Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM
தமிழக கோயில்கள் மற்றும் மடங்களில் இருக்கும் 43 யானைகளில் பெரும்பாலான யானைகளுக்கு எலும்புருக்கி மற்றும் சுவாச நோய்கள் உள்ளன. இந்நிலையில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் காடுகளில் மருத்துவர் கண்காணிப்புடன் சுதந்திரமாக சுற்றித்திரியும் 47 யானைகளையும் கோயில் யானைகளுடன் சேர்த்து வரும் 19-ம் தேதி ஒரே முகாமில் பராமரிப்பதால் காட்டு யானைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
வரும் 19-ம் தேதி மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் தொடங்குகிறது. இதுநாள்வரை கோயில் யானைகளுக்கு மட்டுமே முதுமலை தெப்பக்காட்டில் முகாம் அமைக்கப்பட்டு, பராமரிப்புகள் மற்றும் புத்துணர்வு சிகிச்சைகள் அளிக்க ப்பட்டன. ஆனால், இம்முறை 43 கோயில் யானைகளுடன் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 47 காட்டு யானைகளையும் ஒரே முகாமில் பரா மரிக்க திட்டமிட்டுள்ளது வனத்துறை.
தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் அடிக்கடி புகுந்த யானைகள் மற்றும் கும்கி யானைகளை முதுமலை (24 யானைகள்), டாப்ஸ்லிப் (21 யானை கள்) மற்றும் சிறுவாணியில் (2 யானைகள்) வைத்து வனத் துறையினர் பராமரித்து வருகின்றனர். மேற்கண்ட பராமரிப்பு முகாமில் கால்நடை மருத்துவர்கள் கண்காணிப்புடன் காட்டு யானைகளுக்கு சிறந்த உணவுகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் தனி பாகன்கள் மற்றும் துணை பாகன்கள் உள்ளனர். இந்த யானைகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை. இவை பெயருக்கு முகாமில் இருந்தாலும் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
யானைகளுக்கான நோய்கள்
யானைகளுக்கான நோய்களில் இரு வகைகள் உள்ளன. ஒன்று கண்புரை, பாதரோகம், தோல் நோய் போன்றவை. இன்னொன்று காச நோய், கோமாரி, வயிறு அடைப்பான் (ஆந்தராக்ஸ்), தொண்டை அடைப்பான், ரேபிஸ், குடல் டைபாய்டு போன்றவை. இவை பரவக்கூடியவை. சேலம் யானை ராஜேஸ்வரிக்கு காசநோய், ஈரோடு யானை பவானிக்கு கோமாரி, மதுரை யானை மதுர வள்ளிக்கு கோமாரி, பாதரோகம் என பெரும்பாலான கோயில் யானைகளுக்கு பரவக்கூடிய நோய்கள் இருக்கின்றன. தவிர, கோயில் யானைகள் அனைத்துக்குமே தீவிர நோய் அல்லாத ஆனால், மனிதர்கள் மூலம் தொற்றிய நோய் கிருமிகள் எப்போதுமே உடலில் உண்டு. மேலும் காட்டு யானைகளுக்கும் herpes virus உண்டு.
நோய்த் தொற்று
இந்நிலையில் காட்டு யானைகளுடன் கோயில் யானைகளையும் ஒரே முகாமில் வைத்து பராமரித்தால் காட்டு யானைகளுக்கு கோயில் யானைகளின் தொற்று நோய் கட்டாயமாக பரவும். 47 காட்டு யானைகளுக்கு நோய் பரவுவதன் மூலம் தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பெரும் வனப்பகுதிகளில் இருக்கும் காட்டு யானைகளுக்கும் நோய் பரவும் வாய்ப்பு இருக்கிறது.
முரட்டு யானைகள்
தவிர, தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 47 காட்டு யானைகளில் 35 ஆண் யானைகள். இவை முரட்டுத்தனமாக இருப்பதுடன் காட்டு விலங்கின் பழக்கவழக்கங்களை மட்டுமே கொண்டவை. லாரியில் ஏற மறுக்கும் கோயில் யானைகளை முகாமுக்கு அழைத்துவர வேண்டாம் என்று தற்போது தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோயில் யானைகள் லாரியில் ஏற மறுக்கும்போது வனத்துறையில் இருக்கும் (கும்கிகளை தவிர்த்து) காட்டு யானைகள் எப்படி லாரிகளில் ஏறும்? இதனால், அவை மூர்க்கம் அடைவதுடன் மனிதர்களையும் பிற யானைகளையும் கொல்ல அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது வனத்துறையில் இருக்கும் சில அதிகாரிகள், புத்துணர்வு முகாமில் யானைகளின் எண்ணிக்கையை அதிகரித்து சாதனையாக காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இம்முடிவுகளை எடுத்திருப்பதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, முதல்வர் உடனடியாக தலை யிட்டு காட்டு யானைகளை முகாமுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
ஜனவரி மாதமே சரியான காலம்
மேட்டுப்பாளையம் முகாமில் மர நிழல்கூட கிடையாது. மேலும் அங்குள்ள ஆற்றுப் படுகையில் மனிதர்களின் புழக்கம் அதிகம். அப்பகுதியில் மனித நடமாட்டங்களும் அதிகம். எனவே, இம்முகாமின் இடத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டும். கோமாரி நோய் வேகமாக பரவி வரும் காலகட்டம் இது. பனிக்காலம் முடியும்வரை இந்நோயின் தீவிரம் குறையாது. அதனால்தான், கால்நடைத் துறை ஆடு, மாடுகள் ஒன்றுகூடும் சந்தைகளே தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடுகளே ஒன்றுகூடக்கூடாது என்ற நிலையில் யானைகளை ஒன்றாக சேர்ப்பது மிகப் பெரும் தவறு. எனவே, காட்டு யானைகளைத் தவிர்த்த கோயில் யானைகளுக்கு மட்டுமான முகாமை ஜனவரி மாத இறுதியில் நடத்துவதே ஆரோக்கியமானதாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT