Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியனின் புதிய முயற்சி.
இயற்கையாக வளரும் மாங்குரோவ் செடிகளைச் செயற்கை முறையில் நட்டு வளர்த்து அதில் அடுத்த சாதனையாக கல்நண்டுகளை வளர்த்து இரட்டைச் சாதனை படைத் திருக்கிறார் இந்த இளஞ்செழியன்.
புதிய மாற்றங்களுக்கு வழி
இந்தியாவில் கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடற்கரையோரத்தில் செயற்கை முறையில் மாங்குரோவ் காடுகள் வளர்ப்பும், அதில் கல்நண்டு வளர்ப்பும் இதுதான் முதன்முதலான மற்றும் புதிய முயற்சி. இது வெற்றி பெற்றிருப்பது இனிவரும் காலங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு வழிவகுப்பதாக அமையும்.
இளஞ்செழியன் தன்னுடைய 1 ஏக்கர் நிலத்தில் சதுப்பு நிலக்காடு (மாங்குரோவ் செடிகள்) நட்டு கடந்த 7 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். செடிகள் வளர்ந்து பெரிதானவுடன் 10 மாதங்களுக்கு முன் அதில் 3 கிராம் எடை கொண்ட 6 ஆயிரம் கல்நண்டு குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தார். தற்போது அவை ஒவ்வொன்றும் 800 கிராம் எடையுடன் பெரிதாக வளர்ந்து அவருக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்துள்ளன.
அவிசின்யா, ரைசோபோரா
இறால், கல்நண்டு, கொடுவா மீன் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இளஞ்செழியன். புளியந்துறை கடற்கரையோரத்தில் கடந்த 2006-ம் ஆண்டு இவருக்குச் சொந்தமான சுமார் 1 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் உதவியுடன் சதுப்பு நிலத்தில் அவிசின்யா, ரைசோபோரா ஆகிய மாங்குரோவ் செடிகளை நட்டு வளர்த்து வந்தார். அதில்தான் கல்நண்டு வளர்ப்பையும் மேற்கொண்டு தற்போது சாதனை படைத்திருக்கிறார்.
இந்தச் சாதனையை உலகறியச் செய்ய திங்கள்கிழமை கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து கல்நண்டு அறுவடைத் திருவிழாவைத் தொடங்கினார்.
விழாவில் கடல் பொருள் ஏற்றுமதி ஆணையத்தின் துணை இயக்குநர் வில்சன், உதவி இயக்குநர்கள், பேராசிரியர்கள் மற்றும் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் கதிரேசன், கல்நண்டு வளர்ப்பு ஆராய்ச்சியாளர் அஜ்மல்கான் உள்பட ஏராளமான தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.
ஒரு கிலோ கல்நண்டு ரூ.1,200
1 கிலோ எடைகொண்ட ஒரு கல்நண்டு 1,200 ரூபாய் வரையிலும் விலை போவதால் இந்த முயற்சி மிகப்பெரிய வரவேற்பை கடல்வாழ் உயிரின வளர்ப்பு ஆர்வலர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. 3 சதவிகிதம்தான் கல்நண்டு குஞ்சுகள் பிழைக்கும் என்ற நிலையையும் மாற்றி 15 சதவிகிதம் குஞ்சுகள் பிழைத்து வளர்ந்து கை கொடுத்திருப்பதும் ஒரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT