Published : 24 Jun 2017 11:43 AM
Last Updated : 24 Jun 2017 11:43 AM
பஞ்ச காலத்தில் கத்தோலிக்க நிவாரண சேவை என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து உணவு தானிய, பால் மாவு, எண்ணெய்ப் பொருட்கள் வருவதுண்டு. ஒரு கத்தோலிக்க மறை மாவட்டத்தின் தலைமையிடத்தில் இவற்றை இருப்புவைக்கச் சேமிப்புக் கிடங்குகளை அமைத்திருப்பார்கள். தாய்-சேய் நலத் திட்டம், வேலைக்கு உணவுத் திட்டம், பள்ளிகளில் நண்பகல் உணவுத் திட்டம் என்பதாகப் பல பெயர்களில் அவை கடற்கரைக்கும் வரும்.
பால் மாவு
பள்கர் என்ற வேகவைத்து உலர்த்தி உடைத்த கோதுமை, சி.எஸ்.எம். என்ற மக்காச்சோள மாவு, பால் மாவு (அதன் சுவை இன்னும் நாவில் நிற்கிறது), சோயா எண்ணெய்... ஒவ்வொரு பொருளும் ருசியிலும் தரத்திலும் தனித்தன்மை பெற்றவை. பள்கர் துணிப்பைகள் கால்சட்டை தைத்துக்கொள்ளும் அளவுக்குத் தரமானவை. சி.எஸ்.எம்., பால் மாவு காகித உறைகளைத் தூங்குவதற்குப் பாய்போல் விரிப்பாகப் பயன்படுத்தலாம். அல்லது தனித்தனிக் காகித அட்டையாய்ப் பிரித்து எல்லா மாணவர்களும் நோட்டு, புத்தகங்களுக்கு அட்டை போட்டுக்கொள்வோம். சோயா எண்ணெய் வரும் டப்பாக்களில் சிறிது திறந்துவிட்டுக் கிணற்றில் நீரிறைக்க வாளியாய்ப் பயன்படுத்துவார்கள்.
பள்கர், பால் மாவு வேன் ஊருக்குள் வருகிறதென்றாலே சிறுவர்கள் எல்லோரும் மகிழ்ச்சிக் கூக்குரலுடன் அதன் பின்னால் ஓடுவோம். இல்லையில்லை என்று போனாலும், குற்றேவலுக்குக் கூலியாக ஒவ்வொரு பொடியனுக்கும் கைநிறையப் பால் மாவு கிடைக்கும். அண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, அதைச் சப்பிச்சப்பிச் சுவைப்போம். அல்லது வீட்டுக்குக் கொண்டுபோய் அக்காமாரிடம் பால் காய்ச்சித் தரக் கேட்போம். சர்க்கரையின்றிக் குடித்தாலும் காய்ச்சிய பால் சுவையாகத்தான் இருக்கும். அப்போதெல்லாம் சர்க்கரை ஒரு ஆடம்பரப் பொருள்; விழாக் காலங்களில் முழுக் கருப்பட்டியைப் பார்ப்பதே ஒரு கொண்டாட்டம்தான்!
மரவள்ளி நொறுவை
ஓட்டைக் காலணா வழக்கொழிந்திருந்த காலம். எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த காலமும்கூட. ஒரு காசு, இரண்டு காசுக்கெல்லாம் அப்போது தின்பண்டம் கிடைக்கும். பத்துப் பதினைந்து காசுக்கு ஒரு கிலோ மரவள்ளிக் கிழங்கு கிடைக்கும். இரண்டு கிலோ கிழங்கும் கொஞ்சம் நெத்திலிக் கருவாடும் இருந்தால் குடும்பத்துடன் ஒரு பகலைத் தாண்டிவிடலாம். அது கிடைத்தால் புண்ணியம்.
வெட்டுக்கிழங்கு (நறுக்கி உலர்த்திய மரவள்ளிக் கிழங்கு) எங்கள் காலத்தில் முக்கியமான உணவுப்பொருள். அரை நாள் ஊறவிட்டு வேகவைத்து எடுத்தால், பசி தீர்க்கும் உணவு. நொறுக்குத் தீனியாகத் தேங்காயுடன் அருமையான சேர்மானம் அது. பொடித்து மாவாக்கி உப்பிட்டுப் பிசைந்து பொரித்தால், சுவையான கிழங்கு முறுக்கு. சர்க்கரை வெல்லம், தேங்காய்த்துருவல் கலந்து கொழுக்கட்டையாக, மணிப்பிட்டாக உண்ணலாம். நல்ல உரம் தரும் உணவு – இந்த உலர் மரவள்ளிக் கிழங்கு.
பனையின் தனிச்சுவை
கூனிப் பொடி, பொடி நெத்திலி, காரல் பொடி காலங்களில் இந்த உலர் கிழங்கு மாவுடன் எளிய மசாலாப் பொருட்களைக் கலந்து எங்கள் ஊர்களில் மசாலாக்களி (கிழங்குக் களி / ஆணக் களி) செய்வதுண்டு. ஆணம் என்றால் மீன்குழம்பு என்றும் பொருள்படும். அன்று அரிசியைவிட மலிவான தானிய உணவு கோதுமை. பக்குவமாய் உடைத்துத் திரித்தால் கஞ்சி, சோறு ஆகிய பதார்த்தங்கள் செய்யலாம்.
கோதுமை மாவு தோசை கடற்கரைக்குப் பெரிதாகப் பரிச்சயமாகி இருக்கவில்லை. சப்பாத்தியைக் கேள்விப்பட்டதே இல்லை. கோதுமைச் சோறுடன் சுடச்சுட மீன் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் அற்புதமான பதார்த்தம். ஆனால், பாழும் வயிறு அரிசிச் சோற்றுக்காக அடம்பிடிக்கும்.
நாடார்-நாடாத்திமார் அறுதொலிப் பனங்காய் கொண்டுவருவார்கள். கனிந்த பனம்பழத்தை அரிவாளால் கொத்துக் கொத்தாய்ச் சீவிவைத்தால் அது அறுதொலிப் பனங்காய். கருப்பட்டிக் கரைசலைப் பனம்பழத்தின் மேல் ஊற்றிக் கொதிக்கவிடுவார்கள். ஆறிய பிறகு சாப்பிட்டால், தேவலோக அமிர்தம். இந்தக் கால ஜாம் எல்லாம் தோற்றுப் போகும். பசியடைக்கும் சத்தான உணவு அது. பனங்கொட்டையைப் புதைத்துப் போட்டுவிட்டால் மூன்று மாத காலத்தில் சுவையான சத்து மிகுந்த பனங்கிழங்கு முளைக்கும்.
மாங்கொட்டைப் பண்டம்
நெய்தல் நிலப் பஞ்சத்தைக் கடக்கக் கற்பக மரமாக நின்று உதவியது பனை என்றால், மாமரமும் குறைந்ததல்ல. வடு மாங்காய் முதல் மாங்கொட்டைவரை உணவுப் பொருளாதாரத்தில் முக்கியமானவைதான். காரை போன்ற மீன் இனங்களை வடுமாங்காயுடன் வேகவைத்து உண்பது எல்லோருக்கும் பழகிப்போன ஒன்று. ஆனால், புளியங்கொட்டைபோல மாங்கொட்டைப் பருப்பும் பஞ்சகாலத்தில் ஒரு உணவுப் பண்டமாய் உதவியது என்றால் ஆச்சரியம் தோன்றவில்லையா?
மாங்கொட்டைகளைச் சேகரித்து வெய்யிலில் சில நாள் உலர்த்திவிட்டு, மேல்தோட்டை உடைத்து, பருப்பை எடுத்து வெறுந்தரையில் காய வைப்பார்கள். சுக்குப்போல் உலர்ந்த மாங்கொட்டைப் பருப்பை நீரில் ஊறவிடுவார்கள். அதன் கசப்பு ஏறத்தாழ இறங்கிவிட்ட பிறகு, மீண்டும் வெயிலில் உலர்த்திப் பொடித்து மாவாக்கிவிட்டால் கசப்பு நீங்கிவிடும். அதில் மாப்பண்டங்கள் செய்வார்கள்.
(அடுத்த வாரம்: மச்சம் பிடித்தவனுக்கு மிச்சம் இல்லை )
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும்
கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT