Last Updated : 11 Mar, 2014 06:36 PM

 

Published : 11 Mar 2014 06:36 PM
Last Updated : 11 Mar 2014 06:36 PM

மீத்தேன் துரப்பணம்: கண்ணை விற்று வாங்கப் போகும் சித்திரம்

வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். மழையும், மண் வளமும் இல்லாத ஒரு நாட்டில், இதுபோன்ற இயற்கை வளத்தைத் துரப்பணம் செய்வது இயல்பானதுதான். ஆனால், மண்வளமும் மழையும், இயற்கைச் செழிப்பும் நிரம்பிய தஞ்சை தரணியில் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு அத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையை எட்டிவிட்டது. இந்தத் திட்டம் தொடர்பாக அறிவியல்பூர்வமான புரிதல் குறைவாக இருக்கிறது.

இந்நிலையில், பூவுலகின் நண்பர்களும், சேவ் தமிழ்ஸ் இயக்கமும் இணைந்து"மீத்தேன் எடுக்கும் திட்டம் - விளைவுகளும் புரிதல்களும்" என்ற தலைப்பில் சென்னையில் சமீபத்தில் கூட்டத்தை நடத்தின. இத்திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் குழுவின் பிரதிநிதிகளும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் இக்கூட்டத்தில் பேசினர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் கோ.திருநாவுக்கரசு: மீத்தேன் திட்டத்திற்காக 500 அடி முதல் 1,650 அடிவரை, நிலத்தைக் குடைந்து குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. அப்போது உருவாகும் வெற்றிடத்தில், கடல் நீரைவிட ஐந்து மடங்கு உப்பு நீர் சென்று சேரலாம்.

அதுமட்டுமின்றி, ரசாயனக் கலவையோடு வெளியே கொட்டப்படும் இந்த உப்பு நீர், கதிரியக்கம் வாய்ந்ததாக இருப்பதால் நிலத்தை நஞ்சாக்கும். இப்படியாக, வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. தூய்மையான மண்ணும், நீரும், காற்றும் மக்களின் அடிப்படை உரிமை.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் அலிஸ்பாகு: இத்திட்டத்துக்காக ’நீரியல் விரிசல்’ (Hydraulic fracturing) என்றழைக்கப்படும், ஓரிடத்தில் துளையிடப்பட்டு, செருகப்படும் ஆழ்துளைக் குழாய், நீளவாக்கில் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் வரை செல்லக் கூடியது. அதனால் ஏதோ ஓரிடத்தில் துளையிடப்படுவதால், மற்ற இடங்களில் பாதிப்பு இருக்காது என்று நினைக்க முடியாது. இத்திட்டத்தின் முக்கிய இலக்கு கனிம வளம் நிறைந்த காவிரிப் படுகைகளில் கிடைக்கும் நிலக்கரியே.

நேரடியாகத் திறந்தவெளிச் சுரங்கங்கள் அமைத்து நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு முன்பு, இடுக்குகளில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவை உறிஞ்சி எடுப்பதுதான் இத்திட்டத்தில் செய்யப்படப்போகும் முதல் பணி. அதற்கு முன்பு, நிலக்கரிப் படிமங்களின் மீது அழுத்திக் கொண்டிருக்கும் நிலத்தடி நீரை முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும். நிலத்தடி நீரையும் உணவு உற்பத்தியையும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும் இந்தத் திட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளப் பகட்டு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

மக்களுக்குச் சாலை வசதிகள் அமைத்துத் தருவதாகவும் தொழில் வளம் பெருகி மக்கள் செல்வச் செழிப்படைவார்கள் என்றும் பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சுந்தரராஜன்: ஆழ்துளை கிணறுகள் மூலமாகத்தான் மீத்தேன் எடுக்க முடியும் என்பது பொய்யான கருத்து. மனிதக் கழிவுகளிலிருந்துகூட மீத்தேன் எடுக்கலாம். மனிதக் கழிவுகளைக் கையாளுவதில் மனரீதியான சிக்கல்கள் நம்மிடையே இருக்கின்றன. மலத்தை அள்ளும் வேலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினுடையது மட்டும் என்பது போன்ற நமது மனத்தடைகளை அகற்றினால் மட்டுமே, மாற்றுவழிகள் குறித்து நாம் யோசிக்க முடியும்.

சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்: மீத்தேன் திட்டத்துக்குப் பல மாற்று வழிகள் இருக்கும்போது, அரசு ஏன் ஒரு ஆபத்தான திட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும்? உலகமயப் பொருளாதாரக் கொள்கை, எவ்வளவு வேகமாகப் பொருளீட்ட முடியுமோ, அப்படிப்பட்ட வழிமுறைகளையே பின்பற்றுகிறது. ஆய்வுகள் சார்ந்து, மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத மாற்று வழிகளைச் செயல்படுத்த கால அவகாசம் எடுக்கும் என்பதால், அந்த மாற்று வழிகள் குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை. எவ்வளவு வேகமாக இயற்கை வளங்களைச் சூறையாட முடியும், லாபம்

சம்பாதிக்க முடியும் என்று பார்ப்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. இதை Crony Capitalism என்றழைக்கிறார்கள். தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம், விவசாயிகளை முற்றாக ஒழிக்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை அம்பலப்படுத்தினார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் க.மா.இரணியன், காவிரிப் படுகையில் தொடர்ந்து நிறைவேற்றப்படும் சுற்றுச்சூழல் சீரழிவுத் திட்டங்களை கவனப்படுத்தினார். மருத்துவர் இரா.பாரதி செல்வனின் 'மீத்தேன் திட்டம் - கண்ணை விற்றுச் சித்திரமா?' என்ற நூலும் வெளியிடப்பட்டது.மனிதக் கழிவுகளிலிருந்து எரிவாயு எடுக்கப்பட்டு, அதை அன்றாட வீட்டுப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தலாம் என்பதைச் செயல்முறை வடிவில் எடுத்துரைக்கும் காணொளியும் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

இதற்கிடையில், மீத்தேன் துரப்பணத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்துப் பரிசீலிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று தமிழகச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னோட்ட ஆய்வு என்ற பெயரில், வேதாரண்யம் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி 75 சதவீதமும் திருனகிரி பகுதியில் 30 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியும் சட்டவிரோதமாக நடைபெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x