Published : 11 Mar 2017 11:06 AM
Last Updated : 11 Mar 2017 11:06 AM
கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில், உலகம் பெரிதாக அறிந்திராத இரண்டு ஜப்பானிய நகரங்கள் மூன்று நாள் இடைவெளியில் பரவலாகக் கவனம் பெற்றன. அதற்குக் காரணம் அமெரிக்கா அங்கு நிகழ்த்திய உலகின் அதிபயங்கரமான அழிப்பு நடவடிக்கை. உலகின் முதல் இரண்டு அணுகுண்டுகளை ஹிரோஷிமா, நாகசாகி மக்கள் தலையில் போட்டு, அவற்றின் விளைவுகளைப் பரிசோதித்துப் பார்த்தது அமெரிக்கா.
அந்த இரண்டு அணுகுண்டுகள் ஏற்படுத்திய மிக மோசமான பின்விளைவுகளிலிருந்து மெல்ல மீண்டெழுந்து, தொழில்நுட்பத் துறையில் சாதித்து உலகில் தனி அடையாளம் பெற்றது ஜப்பான். அதற்குப் பிறகு அறிவியல் வளர்ச்சி தந்த தொழில்நுட்ப மேம்பாட்டால் உலக மக்களைச் கட்டிப்போட்டுவிட முடியும் என்றுதான் ஜப்பான் நம்பிக்கொண்டிருந்தது. எல்லாமே 2011 மார்ச் மாதம் வரைதான்.
அப்போது வந்த ஆழிப்பேரலை (சுனாமி) ஜப்பானியக் கரையோர நகரங்களைப் புரட்டிப் போட்டது. ஆழிப்பேரலை ஜப்பானுக்குப் புதிதல்ல. உலகின் மாபெரும் கடலான பசிபிக்கின் கரையில் இருக்கும் அந்நாடு, நிலநடுக்கத்துக்கும் அதன் தொடர்ச்சியாகக் கரைகளைப் பதம் பார்க்கும் ஆழிப்பேரலைகளுக்கும் தகவமைத்துக்கொள்ளப் பழகியிருந்தது.
ஆனால், தொழில்நுட்பத்தின் மூலம் உலகை வென்றுவிட முடியாது என்ற பாடத்தை, 2011 ஆழிப்பேரலையில் ஜப்பான் கற்றுக்கொண்டது. எந்தத் தொழில்நுட்பத்தால் அது உலகைத் திரும்பிப் பார்க்க வைத்ததோ, அதே தொழில்நுட்பத்தின் மாபெரும் வீழ்ச்சி ஜப்பானைப் புரட்டிப் போட்டதை உலகம் அப்போது பார்த்தது.
அதற்குக் காரணம் ஃபுக்குஷிமா.
அணுகுண்டுகள் இரண்டு நகரங்களை நிர்மூலமாக்கி 69 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பானின் புதிய நகரின் பெயரை உலகம் இந்த முறை தெரிந்துகொண்டது. ஆழிப்பேரலை நிகழ்ந்ததன் தொடர்ச்சியாக அங்கு இருந்த தாய்ச்சி அணுஉலை வளாகத்தில் இருந்த அணுஉலைகள் கட்டுப்பாட்டை இழந்து ஒவ்வொன்றாக வெடிக்க ஆரம்பித்தன. ஜப்பான் அரசும் அணுஉலை நிர்வாகமும் கைகளைப் பிசைவதற்குக்கூடத் தோன்றாமல் விக்கித்து நின்றன.
அவசரகாலத் தயாரிப்பின் லட்சணம்
நாம் எவ்வளவு மோசமாக உலக அரசுகளாலும் அணுஉலை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனங்களாலும் ஏமாற்றப்படுகிறோம் என்பதற்குச் சிறந்த உதாரணம் ஃபுக்குஷிமா. இதைவிட மோசமான வேறொரு உதாரணம் எதிர்காலத்தில்கூட நிகழக் கூடாது. இதற்குக் காரணம், அது நிகழ்ந்த பின்னணி.
ஆழிப்பேரலையோ நிலநடுக்கமோ மற்ற இயற்கைச் சீற்றங்களோ எங்கள் அணுஉலைகளை ஒன்றும் செய்யாது என்றுதான் உலகில் உள்ள அரசுகள், அணுஉலை நிறுவனங்கள் இப்போதுவரை மார்தட்டிவருகின்றன. ஆனால், அது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதை ஃபுக்குஷிமா ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது. இந்தப் பேரழிவு எவ்வளவு மோசமானது என்பதை நிரூபிக்க ஒரேயொரு உதாரணம் போதும். அவசர காலத்தில் அணுஉலையை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான வழிகாட்டிப் புத்தகம், எளிதில் பாதிக்கப்படாத பாதுகாப்புப் பதுங்குகுழிக்கு பதிலாக, அணுஉலை நிர்வாக அலுவலகத்தில் இருந்திருக்கிறது. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், அவசரகால வழிகாட்டியை எப்படி அங்கு போய் எடுத்துவருவது?
உருவாக்கப்பட்ட பேரழிவு
ஒருவேளை அணுஉலைகளின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டாலும்கூட, அவை வெடிக்காமல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு, அவற்றை அவசியம் குளிர்வித்தாக வேண்டும். அதற்குத் தானியங்கி மின்னாக்கிகள் தேவை. அந்த மின்னாக்கிகள் கடலுக்கு மிகமிக அருகில் இருந்துள்ளன. கடல் நீரால் மூழ்காத வகையிலோ, உப்புநீர் புகாத உயரத்திலோ அவை அமைக்கப்படவில்லை. உலகின் மிக மோசமான விபத்துகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தைக் கொண்டுள்ள அணுஉலைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான மின்னாக்கிகளை நிறுவுவதற்குக்கூட, செலவு குறைப்பு நடவடிக்கைகளை பயன்படுத்தியிருந்தார்கள். இந்தப் பின்னணியில் மக்களைப் பாதுகாப்பதற்காகவே அரசுகள் இருக்கின்றன என்ற கூற்றை நம்புவது எவ்வளவு அப்பட்டமான முட்டாள்தனம்.
இது மட்டுமில்லாமல் ஸ்பென்ட் ஃபியூல் ராட்ஸ் எனப்படும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட அணுஉலை எரிபொருள் பாளங்கள் கதிரியக்கத்தை வெளியிடக்கூடியவை. இவற்றிலிருந்து கதிரியக்கம் கசியாமல் இருக்க, அவற்றை கவனமாகப் பாதுகாக்க வேண்டும். ஆனால், அந்த ஸ்பென்ட் ஃபியூல் ராட்ஸ் பாதுகாக்கப்பட்ட இடம் எது தெரியுமா? செயல்படும் அணுஉலைகளின் உச்சிப் பகுதியில் குறைந்தபட்ச பாதுகாப்புகூட இல்லாமல் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. தாய்ச்சி அணுஉலைகள் வெடித்தபோது, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஸ்பென்ட் ஃபியூல் ராட்ஸும் சேர்ந்து வெடித்துக் கூடுதல் கதிரியக்கத்தை உமிழ்ந்து உலகை நாசப்படுத்தின.
அணுஉலைகள் செயல்படும் காலத்தில் மட்டுமல்லாமல், செயல்படாத நிலையிலும் ஆபத்தானவை என்பதை ஃபுக்குஷிமா விபத்து மீண்டும் ஒரு முறை தலையில் தட்டிச் சொல்லியிருக்கிறது.
நேரடி சாட்சியம்
இப்படி, ஃபுக்குஷிமாவில் அணுஉலை வெடிப்பு நிகழ்ந்த பின்னர் நடந்தது என்ன என்பதை ‘ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை’ என்ற நூல் மூலம் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஃபிரெஞ்சு நாவலாசிரியரும் பேராசிரியருமான மிக்கேயில் ஃபெரியே. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பணியாற்றிவரும் மிக்கேயில் ஃபெரியே, அணுஉலை வெடிப்பு நிகழ்ந்தபோது தலைநகரில் வாழ்ந்தவர். ஃபுக்குஷிமாவிலிருந்து 239 கி.மீ. தொலைவில் டோக்கியோ இருந்த நிலையிலும் அணுஉலை விபத்தால் அந்த நகரமும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்தால் புரட்டிப் போடப்பட்ட ஜப்பானிய நிலத்தையும் மக்களையும் பற்றிய நேரடி சாட்சியமாகவே ஃபெரியே இந்த நூலை எழுதியுள்ளார்.
புரிந்துகொள்ளக் கடினமான அறிவியல் நூலாகவோ, தகவல் தொகுப்பாகவோ இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு இலக்கியப் பிரதிக்கு உரிய கனத்துடன் இந்த நூலை ஃபெரியே எழுதியுள்ளார். கிரேக்க, ரோம இதிகாசங்கள், நவீன எழுத்தாளர்களின் கதைகள், கதாபாத்திரங்களுடன் ஒவ்வொரு நடப்புச் சம்பவத்தையும் உருவகமாகப் பொருத்தும் அவருடைய பாங்கு நூலுக்குப் புதிய பரிமாணத்தை அளிக்கிறது. சூழ்ந்து துரத்தும் துயரம், அரசு-ஊடகங்கள்-நிர்வாகம் போலியாகக் கட்டமைக்க முயற்சிக்கும் நம்பிக்கைகள், மக்கள் அணுஅணுவாக அனுபவிக்கும் அவலம் போன்ற அனைத்தும் இந்த நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. சில இடங்களில் அவநம்பிக்கை மேலிட நாம் வாழும் உலகம் எவ்வளவு போலித்தனங்களைச் சூடிக்கொண்டுள்ளது என்பது பரிகாசமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
நாம் மட்டும் என்ன செய்வோம்?
ஒரு நாட்குறிப்புத் தொகுப்பு போன்ற பதிவுகள் என்றாலும், ஃபுக்குஷிமா பேரழிவு தொடர்பான முழுமையானதொரு சித்திரத்தை இந்த நூல் நம் மனதில் ஏற்படுத்துகிறது. அணுஉலை வெடிப்பு வெளியிட்ட கதிரியக்கம் எப்படியெல்லாம் ஜப்பானை வாட்டி வதைத்தது, வதைத்துவருகிறது என்பது பதிவாகியுள்ளது. இந்த நூலை எழுதுவதற்காக ஃபுக்குஷிமாவில் வாழ்ந்த, அணுஉலைக் கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்ட பலரையும் நேரில் சந்தித்து ஃபெரியே உரையாடியுள்ளார்.
அணுஉலை வெடிப்பு நிகழ்ந்த பிறகு ஃபுக்குஷிமா சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், அந்தப் பகுதி பதிவெண் கொண்ட கார்கள், அப்பகுதியில் விளைந்த காய்கறிகள், சகே என்ற அரிசி மதுபானம் உள்ளிட்ட அனைத்தும் ஜப்பானின் மற்ற பகுதி மக்களால் புறக்கணிக்கப்பட்டதும், உலகால் புறந்தள்ளப்பட்டதும் பதிவாகியிருக்கின்றன. நாளை நம்மூரில் அணுஉலை விபத்து நடந்தாலும், இதுதான் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுவரை அணுஉலை பாதுகாப்பானது, அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் மின்சாரம் அவசியம் என்றுதான் நாம் பேசிக்கொண்டிருப்போம்.
சில கேள்விகள்
இந்த நூல் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஃபுக்குஷிமா அணுஉலை வெடிப்பு நிகழ்ந்த அடுத்த ஆண்டே பிரெஞ்சில் இது வெளியாகியிருக்கிறது. அதேநேரம், இத்தனை ஆண்டுகளாக இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமல் இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
ஜப்பானிய, போர்த்துகீசிய மொழிகளுக்கு அடுத்தபடியாக பிரெஞ்சு வழியே தமிழுக்கு இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியைச் சேர்ந்த பிரெஞ்சுப் பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தடாகம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
இந்த நூலைத் தமிழில் பதிப்பிக்க பிரான்ஸ் அரசின் கீழ் இயங்கும் பிரெஞ்சு நிறுவனம் நிதியுதவி செய்துள்ளது. ஆனால், அதில் உள்ள நகைமுரண் என்னவென்றால், உலகிலேயே மிக அதிக அணுஉலைகளைக் கொண்டுள்ள நாடு பிரான்ஸ். உலகின் மோசமான அணுஉலை வெடிப்பு, அதன் தோல்வி பற்றிய நூலை வெளியிட அந்நாட்டு அரசே உதவியிருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது?
நாம் பேசாத உண்மைகள்
ஃபுக்குஷிமா அணுஉலை விபத்து பற்றி தமிழகத்தில் அதிகமாகப் பேசப்பட்டிருக்கும் நிலையிலும், இந்த நூலில் பேசப்படும், முன்வைக்கப்படும் விஷயங்கள் அந்தச் சொல்லாடல்களில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. நாம் எத்தனை ஆராய்ச்சி மனப்பான்மையுடனும், அறிவியல்பூர்வமாகவும் ஒரு பிரச்சினையை அணுகுகிறோம் என்பது குறித்து மீள்பார்வை செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.
அணுஉலை பாதுகாப்பானது, அதனால் நாம் பெறும் பலன்கள் அதிகம், உலகை மாசுபடுத்தாத பசுமை ஆற்றல் ஆதாரம் என்றெல்லாம் உள்நாடு முதல் உலக அறிஞர்கள்வரை இப்போதுவரை உரக்கப் பிரசாரம் செய்துவருபவர்கள், இந்த நூலை ஒரு முறையாவது படிப்பது அவசியம். இந்த நூல் எழுப்பியுள்ள அறிவியல், தொழில்நுட்ப, சமூக, பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல் கேள்விகள் எதற்கும் ஜப்பான் இதுவரை விடை தரவில்லை. உலக நாடுகளும் விடைதரப் போவதில்லை. ஏனென்றால், அவர்களிடம் பதில் இல்லை என்பதையே ஆசிரியர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT