Published : 21 Jan 2017 10:51 AM
Last Updated : 21 Jan 2017 10:51 AM
உயிர்கள் எப்போதும் ஓய்ந்திருப்பதில்லை இயங்கிக் கொண்டே இருக்கின்றன – நாம் வாழும் உலகில் ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒரு வகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. அது நேர்முறை மாற்றமாகவும் இருக்கலாம் அல்லது எதிர்முறைத் தாக்கமாகவும் இருக்கலாம்.
அதுபோல ஒரு பண்ணையில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் தனது வாழ்வுக்காக ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருக்கிறது. ஒரு எலி வளை தோண்டிக்கோண்டே இருக்கிறது. ஒரு பறவை கூடு கட்டிக்கொண்டே இருக்கிறது. மாடுகள் புல்லை மேய்ந்துகொண்டே இருக்கின்றன. எதுவும் சும்மா இருப்பதில்லை. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஊருக்கு உழைப்பவை
அது மட்டுமல்லாமல் அவை தங்களுக்காக மட்டும் இயங்குவதில்லை. மற்றவற்றுக்காகவும் சேர்ந்தே பணியாற்றுகின்றன. அது ஒருவகையில் உடன் விளைவாக நிகழ்கிறது. இதற்கு மிக எளிய எடுத்துக்காட்டு, தேனீக்களின் வாழ்க்கை. அவை தமக்காகத் தேனைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. கூடவே மகரந்தச் சேர்க்கைக்கும் உதவுகின்றன, பிற உயிரினங்களுக்கும் உணவைக் கொடுக்கின்றன.
எனவே, இப்படிப்பட்ட உயிர்களின் ஆற்றலையும், இயங்குமுறையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பண்ணையில் நமக்கு யாரும் பகைவர்கள் இல்லை என்ற புரிதலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். யாவரும் ஒரு வகையில் நண்பர்களே. இந்த நண்பர்கள் இல்லாமல் பண்ணையில் நாம் எதையும் சாதித்துவிட முடியாது.
யாருக்கு இழப்பு?
மண்ணுக்குள் நமது கண்களுக்குத் தெரியாமல் வாழும் நுண்ணுயிர்கள் மிக அடிப்படையான வேலைகளைச் செய்கின்றன. தழைச்சத்தைக் காற்றில் இருந்து பிடித்துக் கொடுக்கின்றன; மணிச்சத்தை மண்ணில் இருந்து கரைத்துக் கொடுக்கின்றன; சாம்பல் சத்தைத் திரட்டித் தருகின்றன. இப்படி ஒரு செடிக்குத் தேவையான பலவற்றையும் தமக்காக மட்டுமல்லாது பிறவற்றுக்கும் அவை தருகின்றன.
நாம் பூச்சிக்கொல்லிகளையும், வேதி உப்புகளையும் கொட்டி நுண்ணுயிர்களைக் கொன்றுவிடுகிறோம். அதாவது அவற்றின் இயற்கையான பணிகளைத் தடை செய்கிறோம். இதனால் இழப்பு நமக்கும் சேர்த்துத்தான் என்பதை உணர மறுக்கிறோம்.
எப்படி இணைப்பது?
ஒரு பெரிய மரம் தனக்குத் தேவையான நீரை மண்ணடியில் இருந்து ஆழமான வேர்கள் மூலம் மேலே எடுத்துக்கொண்டுவருகிறது. அதன் மூலம் மண்ணடுக்கில் உள்ள நீரை மேலே கொண்டுவருகிறது. இப்படி மேலே வரும் நீர் பிற செடிகளாலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதாவது ஆழமாக வேர்களை இறக்க முடியாத பயிர்களும் இதனால் பயனைப் பெறுகின்றன. அது மட்டுமல்ல, மரங்கள் உதிர்க்கும் இலைகள், மண்ணக கரிமமாக (மட்காக) மாறிப் பயிர்களுக்கு ஊட்டமாக மாறுகின்றன.
இவற்றை எல்லாம் நுணுக்கமாகப் புரிந்துகொண்டு எல்லாவற்றையும் இணக்கமாக எப்படி இணைப்பது என்பதில்தான் நமது வேலை அடங்கியுள்ளது. ஏற்கெனவே செயல்படும் இயற்கை முறையை முற்றிலும் துண்டித்துவிட்டு, அதற்கு எதிரான ஒரு முறையைப் புகுத்தினால் கால விரயமும் பண விரயமுமே தேவையின்றி ஏற்படும்.
(அடுத்த வாரம்: கையிலிருக்கும் வெண்ணெய்…)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT