Published : 24 Sep 2016 10:55 AM
Last Updated : 24 Sep 2016 10:55 AM
வேளாண்மை என்ற தமிழ்ச் சொல்லுக்கு ‘உதவி செய்தல்’ என்றே பொருள். விரிவாகப் பார்த்தோமானால் தனக்கு உதவுதல், தனது குடும்பத்துக்கு உதவுதல், அண்டை அயலாருக்கு உதவுதல் என்று இந்த உறவு நீண்டுகொண்டே செல்லும்.
ஒரு வேளாண் பண்ணை என்பது, வெறுமனே செங்கல்களை அடுக்கிக் கட்டப்பட்ட கட்டிடம் போன்ற அமைப்பு (structure) அல்ல. பல்வேறு பிணைப்புகளையும் கண்ணிகளையும் உள்ளடக்கிய இயற்கையைப் போன்ற சிக்கலான ஒரு அமைப்பு (system). ஒரு பண்ணை மண்டலம் என்பது ஒன்றோடு ஒன்று நெருக்கமான தொடர்பைக்கொண்டது. விதை முதல் நீராதாரம், வேளாண்மைப் பணியாளர்கள் என்று இந்தக் கண்ணியானது ஒரு உணவுச் சங்கிலியைப்போல நீண்டுகொண்டே செல்வது. இவற்றில் ஏதாவது ஒன்றைத் துண்டித்துவிட்டால், மற்ற அனைத்தும் இறந்துபோகும். இதைப் புரிந்து கொள்ளாமல் வேளாண் பண்ணை முறையை வெறும் கட்டிடம் போன்ற அமைப்பாகப் பார்த்ததன் விளைவாக, வேளாண்மை இன்றைக்குப் பெருத்த சிக்கலில் சிக்கியுள்ளது.
பண்ணையத்தில் ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கும் அறம் அடிப்படையானது. நிலத்தில் இருந்து விளைச்சலை எடுக்கிறோம் என்றால், அதற்கு ஈடாக நிலத்துக்கு எருவைக் கொடுக்கிறோம். எடுப்பதும் கொடுப்பதும் இங்கு இன்றியமையாதது. எடுக்க மட்டுமே செய்வேன் என்றால் எதுவும் நடக்காது. ஆக, இயல்பாகவே கொள்வினையும் கொடுப்பினையும் ஒரு அறமாக இதில் வளர்ந்துள்ளது.
பராமரிப்பு முக்கியம்
அதேபோலப் பேணுதல் (பராமரிப்பு) என்றொரு அறம் அல்லது நெறியும் இங்குப் பின்பற்றப்படுகிறது.
'நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்' என்கிறார் வள்ளுவர்.
எதையும் பேணாமல் விட்டுவிடும் ஒருவரை பேதை என்று கடிந்துகொள்கிறார் அவர். பேணுவதில் தலையாயது நீரையும் நிலத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இயற்கை ஒவ்வொரு நாளும் தனது குழந்தைகளான உயிரினங்களைப் பேணி காக்கிறது. இப்படித்தான் நுண்ணுயிர்கள் தொடங்கி மானுடக் குலம் வரைக்கும் இயற்கை ஒவ்வொரு கட்டமாக வளர்த்துவந்துள்ளது. இந்தப் பேணுதல் செயல்பாடே பரிணாமமாக மாறியுள்ளது. ஆகவே மண்ணைப் பேணுதல், நீரைப் பேணுதல் என்பதுடன் உயிர்களைப் பேணுதல் என்பதும் வேளாண் பண்ணை முறையின் ஒரு அவசியச் செயல்பாடே. இதன் தொடர்ச்சிதான் பல்லுயிர் ஓம்பும் பண்பாடும். இந்த அம்சங்களை அடிப்படையாகக்கொண்டே நீடித்த பண்ணையை உருவாக்க முடியும். அதற்கான வழிமுறைகளையும் கோட்பாடுகளையும் அடுத்தடுத்த பகுதிகளில் விரிவாகக் காண்போம்.
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் ஏன்? வளமான நிலமோ அல்லது பண்ணையோ ஒரு சமூகத்துக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் கொடுக்க முடியும். 'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி' என்று கூறும் திருக்குறள், நீரைத் தன்னகத்தே கொண்ட மணற்படுகை வேண்டிய நீரைப் போதிய அளவுக்குக் கொடுக்கும் என்பது பொருளைத் தருகிறது. ஆனால், அந்த மணற் படுகையை முற்றிலும் அழித்துவிட்டோமானால், மணற்கேணியில் நீர் கிடைக்காது. அதுபோலவே ஓர் இயற்கை வழியில் அமைந்த தற்சார்புப் பண்ணை என்பது எடுக்க எடுக்க அமுதசுரபிபோலக் குறைவின்றிப் பலன் கொடுக்கும். ஆனால், அந்தப் பண்ணையின் ஆதாரக் கூறுகளை அழித்து உடனடி பண வேட்டையில் இறங்கினால், அது தனது பலன்களையும் வளங்களையும் நிறுத்திவிடும். 'பொன்முட்டையிடும் வாத்தை அறுத்த' கதைபோல ஆகிவிடும். ஆகவே, இந்த நீடித்த தன்மையை மனத்தில் கொண்டு பண்ணையத்துள் இறங்க வேண்டும். அதனால்தான் நீடித்த வேளாண் பண்ணை முறையை விளக்கும் இந்தத் தொடர் தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் என்று வழங்கப்படுகிறது |
(அடுத்த வாரம்: இயற்கை என்னும் பேராசான் )
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT