Published : 28 Oct 2014 12:58 PM
Last Updated : 28 Oct 2014 12:58 PM

குன்றாத பசுமையுடன்...

கிழக்குக் கடற்கரைச் சாலை பயணம் என்ற உடனே பலரது மனதில் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அந்த உற்சாகத்தை இரண்டு மடங்காக்கும் வகையில் பாலவாக்கத்தில் இயற்கை உணவுப் பொருட்களை விற்பனை செய்துவருகிறது அறுவடை இயற்கை அங்காடி. அங்கே ரசாயனமில்லா நொறுக்குத்தீனி, இனிப்பு வகைகளில் கொஞ்சம் வாங்கிக்கொண்டு புறப்பட்டால் சத்தான , இனிமையான பயணமாக அது அமையும்.

அறுவடை செய்த பொருட்களை நேரடியாகக் கடைக்குக் கொண்டுவந்து விற்பனை செய்வதால், ‘அறுவடை இயற்கை அங்காடி' என்ற பெயரும் இக்கடைக்குப் பொருத்தமாக உள்ளது. சொந்த நிலத்தில் பயிரிடப்பட்ட ரசாயனம் இல்லாத கீரை, காய்கறிகள், உணவுப் பொருட்கள், பால், முட்டை ஆகியவை அறுவடை இயற்கை அங்காடியின் சிறப்பு.

இயற்கை நொறுக்குத்தீனி

ஆர்கானிக் என்றால் அரிசியே சாப்பிடக் கூடாது என்றில்லை. பாலிஷ் பண்ணாத அரிசியைக் கொஞ்சமாகச் சாப்பிடலாம். இட்லிக்கான அரிசியுடன் கம்பு,சோளம் போன்ற சிறுதானியங்களைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

“அதேநேரம், இயற்கை அங்காடியில் சிறுதானியங்கள் மட்டும் வைத்திருந்தால், மக்களுக்கு அவற்றின் மீது பெரிய ஈர்ப்பு இருக்காது. இயற்கை விவசாயப் பொருட்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை வைத்திருக்கிறோம்”என்கிறார் அங்காடியின் உரிமையாளர் சதீஷ்.

இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தினை உருண்டை, சாமை காரச்சேவு, பலவிதமான ஊறுகாய்கள், உடனடி கலவை சாதப் பொடிகள் போன்றவை இங்கே கிடைக்கும் வித்தியாசமான பொருட்கள்.

ஆரோக்கியமான சந்ததி

“என் குழந்தைக்குச் சிறு வயதில் இருந்தே ரசாயனமில்லா உணவு வகைகளைக் கொடுத்துப் பழக்க வேண்டும், ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக இங்கே வாங்க ஆரம்பித்தேன். இங்கே கிடைக்கும் கடலை உருண்டை, தினை உருண்டை குழந்தைகளுக்குப் பிடித்திருக்கிறது. அதனால், தொடர்ந்து வாங்கி வருகிறேன்” என்கிறார் வாடிக்கையாளர் மிதுலா (30).

இரண்டு அம்சங்களுக்காக மக்கள் இயற்கை அங்காடியைத் தேடி வருகின்றனர். ஒன்று நோயால் அவதிப்படும் முதியவர்களுக்கு ஆரோக்கியம் தர, மற்றொன்று வருங்காலச் சந்ததியான குழந்தைகளின் உடல்நலம் நன்றாக இருக்க முன்னெச்சரிக்கை. இந்த இரண்டையுமே இயற்கை அங்காடிகளால் நிச்சயமாகத் தர முடியும் என்கிறார் சதீஷ். சிறப்பான பொருட்கள்: காய்கறி வகைகள், பால், முட்டை, தினை உருண்டை, எண்ணெய் வகைகள்.

தொடர்புக்கு: 95662 64174,
இணையதளம்: www.aruvadai.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x