Last Updated : 04 Feb, 2017 09:14 AM

 

Published : 04 Feb 2017 09:14 AM
Last Updated : 04 Feb 2017 09:14 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 19: பண்ணை வடிவமைப்பில் பருவநிலை

காலத்துக்கும் காற்றுக்கும் முதுமை என்பதே இல்லை - பண்ணை வடிவமைப்பில் பருவநிலை பற்றிய அறிவு என்பது மிகவும் இன்றியமையாதது.

கதிரவனின் வெப்பம், காற்றின் தன்மை, ஈரப்பதம், மேகங்களின் போக்கு போன்ற வானிலைக் காரணிகளை வைத்துப் பருவநிலை (Climate) தீர்மானிக்கப்படுகிறது. ஒரு பண்ணையின் போக்கைப் பருவநிலை மாற்றங்கள் தீர்மானிக்கும். மழை, வெயில், காற்று போன்றவை விளைச்சலை மட்டுமல்லாது நோய்களையும் பூச்சிகளையும்கூடத் தீர்மானிக்கும் தகுதி கொண்டவை.

பருவநிலையும் வானிலையும்

வளிமண்டல மாற்றங்களைப் பருவநிலை (Climate) என்றும், வானிலை (Weather) என்றும் பிரிக்கின்றனர். பருவநிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் நெடுங்கால வளிமண்டல வெப்ப, தட்ப மாற்றங்களை வைத்துக் கணக்கிடப்படுகிறது.

குறிப்பிட்ட இடத்தில் வளிமண்டலத்தில் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் வளிமண்டல மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது வானிலை.

ஆகவே, இரண்டு தன்மைகளும் பண்ணையின் வளர்ச்சியில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை. இயற்கையில் நடக்கும் பெரிய நிகழ்வுகள் குறிப்பாக எரிமலைச் சீற்றங்கள், கடல் நீரோட்டங்கள், காடுகளின் அமைப்பு, புவிப் பரப்பில் பண்ணை இருக்கும் இடம் போன்ற காரணிகள் ஓர் இடத்தின் பருவநிலையைத் தீர்மானிக்கும். இவை தவிரப் புவியின் சுழற்சி, நிலவின் வட்டப்பாதை நகர்வு போன்றவையும் பருவநிலையைத் தீர்மானிக்கக்கூடியவை.

பெரும்பருவ நிலையும் நுண்பருவ நிலையும்

அதேநேரம் காற்றின் போக்கும், வெயிலின் தன்மையும், மழையின் அளவும் வானிலையைத் தீர்மானிக்கும் காரணிகளாகும். புவிப்பந்தை அளவாகக்கொண்டு கணிக்கப்படும் பருவநிலையைப் பெரும்பருவநிலை (Macroclimate) என்று குறிப்பிடுகின்றனர்.

விளாதிமிர் கோப்பன் என்ற ரஷ்ய அறிஞர் புவியின் பருவநிலையை வைத்துப் பருவநிலை மண்டலங்களைப் பிரித்துள்ளார். வெப்ப மண்டலங்கள் முதல் குளிர் மண்டலங்கள் வரையிலான வகைப்பாடுகளை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

வெப்ப மண்டலப் பகுதிகளில் (Tropical) 18 பாகை செல்சியஸுக்குக் குறைவாக எந்த மாதமும் இருப்பதில்லை. மிதவெப்ப மண்டல (Temperate) பகுதிகள், குளிர் மண்டலப் பகுதிகளில் 0 டிகிரி பாகை செல்சியஸுக்கும் கீழே குளிர் செல்லும். வறள் மண்டல (Polyhouse) பகுதிகளில் சராசரி மழை அளவு 500 மி.மீ. அளவாக இருக்கும்.

பெரும்பருவநிலை என்பதைப்போலவே நுண்பருவநிலை என்ற ஒன்றும் உள்ளது. ஒரு சில சதுர அடிகள் அல்லது ஒரு சில ஏக்கர் பரப்பளவில் காணப்படும் பருவநிலையை நுண்பருவநிலை என்று குறிப்பிடுகின்றனர். இது பண்ணை வடிவாக்கத்தில் மிகவும் இன்றியமையாதது. இதை நமக்கு ஏற்ற வகையில் நாம் மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

(அடுத்த வாரம்: இழந்துவிட்ட பேரறிவு)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x