Published : 02 Dec 2013 12:00 AM
Last Updated : 02 Dec 2013 12:00 AM
தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குந ரான சுப்புராமன், திருச்சி உறையூர் ராமலிங்க நகர் விஸ்தரிப்பில் சூழல்நேய இல்லத்தைக் கட்டி பலருக்கு நல்ல முன்னுதாரணமாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். வீடு கட்டும் ஒவ்வொருவரும் கூடுதலாக ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் செலவு செய்தால் அவரவர் வீட்டில் உருவாகும் கழிவுகளை மறு சுழற்சி செய்து பயனுள்ளதாக மாற்றி பொருளாதார ரீதியில் பணம் சம்பாதிக்கவும் அல்லது செலவுகளை மிச்சப்படுத்தவும் முடியும் என்கிறார் இவர்.
இவரது இல்லத்தில் குடிக்க, சமைக்க முழுக்க மழைநீர்தான் பயன்படுத்தப்படுகிறது. ரூ.22 ஆயி ரம் செலவில் வீட்டின் மேற்புறத்தில் மழைநீர் சேகரிப்பு கலன்களும் சுத்திகரிப்புக் கருவிகளும் அமைத்திருக்கிறார். 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமிப்புக் கலன் குடிநீருக்காகவும், சுத்திகரித்தது போக மீதி மழைநீரை சேகரிக்க 15 ஆயிரம் லிட்டர் கலன் ஒன்றும் பொருத்தி குளிப்பது, துவைப்பது போன்ற தேவைகளுக்குப் பயன் படுத்திக் கொள்கிறார். தனது தண்ணீர் தேவைகளை பெருமளவு வீணாகப் போய் கழிவுநீர் சாக்கடையில் சேரும் மழைநீரைக் கொண்டு பூர்த்தி செய்துகொள்வதால் நிலத்தடி நீர் பயன்பாடும் அந்த நீரை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கொண்டு சென்று சேர்ப்பதற்காக செலவளிக்கும் மின் கட்டணமும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. மாதத்துக்கு குடிநீர் கலன் வாங்க செலவிட்ட ரூ.200-ம் மிச்ச மாகிறது.
மழைநீர் உறிஞ்சுக் குழிகள்
வீட்டின் சுற்றுப்பகுதிகளில் ஐந்து மழைநீர் உறிஞ்சுக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. சொந்த உபயோகத்துக்குச் சேமித்தது போக மீதமுள்ள மழைநீர் இந்தக் குழிகள் வழியே பூமிக்குள் சென்று நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவுகிறது. குளியலறை, சமையலறைக் கழிவுநீர் ரூ.2 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட ஒரு சுத்திகரிப்பு இயந்திரத்துக்குள் சென்று வெளிவருகிறது. அங்கே அதன் ரசாயனக் கழிவுகள் பெருமளவில் நீக்கப்பட்டு தோட்டத்தில் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு வந்து சேருகிறது. இந்த வீட்டில் உருவாகும் திரவநிலைக் கழிவுகள் ஒரு துளிகூட வெளியே செல்லாமல் அந்த வீட்டுக்குள்ளேயே சுத்திகரித்து நிலத்தடி நீர் செறிவூட்ட வும், தோட்டத்தில் உள்ள தாவரங்க ளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
8 நாட்களுக்கான எரிவாயு
அந்த வீட்டின் ஒரு பகுதியில் ரூ.24 ஆயிரம் செலவில் ஒரு இயற்கை எரிவாயுக் கலன் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் சேகரமாகும் உணவுக் கழிவுகள் சமையலறையிலிருந்து கூழ்மநிலை யில் இந்தக் கலனுக்குள் செல்லு மாறு வடிவமைத்துள்ளனர். அந்த இயற்கை எரிவாயு காரணமாக எட்டு நாட்களுக்கான எரிவாயு தேவை மிச்சமாவதாக சொல்கிறார் சுப்புராமன்.
“விடுதிகள், பலர் வசிக்கும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்களில் இப்படி செய்தால் அவர்களுக்கு எரிவாயு செலவு குறையும். அதோடு சுற்றுச்சூழலை நாசமாக்காத நன்மையும் வந்துசேரும்” என்கிறார் இவர்.
நாப்கின்களை அழிக்க...
பெண்கள் உபயோகிக்கும் நாப்கின்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை யாரும் கழிவறைகளில் செய்வதில்லை. பல பெண்கள் அதை கழிவறை குழாய்களுக்குள் போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். இதனால் புதைசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு பெரும் சிக்கல் உண்டாகிறது. ஒவ்வொருவரும் ஒரு மூவாயிரம் ரூபாய் செலவு செய்தால் நாப்கின்களை யாருக்கும் பாதிப்பு இல்லாதவாறு பத்திரமாக அழித்து விடலாம் என்கிறார் சுப்புராமன்.
இவரது வீட்டு கழிவறையில் “நாப்கின் போடும் இடம்” என எழுதப்பட்ட இடத்தில் ஒரு துளை இருக்கிறது. அதில் பயன்படுத்திய நாப்கின்களை போட்டுவிட்டு வெளியே வந்து விடவேண்டியதுதான். யாருக்கும் நாப்கின் இருக்குமிடம் தெரியாது. அது ஒரு தொட்டி வடிவில் கட்டப்பட்ட இடத்துக்குப் போய்விடும். பிறகு வெளிப்புறத்தில் அந்த துளைக்குக் கீழே உள்ள அடுப்பைப் பற்ற வைத்தால் சில விநாடிகளில் நாப்கின் எரிந்து சாம்பலாகி விடுகிறது.
மக்கும், மக்காத குப்பைகள்
வீட்டின் முன்புறம் 2 சிமென்ட் தொட்டிகள் உள்ளன. ஒன்றில் மக்கும் குப்பைகளும் மற்றொன்றில் மக்காத குப்பைகளும் சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. மக்காத குப்பைகளை துப்புரவுத் தொழிலாளர்கள் பெற்றுச் சென்று அதை விற்று காசாக்கிச் செல்கின்றனர்.
இந்த சூழல் நேய இல்லத்தைப் பார்வையிடவும் அதன் சிறப்புகளைத் தெரிந்துகொள்ளவும் சில கட்டுமான நிபுணர்கள், அரசு அதிகாரிகள் வந்துசென்றவண்ணம் உள்ளனர்.
புதிதாக வீடுகட்டிக் கொண்டி ருப்பவர்களும், வீடுகட்ட நினைப்ப வர்களும் இந்த வீட்டை நேரில் சென்று ஒருமுறை பார்த்து வருவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment