Published : 04 Nov 2013 04:50 PM
Last Updated : 04 Nov 2013 04:50 PM
அணு சக்தியை முற்றிலும் ஒழித்துவிட்ட நாடுகளில் முக்கியமானது ஆஸ்திரேலியா. அந்நாட்டின் அணு சக்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. 1970களில் பசிபிக் பெருங்கடலில் நடந்த பிரெஞ்ச் அணு சக்தி சோதனையையொட்டி உருவான விவாதங்கள், அந்த எதிர்ப்பிற்கு அடித்தளமாக இருந்தன. யுரேனியம் உற்பத்தியில் உலக அளவில் மூன்றாவது பெரிய நாடாக இருந்த போதிலும், அதன் சுரங்கவியல் பலத்த சர்ச்சைகளையே உருவாக்கியிருக்கிறது.
வரலாற்றுப்பூர்வமாகவே ஆஸ்திரேலியாப் பொருத்தவரை அணு சக்தி ஒரு முக்கியமான அரசியல் பிரச்சினையாகவும் இருந்து வந்திருக்கிறது. நவம்பர் 2007ல் நடந்த தேர்தலில் அணு சக்திக்கு எதிரான உழைப்பாளர் கட்சியும், அணு சக்திக்கு ஆதரவான ஜான் ஹோவர்ட் தலைமையிலான கூட்டணியும் மோதின. தேர்தலில் உழைப்பாளர் கட்சியே வெற்றிப் பெற்றது.
இந்த பின்னணியில்தான் இப்போது அணு சக்திக்கு ஆதரவான குரல்கள் ஆஸ்திரேலியாவில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருகின்றன. அணு சக்திக்கு எதிரான நிலைப்பாட்டை ஆஸ்திரேலியா மாற்றிகொள்ள வேண்டுமென்று விஞ்ஞானிகள் முதல் அரசியல்வாதிகள் வரை கோரத் துவங்கியிருக்கிறார்கள்.
2003க்குப் பிறகு ஒலிக்கத் தொடங்கிய இந்த குரல்கள் புகுஷிமாவிற்கு பிறகும் தமது வலுவை இழக்கவில்லை. ஐரோப்பாவிலுள்ள பல நாடுகள் பல தசாப்தங்களாக தமது தேவைகளுக்கு அணு சக்தியை நம்பியிருப்பதை சுட்டிகாட்டும் இவர்கள், அணு சக்தியை தேர்ந்தெடுக்காததன் மூலம் ஆஸ்திரேலியா பின் தங்கிவிடும் என்று அச்சுறுத்துகிறார்கள்.
விஞ்ஞானிகளிலேயே ஒரு சாரார் அணு சக்தி வேண்டுமெனவும் ஒரு சாரார் ஆஸ்திரேலியாவில் மாற்று எரிசக்தி அதிக அளவில் இருப்பதால் வேண்டாம் எனவும் பிரிந்திருக்கின்றனர். டிட்டர்டன், பாக்ஸ்டர், பாரி ப்ரூக் போன்ற ஆஸ்திரிலேயாவின் முக்கியமான விஞ்ஞானிகள் அந்நாடு அணு சக்தியை அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர்கள். மாறாக, பிளானரி போன்ற விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியாவில் மாற்று எரிபொருள் மிக அதிக அளவில் இருப்பதால் அணு சக்தியை உபயோகப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் பிளானரி, மாற்று எரிபொருள் இல்லாத நாடுகளுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.
இப்படி அணு சக்திக்கு ஆதரவான குரல்கள் அதற்கு பல காரணங்களைச் சொல்கின்றன. அணு சக்தியினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மிகைப்படுத்தப்பட்டுவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். புகுஷிமா விபத்திற்கு பிறகு அணு சக்தி கதிர்வீச்சினால் உயிரிழந்த சம்பவம் பெரிதும் இல்லை என்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானி பின்கெல். கதிர்வீச்சால் கான்சர் உண்டாகும் அபாயமும் மிகமிக குறைந்த அளவிலேயே இருப்பதாக அவர் வாதிடுகிறார்.
ஆனால், அணு சக்திக்கு ஆதரவானவர்கள் முன் வைக்கும் ஒரு முக்கியமான வாதம், காலநிலை மாற்றம் சார்ந்தது.
அணு சக்தியை தவிர்ப்பதன் மூலம் புவி வெப்பமயமாதல் பிரச்சினைக்கு எதிரான போராட்டத்தில் மற்ற உலக நாடுகளை காட்டிலும் ஆஸ்திரேலியா பின் தங்கிவிடும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்க சூரியசக்தி அல்லது காற்று சக்தியை விட அணு சக்தியே சிறந்தது என்பது இவர்கள் வைக்கும் வாதம்.
இது ஆஸ்திரிலேயாவின் பிரச்சினை மட்டுமல்ல. கியோட்டோ உடன்படிக்கையின் கீழ் அணு சக்தியை சேர்க்கலாமா வேண்டாமா என்பது இன்று உலக அளவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு விவாதம்.
உலகிலுள்ள விஞ்ஞானிகள் இந்த சர்ச்சையில் இரண்டு பிரிவினராக பிரிந்து எதிரெதிர் நிலையில் இருக்கிறார்கள். கியோட்டோ உடன்படிக்கையின் முக்கியத்துவம், புவி வெப்பமயமாதல் பிரச்சினையில் அணு சக்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் வைக்கப்படும் வாதங்கள் எல்லாவற்றையும் ஒன்றொன்றாகப் பார்ப்போம்.
(தொடரும்)
கவிதா முரளிதரன் -தொடர்புக்குkavitha.m@kslmedia.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT