Published : 20 Jun 2015 12:59 PM
Last Updated : 20 Jun 2015 12:59 PM

அமோகக் கால்நடைத் தீவனம் அசோலா

பெரணி வகையைச் சேர்ந்த நுண் தாவரம் அசோலா. கறவை மாடுகளுக்குச் சிறந்த தீவனம். பசுக்களுக்குத் தினமும் இதைக் கொடுத்துவந்தால், 2 லிட்டர் கூடுதல் பால் கிடைக்கும் என்கின்றனர் கால்நடை வளர்ப்பு ஆர்வலர்கள்.

அசோலா என்றால்?

அசோலா என்பது பெரணி வகையைச் சார்ந்த நுண்தாவரம். அசோலாவைக் கால்நடைகள் ருசித்து உண்ணும். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் அமினோ அமிலங்கள், உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தாதுக்களான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய அற்புதச் சக்தி படைத்தது அசோலா. அது மட்டுமல்லாமல் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, புரதச் சத்து நிறைந்தது.

அசோலாவால் என்ன பலன்?

அசோலாவைக் கறவை மாடுகளுக்குக் கொடுக்கும்போது, ஏறத்தாழ இரண்டு லிட்டர்வரை கூடுதலாகப் பால் பெற முடியும். கறவை மாடுகள் மட்டுமின்றி முயல், பன்றி, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, மீன் போன்றவையும் விரும்பி சாப்பிட்டால், எடை கூடும். கோழிகளுக்கு அசோலா கொடுக்கும்போது முட்டையிடுவது அதிகரித்து, உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

அசோலாவை முதன்முதலில் கறவை மாடுகளுக்குக் கொடுக்கும்போது தினம் 100 முதல் 200 கிராம் என்ற அளவில் ஆரம்பித்து, படிப்படியாக 1 முதல் 1½ கிலோ வரை கொடுக்கலாம்.

அசோலா வளர்ப்பது எப்படி?

முதலில் 5-க்கு 6 அடி நீளமும், 3-க்கு 4 அடி அகலமும் ஒன்று முதல் 1½ அடி வரை ஆழமும் கொண்ட குழிகளை வெட்டிக்கொள்ள வேண்டும். அதனுள் கெட்டியான பிளாஸ்டிக் பேப்பர், தார்ப்பாயை விரித்துக் கொள்ள வேண்டும். முதலில் அரை அடி உயரத்துக்குச் செம்மண் கலந்த தோட்டத்து மண்ணைப் போட்டு, இரண்டு கைப்பிடி பாறைத் தூள் அல்லது குவாரி மண் அல்லது ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது கிடைக்கும் பாறைத் தூளைத் தூவ வேண்டும்.

நாட்டுப் பசுஞ் சாணம் ஒன்று முதல் 2 கிலோவரை, வேப்பம் புண்ணாக்கு 50 முதல் 100 கிராம்வரை போட்டு, சுமார் ½ அடி தண்ணீர் இருக்குமாறு விட வேண்டும். தண்ணீர், மண், புண்ணாக்கு ஆகியவற்றைச் சிறிது நேரம் கிளறிவிட வேண்டும். அதன்பின் சுமார் ½ முதல் 1 கிலோ வரை அசோலா விதைகளைத் தூவ வேண்டும். 10 முதல் 15 தினங்களில் தொட்டி முழுவதும் அசோலா வளர்ந்துவிடும்.

இதிலிருந்து தினமும் ½ கிலோ தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அசோலா படுக்கைக் குழிகளைத் தயார் செய்துகொள்ளலாம்.

வாரம் ஒரு முறை ஒரு கிலோ நாட்டுப் பசுஞ் சாணம், ஒரு கைப்பிடி ஆழ்துளைக் கிணறு மண் அல்லது பாறை மண் போட வேண்டும். அத்துடன் மாதத்துக்கு ஒரு முறை அடி மண்ணைக் கொஞ்சம் எடுத்துவிட்டு, புது மண் போட வேண்டும். தண்ணீரின் அளவு 7 முதல் 10 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரைப் பாதி அளவுக்கு வெளியேற்றிப் புது நீரை மாற்ற வேண்டும். 6 மாதங்களுக்கு இதிலிருந்து தினமும் அசோலா அறுவடை செய்யலாம். அதிவேகமாக வளரும் தன்மை கொண்ட காரணத்தால், தினமும் அசோலாவை எடுத்துக்கொண்டு புதிதாக வளர்வதற்கு இட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எந்த நிலையிலும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போக விட்டுவிடக் கூடாது.

அதிக செலவு பிடிக்குமா?

அசோலா வளர்ப்பது சுலபமானது மட்டுமல்ல, கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்திசெய்வதுடன், அடர் தீவனத்துக்குச் செய்யும் செலவும் குறைய வாய்ப்புள்ளது.

கறவை மாடுகளுக்குக் கொடுக்கிற அடர் தீவனமான பருத்திக்கொட்டை, தவிடு, புண்ணாக்கு போன்றவற்றைப் பாதியாகவோ அல்லது மூன்றில் ஒரு பங்காகவோ குறைத்துக் கொள்ளலாம். அசோலா உற்பத்தி செய்ய 1 கிலோவுக்கு 50 பைசாவுக்கும் குறைவாகவே செலவாகும். 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு செழித்து வளரும்.

கடுமையான பகல் நேர வெயில் நேரடியாகப் படும் வகையில், அசோலா வளர்ப்புக் குழிகளை அமைக்கக் கூடாது. பகல் நேர வெயில் படாத வகையில், மேலே பச்சை துணி கட்டி நிழல் படுமாறு அமைக்க வேண்டும். காலை, மாலை நேரச் சூரியனின் இளம் வெயில் அசோலாவுக்கு மிக மிக நல்லது.

அப்படியே கொடுக்கலாமா?

அசோலாவைக் கால்நடைகளுக்குக் கொடுக்கும் முன்பு, நான்கைந்து முறை தண்ணீரில் அலசிக் கொடுக்க வேண்டும். அசோலாவில் சாணத்தின் மணம் இருந்தால், கால்நடைகள் உண்ணாமல் போய்விடக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் அலசும்போது வரும் சிறிய செடிகளை, மீண்டும் அசோலா வளர்ப்பு தொட்டியிலேயே விட்டுவிட வேண்டும்.

கால்நடைகள் அசோலாவை சுலபமாக ஜீரணித்துக்கொள்ளும். அடர் தீவனத்துடன் கலந்தும் தனியாகவும் பசுந்தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.

அசோலா விதைகளை நெல் நாற்று வயல்களில் தூவிவிட்டால், வயலில் தண்ணீர் தேங்கி இருக்கும்போது நன்கு செழித்து வளரும். தண்ணீர் இல்லாமல் வற்றிப்போகும்போது, அசோலா மக்கி உரமாகிப் பயிருக்கு ஊட்டம் கொடுக்கும். அதன் மூலம் உரச் செலவைக் குறைக்கலாம்.

புதிய அசோலா விதைகளை 5 - 6 மாதங்களுக்கு ஒருமுறை போட வேண்டும். அப்படிப் போடும் முன்பு தண்ணீரில் உள்ள இலை, தழை குப்பைகளை அகற்றிவிட வேண்டும்.

அசோலா தீவனம் தொடர்பான மேலும் விபரங்களை அறிய,

கே.வி. கோவிந்தராஜ், ஜெயம் பிராணி நல அறக்கட்டளை, கவுந்தப்பாடி- 638 455

98427-04504 / 94425-41504

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x