Last Updated : 28 Jan, 2017 08:32 AM

 

Published : 28 Jan 2017 08:32 AM
Last Updated : 28 Jan 2017 08:32 AM

அந்தமான் விவசாயம் 18: அங்கக வேளாண்மை - அறிவியல் சொல்லும் உண்மைகள்

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் அமைந்துள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் அங்கக வேளாண்மை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பல்வேறு புதிய அம்சங்கள் தெரியவந்தன. பஞ்சகவ்யா, நுண்ணுயிர் கலவை, ஒருங்கிணைந்த பண்ணையத்தின் திரவக் கழிவு, மண்புழு உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட வாழைத்தாரின் மொத்த எடை மற்ற முறைகளில் விளைவதைவிட ஐந்து முதல் எட்டு கிலோ அதிகமாக இருந்தது.

அங்கக முறையில் உற்பத்தி செய்யப்பட்ட வாழை, கத்தரியில் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கும் திறன் (’ஆன்டி ஆக்சிடென்ட்’ எனும் உயிர்வேதிப் பொருள்), ரசாயனங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பயிர்களைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது.

அங்கக முறையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பழம், காய்கறிகள், கிழங்கு வகைகளில் நுண்ணூட்டச் சத்து, தாதுஉப்புகளின் அளவும் விகிதாச்சாரமும் மேம்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அந்தமானில் உற்பத்தியாகும் பட்டை, கிராம்பு போன்றவற்றிலிருந்து பெறப்படும் நறுமண எண்ணெயின் தரம் மேம்பட்டதெனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் ஆஸ்திரேலியா, டென்மார்க் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாக அங்கக மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை மேயவிட்டு உற்பத்தி செய்யப்பட்ட பாலில், அதிகளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

நிலைத்தன்மையும் அங்கக வேளாண்மையும்

இத்தகைய நன்மை பயக்கும் பொருட்களின் அளவு மண்ணின் தன்மை, மேலாண்மை, தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடலாம். இருந்தாலும் அந்தமான் நிகோபாரில் அங்கக முறையில் சிறந்த மேலாண்மை மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கும் திறன், வைட்டமின்கள், பயன்தரும் உயிர்வேதிப்பொருட்கள் அதிகமாகவே இருக்கின்றன. மண்ணின் சராசரி கார்பன் அளவு 0.6 முதல் 2.0 விழுக்காடுவரை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் ஐந்து முதல் ஏழு விழுக்காடுவரை குறிப்பிட்ட இடங்களில், பயிர்களில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதாரம் தரும்

இந்தத் தீவுகளில் பல்லாண்டுகளாக வாழும் நிகோபார், சோம்பென், ஓங்கி இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர் தங்கள் தேவை போக மீதமுள்ள அங்கக வேளாண் விளைபொருட்களை உறவினர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த உணவுப் பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, விலங்குகள் நலத்தைப் பேணுவதால் இத்தீவுகளின் உணவு உற்பத்தி மற்றும் வேளாண்மையின் நிலைத்தன்மையை அதிகரிக்கின்றன. எனவேதான் பல்லாண்டுகளுக்கு முன்பு இத்தீவுகளில் கால்பதித்த தமிழகத்தைச் சேர்ந்த சோழர் படைகளும், ஐரோப்பிய வர்த்தகக் கம்பெனிகளும் இம்மக்களின் தன்னிறைவைக் கண்டு அதிசயித்துப் போயினர்.

சிலருக்கான இலாபம் என்றில்லாமல் சம்பந்தப்பட்ட பலருக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் வாய்ப்பாக அங்கக வேளாண்மை அமைந்துள்ளது. எனவே, சந்தைப்படுத்தும் திறனை வளர்த்துக்கொண்டால் அந்தமானில் அங்கக வேளாண்மை ஒரு லாபகரமான இயற்கைவழி தொழிலாகப் பரிணமிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(அடுத்த வாரம்: பல்நோக்கு மரங்களும் கலப்பு பண்ணையமும்)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x