Last Updated : 18 Jun, 2016 11:48 AM

 

Published : 18 Jun 2016 11:48 AM
Last Updated : 18 Jun 2016 11:48 AM

சூழலைப் பாதுகாக்கும் சமூக வலைதளம்

இணையம் ஆட்சி செலுத்தும் இந்தக் காலத்தில், சமூக வலைதளங்கள் வெவ்வேறு பரிணாமங்களில் பயன்பட ஆரம்பித்துள்ளன. பொதுவாகத் தகவல் பரிமாற்றத்துக்காகப் பயன்பட்டாலும், அவசர காலத்தில் சமூக வலைதளங்கள் கைகொடுத்துள்ளன, மற்றொரு பக்கம் இணைய வழி போராட்டங்களும் அதிகரித்துவருகின்றன.

சென்னையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக இயங்கிவரும் குழுக்கள், ஆர்வலர்களை ஒருங்கிணைக்கப் பேஸ்புக்கை முக்கியக் கருவியாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

மரக்கன்று நடுவது, ஏரிகளைச் சுத்தம் செய்வது, பூங்காக்களைச் சீரமைப்பது போன்ற செயல்பாடுகளைச் சென்னை டிரெக்கிங் கிளப் (CTC), என்விரான்மெண்டல் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா (EFI), நம்ம டீம் உள்ளிட்ட குழுக்கள் ஒருங்கிணைத்து வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த அமைப்புகள், வார இறுதிகளில் களச் செயல்பாடுகளில் இறங்குகின்றன. அதற்கு பேஸ்புக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

இது நம்ம டீம்

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பிரவீன் பெருமாளும் அவருடைய நண்பர்களும் 2014-ம் ஆண்டில் ‘நம்ம டீம்’ என்ற பேஸ்புக் குழுவை ஆரம்பித்தனர். சமூக விழிப்புணர்வுப் பிரசாரங்கள், சுற்றுச்சூழல் பராமரிப்பு, மருத்துவ முகாம்கள் போன்றவற்றை அந்தக் குழு சார்பில் நடத்திவந்தனர். பத்து பேர் கொண்ட குழுவாகத் தொடங்கிய இவர்களுடைய பயணம், இன்றைக்கு 130 தன்னார்வலர்களுடன் வளர்ந்துள்ளது.

“மக்கள்தொகை மிகுந்த நம் நாட்டில் ஒவ்வொருவருடைய பொறுப்பின்மை, கவனக்குறைவு காரணமாகவே பூமியை மாசுபடுத்திட்டு இருக்கோம். அதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே ‘நம்ம டீம்’-ஐ உருவாக்கினோம். வேலைச் சுமைகளுக்கு நடுவுல, சென்னையின் வெவ்வேறு பகுதிகள்ல வாரம் ஒரு முறை சுற்றுச்சூழல் பராமரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துறோம்.

இதற்குத் தன்னார்வலர்கள் மட்டுமில்லாம, அப்பகுதி மக்களையும் பங்கெடுக்க வைக்கணும். அதனால பலரைச் சென்றடைவதற்காகவே பேஸ்புக் குழுவை உருவாக்கினோம். அதன் மூலமா பலரும் பங்கெடுத்தாங்க, அப்படித்தான் எங்கள் குழு வளர்ந்தது” என்கிறார் பிரவீன்.

ஏரி காக்கும் அமைப்பு

கூகுள் நிறுவனத்தில் பார்த்த வேலையைத் துறந்துவிட்டு அருண் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலமாக என்விரான்மென்டல் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குழு 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஏரிகளைத் தூர்வாருதல், சீரமைக்கும் பணிகளில் இந்தக் குழு ஈடுபட்டுவருகிறது. இந்தக் குழுவின் பேஸ்புக் பக்கத்தை 13,000 பேர் லைக் செய்துள்ளனர்.

குழு உறுப்பினர்களைத் தவிர, சுற்றுச்சூழல் பராமரிப்புப் பணியில் பங்கெடுக்கப் பகுதி மக்களுக்கும் இந்த அமைப்பு அழைப்புவிடுக்கிறது. இந்த அமைப்பின் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு முன்னதாக, பேஸ்புக் அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றன.

“இ.எஃப்.ஐ.யை தொடங்கியபோது இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, பேஸ்புக்குக்குள் நுழைந்த பிறகு இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. பேஸ்புக்கில் இடப்படும் பதிவுகள் மூலம் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்றாலும், பேஸ்புக் மூலம் தாங்களாகவே அறிந்துகொண்டு நிறைய பேர் உறுப்பினர்களாக எங்களிடம் சேர்ந்துள்ளனர்.

ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்த பிறகும் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி கூறிப் பதிவிட்டு, அடுத்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பையும் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவோம். இப்படிச் செய்வது ஆர்வலர்களைப் பெரிதாக ஊக்குவிக்கிறது’’ என்கிறார் என்விரான்மெண்டல் பவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் தன்னார்வலர் கல்லூரி மாணவர் ஷருண்.

பின்தொடரும் 34,000

சென்னையைச் சேர்ந்த டிரெக்கிங் ஆர்வலர்களால் 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது சென்னை டிரெக்கிங் கிளப் (சி.டி.சி.). டிரெக்கிங் பயணங்கள், சைக்கிளிங், ஏரிகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் ரத்ததான முகாம்கள் போன்ற நிகழ்ச்சிகளை இந்த அமைப்பு தொடர்ந்து நடத்திவருகிறது.

பல குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு இடங்களில் தொண்டாற்றி வருகிறது சென்னை டிரெக்கிங் கிளப். சென்னை டிரெக்கிங் கிளப் பேஸ்புக் குழுவை 34,000-த்துக்கும் மேற்பட்டோர் பின்பற்றுவதிலிருந்து, அந்த அமைப்புக்கு உள்ள பிரபலத்தை அறிந்துகொள்ளலாம்.

“சி.டி.சியில சுற்றுச்சூழல் பராமரிப்புக்காக ஐந்திணை குழுவும், ரத்தத் தான முகாம்கள் நடத்துவதற்காக ‘ரெட் நைட்ஸ்’ குழுவும் இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்கள் வாரந்தோறும் பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இந்த இடத்தில்தான் பேஸ்புக் பெரிதும் உதவுகிறது.

ஒரு குழுவுல இருக்கவங்க இன்னொரு குழுவுல நடக்கிற நிகழ்ச்சிகளைப் பத்தி, ஒரே பக்கத்துல தெரிஞ்சுக்கலாம். பேஸ்புக் மூலமா ஷேர் செய்யப்படும் போட்டோக்கள் விழிப்புணர்வு பரவலாவதற்குப் பெரிதும் உதவுது. களப்பணிக்கு வரத் தயாரா முகம் தெரியாத பலர் பேஸ்புக் மூலமாதான் விருப்பம் தெரிவிக்கிறாங்க.” என்றார் சி.டி.சியின் தன்னார்வலரான கல்லூரி மாணவி நீலாம்பரி.

இப்படியாகச் சுற்றுச்சூழல் பராமரிப்புக்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் கருவியாகவும் பேஸ்புக் பயன்பட்டு வருகிறது. மெய்நிகர் உலகில் மட்டுமே உலவுபவர்கள் நேரடியாகக் களத்துக்கு வந்து செயல்படவும் இதுபோன்ற சமூக வலைதளங்கள் சிறிதளவாவது உதவுவது ஆக்கப்பூர்வமான விஷயம்தான்.

பேஸ்புக் பிரசாரம்

பேஸ்புக்கில் இயங்கும் சுற்றுச்சூழல் குழுக்கள் ஒளிப்படங்கள், விழிப்புணர்வு வீடியோக்களைத் தொடர்ந்து பதிவு செய்துவருகின்றன. அவை லைக் செய்யப்பட்டு, பகிரப்படும்போது மேலும் பலரைச் சென்றடைகின்றன. சுற்றுச்சூழல் பராமரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்தையும் குழுவையும் ஒருவர் பின்தொடரலாம். நிகழ்ச்சி குறித்த விவரங்கள் பேஸ்புக் அறிவிப்பு பலகை மூலமாக வந்துகொண்டிருக்கும்.

பேஸ்புக் நிகழ்வுகள்

ஒரு நிகழ்ச்சியின் முழு விவரத்தையும் அளிக்கக் கூடியவை பேஸ்புக் நிகழ்வுகள். நிகழ்ச்சி குறித்த அறிமுகம், நிகழ்ச்சி நடைபெறும் நாள், இடம், கால நேரம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்பு எண்கள் போன்றவை இதில் தரப்பட்டிருக்கும்.

பேஸ்புக் அழைப்பு

குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் கலந்துகொள்ளும்படி இதன் மூலம் அழைப்பு விடுக்கலாம், நிகழ்ச்சி நடக்க இருப்பதைப் பலருக்கு நினைவூட்டலாம். குறிப்பிட்ட இடத்தில் நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சி நண்பர் வசிக்கும் இடத்துக்கு அருகே இருந்தால், அவர்களுக்கும் பரிந்துரைக்கலாம்.

பேஸ்புக் நினைவூட்டி

நிகழ்ச்சி நடைபெறும் நாள் அன்றும், ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவும் நமக்கு இது நினைவுபடுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x