Published : 19 Feb 2014 11:56 AM
Last Updated : 19 Feb 2014 11:56 AM

இயற்கை உணவுக் கடைகளுக்கு அதிகரிக்கும் வரவேற்பு- ‘ஜங்க் ஃபுட்’டில் இருந்து ‘ஜம்ப்’ ஆகும் மக்கள்

துரித வகை உணவுகளால் சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என பல பாதிப்புகளால் அவதிப்படும் மக்கள் தற்போது இயற்கை உணவு முறைக்கு படிப்படியாக மாறி வருகின்றனர். சென்னையில் விருகம்பாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை உள்பட பல இடங்களிலும் இயற்கை வழி உணவகங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

காலத்துக்கு ஏற்ப மனிதனின் உணவு முறையும் வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு பலரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக சென்னை போன்ற பெரிய நகரங்களில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. ஊட்டச்சத்து சிறிதும் இல்லாமல் கொழுப்பு, சர்க்கரை, உப்பு, கலோரிகள் மட்டுமே கொண்ட ‘ஜங்க் ஃபுட்’ மற்றும் துரித உணவுகளே இத்தகைய பாதிப்புகளுக்குக் காரணம் என்ற விழிப்புணர்வு சமீபகாலமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கை உணவுகளை தேடித் தேடி வாங்கி சாப்பிடும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

சென்னையில் விருகம்பாக்கம், வடபழனி ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட இயற்கை பொருட்கள் சூப் வடிவிலும் இயற்கையான சாறுகளாகவும் விற்கப்படுகின்றன. காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் வந்து வாங்கி விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதுகுறித்து சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ‘தாய்வழி இயற்கை உணவகம்’ நடத்தி வரும் ஆர்.மகாலிங்கம் கூறியதாவது:

நண்பர்கள் சரவணன், ரவியுடன் சேர்ந்து கடந்த ஜனவரி 1-ம் தேதி சைதை ரயில் நிலையம் அருகே இந்த உணவகத்தை தொடங்கினேன். காலையில் 7 வகையான முளைகட்டிய தானியங்கள், சளி, இருமல் தீர்க்கும் தூதுவளைக் கீரை, குடல் புண் நீக்கும் மணத்தக்காளி கீரை, சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை, கொழுப்பு நீக்கும் கொள்ளு சூப், மூட்டு வலி குணமாக்கும் முடக்கத்தான் கீரை ஆகிய சூப் வகைகள், நெல்லிக்காய், கருவேப்பிலை, அருகம்புல், வாழைத்தண்டு சாறு மற்றும் தேனில் ஊறவைக்கப்பட்ட அத்தி, நெல்லிக்காய், கடுக்காய் ஆகியவற்றையும் விற்கிறோம்.

மாலையில் 6 வகையான சூப், கேரட் பால், தேங்காய் பால் விற்கிறோம். இவற்றை நாங்களே தயாரிக்கிறோம். சிவகாசியில் உள்ள தாய் வழி இயற்கை உணவகத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டோம். ஆரம்பத்தில் 30 பேர்தான் வந்தனர். இப்போது தினமும் 200-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். மெரினா மற்றும் பூங்காக்கள் அருகில் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு மகாலிங்கம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x