Published : 18 Mar 2017 11:35 AM
Last Updated : 18 Mar 2017 11:35 AM
விழுப்புரம் அருகே தன் வீட்டுத் தேவைக்குச் சூரிய சக்தி மின்சாரத்தையே முழுமையாகப் பயன்படுத்துகிறார் பேராசிரியர் ராஜ பார்த்திபன். சூரிய சக்தி மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தி எப்படி வீட்டு மின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டார் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டது:
ஒரு நாளைக்கு 1,500 வாட்
விழுப்புரம் அருகே நல்லரசன்பேட்டை கிராமத்தில் உள்ள வானவில் நகரில் 2011-ம் ஆண்டு புதிதாக வீடு கட்டி 2012-ம் ஆண்டில் குடியேறினேன். 2012-ல் இருந்து 2016 ஜனவரி மாதம்வரை அரசு மின் இணைப்பு இல்லாமல் முழுவதும் சூரிய மின்சாரம் மூலம் 1,500 வாட் (ஒன்றரை யூனிட்) மின் உற்பத்தி செய்து பயன்படுத்தினேன். இதன் மூலம் ஒரு நாளைக்கு டிவி, நான்கு குழல் விளக்குகள், நான்கு மின்விசிறிகளை 12 மணி நேரம்வரை இயக்க முடிகிறது. இதற்கு நான்கு 250 வாட் சூரியசக்தி பலகைகளை (சோலார் பேனல்) வீட்டு மாடியில் பொருத்தி ஒரு கிலோவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது.
கடந்த நான்கு வருடங்களாக அரசு மின் இணைப்பு இல்லாமல் முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தையே பயன்படுத்தினோம். கூடுதல் மின்சாரத் தேவை காரணமாக, இந்த ஜனவரி மாதம் முதல் புதிய மின் இணைப்பைப் பெற்று, மாதம் ரூபாய் 140 மின் கட்டணமாகச் செலுத்திவருகிறேன்.
வீட்டில் சூரிய சக்தி மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தும்போது குளிர்சாதனப்பெட்டி, மிக்ஸி போன்ற மின்கருவிகளைப் பயன்படுத்தும்போது, மற்ற மின் சாதனங்களை அணைத்துவிட வேண்டும்.
மாணவர்களுக்கு ஊக்கம்
நம் நாட்டில் மின் பற்றாக்குறை இருந்தாலும், அதற்கு மாற்றாகச் சூரிய சக்தி மின்சாரத்தின் மூலம் அதிக லாபம் பெறலாம். இதை ஊக்குவிக்கும் வகையில் எனது கல்லூரி மாணவர்களிடமும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன். சூரிய சக்தியில் இயங்கும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளைக் கல்லூரி மாணவர்கள் மூலம் உருவாக்கிவருகிறேன்.
மாணவர் குழுக்களின் உதவியோடு சூரிய சக்தி இணைப்பு உருவாக்கும் பணியை இலவசமாகச் செய்துதருகிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் சூரியசக்தி மூலம் ஒரு நாளைக்கு 10 கிலோ வாட் (10 யூனிட்) மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
அவசரத்துக்குக் கைகொடுக்கும்
புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது, தொடர்ச்சியாகவும் நீண்ட நேரத்துக்கும் மின்தடை ஏற்படுகிறது. அந்தக் காலத்தில் சூரிய ஒளி மின்சாரம் பெருமளவு கைகொடுக்கும். நான்கு குழல் விளக்குகள், நான்கு மின்விசிறிகள், மிக்ஸி, கிரைண்டர், டிவி உள்ள வீட்டுக்கு ஒரு நாளைக்கு 1,200 வாட்ஸ் (1.2 யூனிட்) தேவைப்படும்.
இதற்கு மத்திய , மாநில அரசுகளின் மானியம் போக ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம்வரை செலவு செய்ய வேண்டும். இரண்டு பேட்டரிகள் பொருத்த வேண்டும். சூரிய சக்திப் பலகை, பேட்டரிகளுக்கு மாதத் தவணை திட்டத்தையும் சில நிறுவனங்கள் அளிக்கின்றன. 25 ஆண்டு உத்தரவாதமும் கிடைக்கும் என்றார்.
பேராசிரியர் ராஜ பார்த்திபன் தொடர்புக்கு: 9710419007
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT