகற்றுவதற்குச் சாதாரணமாகத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவார்கள். ஆனால் இந்தப் பணிக்கு நாட்டுப் பன்றிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். வீணான பழங்களைப் பன்றிகளுக்கு இடும்போது தோலையும், சதைப் பகுதியையும் தின்றுவிட்டுக் கொஞ்ச நேரத்திலேயே சுத்தமான விதையைப் பன்றிகள் துப்பி விடுகின்றன. இதனால் 10 ஆட்கள் ஒரு நாளில் செய்யும் பணியை, ஒரேயொரு பன்றி சில மணி நேரத்தில் செய்து முடித்துவிடுகிறது.
பன்றிகள் செய்யும் சுத்தம்
அது மட்டுமல்ல; எனது தோட்டத்தில் கோரைப் புற்கள் அதிக அளவில் உள்ளன. கோரையை அகற்ற வேண்டுமானால், ஆழமாக வெட்டி கிழங்கையும் சேர்த்து அகற்ற வேண்டும். இந்தக் கடினமான வேலைக்கு அதிகத் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள்.
எனது தோட்டத்தில் கோரைகளை அகற்ற வேண்டிய இடத்தில் பெரிய பட்டி அமைத்து, பன்றிகளை அடைத்துவிடுவேன். சில மணி நேரத்தில் அந்த இடத்தில் கோரை கிழங்கு, புற்களைத் தின்று, அந்த இடத்தையே பன்றிகள் சுத்தமாக்கிவிடுகின்றன.
ஓராண்டுக்கு முன் ரூ.2,500 கொடுத்து ஒரு ஜோடி நாட்டுப் பன்றியை வாங்கினேன். குறுகிய காலத்திலேயே எனது தோட்டத்தில் பன்றிகள் எண்ணிக்கை 25-க்கும் மேல் பெருகிவிட்டன. அநேகமாக இமாம்பசந்த், அல்போன்சா என உயர்ரக மாம்பழங்களைச் சாப்பிட்டு வளரும் பன்றிகள், எனது தோட்டத்தில் மட்டும்தான் இருக்கும் எனக் கருதுகிறேன். அந்தப் பன்றிகளின் கழிவுகள் அருகேயிருக்கும் காய்கறி தோட்டத்துக்குச் சென்று சேரும் வகையில் காய்கறி தோட்டத்தை உருவாக்கியுள்ளேன்.
காய்கறி சாகுபடி
எனது தோட்டத்தில் மா மரங்களைத் தவிர அனைத்துக் கீரை வகைகள், மிளகாய், கத்தரி, தக்காளி, தேங்காய் எனப் பல சாகுபடிகள் நடைபெறுகின்றன. உருளை, முட்டைகோஸ், கேரட் போன்ற மலைக் காய்கறிகளைத் தவிர, எனது ஓட்டலுக்குத் தேவையான அனைத்துக் காய்கறிகளையும் எனது தோட்டத்திலேயே உற்பத்தி செய்கிறேன்.
துவரம் பருப்பு, உளுந்து, பச்சைப் பயறு, மஞ்சள், இஞ்சி போன்றவையும் எனது தோட்டத்திலிருந்தே கிடைக்கின்றன. ஓட்டலில் பயன்படுத்தப்படும் பலா, அன்னாசி, கொய்யா, வாழை, எலுமிச்சை போன்ற பழங்களும் எனது சொந்த உற்பத்திதான். அத்தனையும் இயற்கை சாகுபடி. மா மரங்களுக்கு இடையே நிறைய இடைவெளி இருப்பதால் தொடர்ந்து ஊடுபயிர் சாகுபடி செய்ய முடியும்.
நீர் மேலாண்மை
தோட்டத்தில் பம்புசெட், கிணறுகள் உள்ளன. இவை தவிர மழைக் காலத்தில் மலை பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில் தோட்டத்தின் உள்ளேயே ஒரு குளம் வெட்டியுள்ளோம். இங்கு 26 நாட்டு மாடுகள் உள்ளன. மாடுகளின் சாணத்தை மண்புழு உற்பத்திக்கும், சிறுநீரைப் பஞ்சகவ்யம் தயாரிக்கவும் பயன்படுத்துகிறோம். தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்துத் தேன் உற்பத்தி செய்யவும் தொடங்கியுள்ளேன்.
மொத்தத்தில் தனிப் பயிர்களைச் சாகுபடி செய்யாமல், ஒன்றையொன்று சார்ந்து வளரக்கூடிய பல பயிர் சாகுபடியே பெரும் லாபத்தைத் தரும். இவ்வாறு தனது அனுபவங்களை அடுக்கிக்கொண்டே போகிறார் குமரேசன்.
நிரந்தர வெற்றி சாத்தியம்
“இயற்கை வேளாண்மை செய்ய ஆரம்பித்த தொடக்கக் காலத்தில் ஓட்டல் தொழிலை ஒழுங்காகக் கவனிக்காமல் பைத்தியக்காரன்போல் தோட்டத்தில் ஏதேதோ செய்துகொண்டிருக்கிறான் என என்னைப் பார்த்து ஏளனம் பேசியவர்கள் பலர் உண்டு. அவற்றையெல்லாம் காது கொடுத்துக் கேட்காமல் இன்றைக்கு என்னுடைய 70 வயதிலும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தொடர்ந்து பல புதிய புதிய உத்திகளைச் செயல்படுத்திப் பார்க்கிறேன். இதனால் எனக்கு மன ஆரோக்கியம் மட்டுமின்றி, உடலும் முழு ஆரோக்கியத்துடன் உள்ளது. ஒவ்வொரு விவசாயியும், தங்களது அனுபவங்களுக்கு ஏற்ப மாறுபட்ட இயற்கை வேளாண் உத்திகளைக் கையாளும்போது நிரந்தர வெற்றி கிடைப்பது நிச்சயம்” என உறுதியாகக் கூறுகிறார் குமரேசன்.
குமரேசன் பயிரிடும் முறை
இயற்கை வேளாண் முறையில்100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் சாகுபடி செய்யும்போது உங்களுக்கு லாபம் கிடைக்கிறது. சிறு விவசாயிகளுக்கும் இவ்வாறு லாபம் கிடைக்குமா எனக் கேட்டபோது, அவர் கூறியது:
“மா சாகுபடியைப் பொறுத்தவரை ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கரில் சாகுபடி செய்பவர்கள்கூடக் கணிசமாக லாபம் ஈட்ட முடியும். என்றாலும் சொட்டு நீர்ப் பாசனம், மண்புழு உர உற்பத்தி போன்ற உத்திகளைப் பின்பற்ற வேண்டும். தரமான பழ உற்பத்தியில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. பறவைகள் கொத்தும் தருணம்வரை, காயை முற்ற விட வேண்டும்.
பராமரிப்பும் வளர்ப்பும்
ஒரு ஏக்கரில் 80 இமாம்பசந்த் கன்றுகளைச் சாகுபடி செய்யலாம். ஒரு கன்று ரூ.80 என்ற விலையில் கிடைக்கும். குழி வெட்டி, நடவு செய்ய ஒரு கன்றுக்கு ரூ.150 வரை செலவாகும். ஆண்டுக்கு இரண்டு முறை கவாத்து செய்து, மரத்துக்கு 15 கிலோ வீதம் ஓராண்டில் 30 கிலோ மண்புழு உரம் இட்டால் போதுமானது. சொட்டு நீர் பாசனத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விட வேண்டும். நடவு செய்த நான்காவது வருடத்தில் இருந்து உற்பத்தி தொடங்கும். ஒரு காயின் எடை அரை கிலோவுக்குக் குறையாது.
நடவு செய்த நான்காவது வருடத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரவு கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் செலவாகாது. வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
முற்றிலும் இயற்கை சாகுபடி முறை என்பதால் பூச்சி தாக்குதல், சிறு காற்றுக்கே பூ உதிர்தல், காய் உதிர்தல் போன்ற பாதிப்புகள் குறைவாக இருக்கும். மேலும் இயற்கை சாகுபடி முறையில் காய் திரட்சியாகவும், பழங்கள் நல்ல ருசியாகவும் இருப்பதால் சந்தை வாய்ப்பு குறையாது.
கிலோ ரூ. 100-க்குக் குறையாது
இமாம்பசந்த் பழத்தை விற்பனை செய்ய யாரையும் தேடிப் போகத் தேவையில்லை. வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சந்தையில் அதிகத் தேவையுள்ள பழங்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும். எந்தக் காலத்திலும் இமாம்பசந்த் பழத்தின் விலை கிலோ ரூ.100-க்கு கீழே வரவே வராது.
தண்ணீருக்கு பற்றாக்குறை நிலவும் பகுதிகளை தவிர்த்து மற்ற எல்லா பகுதிகளிலும் இமாம்பசந்த் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜொலிக்கலாம் என உறுதியாகக் கூறுகிறார் குமரேசன்.
குமரேசன் தொடர்புக்கு: 94440 25008
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT