Published : 20 Jun 2015 12:57 PM
Last Updated : 20 Jun 2015 12:57 PM
குளிர் பகுதிகளில் விளையும் பீட்ரூட்டை, தன்னிடம் உள்ள குறைந்த அளவு நிலத்தில் பயிரிட்டு லாபம் பார்த்துவருகிறார் சின்னமனூர் விவசாயி.
பீட்ரூட், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய கண்டத்தில் பரவலாகி இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. பீட்ரூட்டில் கால்சியம், இரும்பு, நார்ச்சத்து போன்றவை உள்ளன. பீட்ரூட் சாப்பிடுவதால் வயிற்றுப்புண், மலச்சிக்கல் கட்டுப்படும். கொழுப்பைக் குறைத்து, இதயக் கோளாறுகளைத் தடுத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் தன்மையும் பீட்ரூட்டுக்கு உண்டு. எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதுடன், கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையையும் இது வெளியேற்றுகிறது. இப்படி பீட்ரூட் கிழங்கின் அருமைகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
இலையைச் சாப்பிடலாம்
பொதுவாகச் சமைக்கும்போது காய்கறிகளின் சத்து குறைந்துவிடும். ஆனால் பீட்ரூட்டைச் சமைக்கும்போதும், அதன் சத்து குறைவதில்லை. மருத்துவக் குணம் கொண்ட அதன் இலைகளிலும் காயில் உள்ள சத்து நிறைந்திருப்பதால், கீரையைப் போல் இலைகளைச் சமைத்துச் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் பகுதிகளில் பீட்ரூட் விளைவிக்கப்பட்டுவந்தது. தற்போது, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் விளைகிறது.
சின்னமனூர் அப்பியபட்டிக்குச் செல்லும் சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ஏக்கர் நிலத்தில் பீட்ரூட் சாகுபடி செய்து லாபம் சம்பாதித்துவருகிறார் விவசாயி டி. முத்து. பீட்ரூட் சாகுபடி நுட்பங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.
சந்தைப்படுத்துவது எளிது
"ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய 7 கிலோ தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். பீட்ரூட்டுக்குக் கரிசல் மண் ஏற்றது. இயற்கை உரம் இட்டு விதைத்த 20 நாட்கள் கழித்து, மருந்து அடிக்க வேண்டும். அதிகமாகத் தண்ணீர் தேவைப்படும் என்பதால் சொட்டுநீர் பாசனம் உகந்தது. வெயில் அதிகமாக இருக்கக் கூடாது. அதனால், கோடைக் காலத்தில் விளைச்சல் குறைவாகத்தான் இருக்கும்.
மற்றப் பருவகாலங்களில் இதைச் சாகுபடி செய்வது நல்லது. சில நேரம் தண்டுபுழுத் தாக்குதல் இருக்கலாம். அந்த நேரத்தில் இரண்டாவது முறையாக மருந்து தெளித்துவிட்டால், நோய் கட்டுப்படும். 45 நாட்கள் கழித்து 2-வது முறையாக உரம் இட்டால் நல்ல விளைச்சல் கிடைக்கும். குறுகிய காலச் சாகுபடியான இது 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
ஒரு ஏக்கரில் 2,000 கிலோவரை காய் வரத்து கிடைக்கும். மார்க்கெட்டில் சராசரியாக ஒரு கிலோ ரூ.15 என விலை போகும்.
முதன்முறை சாகுபடிக்குக் குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் செலவு ஏற்படும். அடுத்தடுத்த சாகுபடிகளுக்குச் செலவு குறைந்துவிடும். செலவு போக, எப்படிப் பார்த்தாலும் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும். இதை உள்ளூர் வியாபாரிகளே நேரடியாக வந்து வாங்கிச் சென்றுவிடுவதால் சந்தைப்படுத்துவது எளிது" என்கிறார் முத்து.
விவசாயி டி.முத்து, தொடர்புக்கு: 8883948062
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT