Published : 17 Jun 2017 11:32 AM
Last Updated : 17 Jun 2017 11:32 AM
சமூக வரலாற்றில் பெரும் பஞ்சங்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. காரணங்கள் ஒன்றிரண்டல்ல. பஞ்சம் ஒரு வரலாற்றுப் படிப்பினை. சமூகத்தின் ஆகச் சிறந்த மீளும் பண்புகளும் ஈனமான சுரண்டல் – அடக்குமுறைப் பண்புகளும் வெளிப்படும் காலமும் அதுதான். பஞ்சத்தைத் தொடர்ந்து மக்களின் உணவுமுறையில் பெரும் திருப்பம் நிகழ்வதும் உண்டு.
அரிசியின் உபவிளைவு
இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட உணவுப் பஞ்சம், பர்மா அரிசியைத் தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியது. வெயிலையும் வறண்ட நிலப்பரப்பையும் மையப்படுத்திய சிறுதானிய வேளாண்மைக்குப் பழகியிருந்த தென்னிந்தியச் சமூகம், அந்தச் சிறுதானியங்களையே மூலாதார உணவாகக் கொண்டிருந்தது. கண்மாய் / குளச்செய் விவசாயம்தான் நம் முன்னோர்களின் நடைமுறை. வெயில் வாட்டும் உழைப்பாளியின் உடம்புக்கு சிறுதானியப் புரதம் சரியாக இருந்தது.
நெல்லோ நன்செய் விவசாயம். அதற்கு முற்றிலும் மாறுபட்ட நன்னீர் மேலாண்மை தேவை. அரிசி உணவு வெற்றுக் கலோரிகளை மட்டும் தந்தது. அதிலிருந்த குறைந்தபட்ச உயிர்ச்சத்துகளும் இயந்திரத் தீட்டலில் தவிட்டோடு விடைபெற்றுக் கொண்டன. கூடவே, இடைக்காலத்தில் மக்களின் உடலுழைப்பு முறைகளில் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துபோயின. இன்று தமிழ்நாடு இதன் இரண்டு உபவிளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒன்று, நன்னீர்ப் பற்றாக்குறை. இரண்டு, பல்கிப் பெருகும் நீரிழிவுக் கோளாறு. ஒரு பஞ்சம் நிகழ்த்திய படுபாதகத்தின் கதை இது!
கப்பக் கிழங்கும் மீனும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்ட வரலாற்றுடன், ஓர் உப வரலாறும் உண்டு. 19-ம் நூற்றாண்டில் இங்கு ஏற்பட்ட ஒரு பஞ்சத்தைத் தொடர்ந்துதான், இந்த அணையை நிறுவுவதற்கான முடிவை முடியரசு மேற்கொண்டது. அந்தப் பஞ்சம் உக்கிரமடைந்தபோது அதிகம் நீர் தேவைப்படாத, விரைவில் அறுவடையாகிற மாவுச்சத்து நிறைந்த உணவுக்கான தேவை எழுந்தது.
தேடித் தேடிப் பார்த்து பிரசேலில் இருந்து மரவள்ளிக் கிழங்கைக் கொணர்ந்ததாக வரலாறு சொல்கிறது. வேணாட்டிலும் நாஞ்சில் நாட்டிலும் கப்பயும் (மரவள்ளிக் கிழங்கு) மீனும் ஏறத்தாழ கலாசார உணவாகிவிட்டன. திருவனந்தபுரம் நகரம் உள்ளிட்ட கேரளப் பகுதிகளில் பல தரமான உணவகங்களில் `கப்பயும் மீனும்’ முக்கியமான வகையறாவாகிவிட்டது. பஞ்சம் போக்கவந்த ஒரு வெளிநாட்டு உணவு, திருவிதாங்கூரின் கலாசார உணவாக மாறியது சுவாரஸ்யமான கதை!
கருணை குறைந்த காலம்
கலாச்சார உணவு குறித்து வேறொரு தருணத்தில் எழுதுகிறேன். இந்தப் பத்தியின் இலக்கு, கடற்கரைச் சமூகங்கள் நவீன மீன்பிடி தொழில்நுட்பங்களுக்கு முந்தைய காலத்தில் ஆண்டுதோறும் தவிர்க்க முடியாத பஞ்சங்களை எப்படிச் சமாளித்தன என்பதே.
அன்றெல்லாம் ஆனி-ஆடி-புரட்டாசி மாதங்கள் ஆண்டின் வறுமை மிகுந்த மாதங்கள். கோரப்பசியுடன் கடற்கரை மணல்மேடுகளை கடல் விழுங்கிக் கொண்டிருக்கும் காலம் அது. ஹோவென்று விசுவரூபமெடுக்கும் அலைகளை எதிர்த்து கட்டுமரமோ, வள்ளமோ, மனிதர்களோ சென்றால், `எதுவென்றாலும் விழுங்கிவிடுவேன்’ என்று கடல் மிரட்டும். அலைகளைக் கடந்து போய்விட்டால் மீனுடன் கரை திரும்பலாம். கடல் வற்றுவதில்லைதான். ஆனால், கடலின் கருணை குறைந்த காலம் அது.
பசி தணித்த கஞ்சி
இங்கே என் அம்மாவின் வார்த்தைகளை நினைவுகூர்கிறேன்...
“ஆனி-ஆடி மாசத்தில ஊரு பஞ்சத்தில மறுகி நிக்கும். தர்மநாதர் சாமி பங்களாமேடையில் நிண்ணு ஊர்ல எத்தன வீடுவளுல பொக வருதெண்ணு பாப்பாரு. அப்பமெல்லாம் ஓடு போட்ட வீடு ஊர்ல அஞ்சாறுதாம் உண்டு மக்கா. தெரு முச்சூடும் ஓலைப்புரைக் குச்சிலுதாம். மிஞ்சி மிஞ்சிப்போனா பத்து வீட்டிலதாம் பகல்ல பொகை வரும். மிச்சம் எல்லா வீடும் பகல் பட்டினி…”
அபூர்வமாக ஒருவீட்டில் அரிசிச் சோறு வேகிறதென்றால், பக்கத்து வீட்டில் பசித்திருக்கும் பிள்ளைகளுக்கு சுடச்சுட வடிகஞ்சித் தண்ணியில் இரண்டு மூன்று அகப்பை சுடுசோறு போட்டு பின்கட்டுப் புரைவழியாகக் கொடுத்துப் போவாள் அந்த வீட்டு அம்மா.
“மக்களுக்கு கும்பி நனையட்டு, இதை ஆளுக்கு ஒரு தவி ஊத்திக் குடு தாயே” என்று கருணையோடு சொல்லிப் போவாள். தன் பிஞ்சுக் குழந்தைகளின் வாடிய முகம் பார்க்கப் பொறுக்காமல், வெட்கம் பாராமல் இவள் வாங்கிக்கொள்ளவும் செய்வாள்.
சில வேளைகளில் கோயில் முற்றத்தில் கஞ்சித்தொட்டி திறப்பார்கள். பகல் பட்டினியைத் தவிர்ப்பதற்கு எல்லா வயிற்றுக்கும் கஞ்சி வார்க்கப்படும். சில ஊர்களில் பஞ்சத்தின் கோரத் தாண்டவத்தின்போது கோயில் சார்பில் நூறோ இருநூறோ ரூபாயைக் கடனாய்த் தருவார்கள். சில நாட்கள் தாங்கும். அரசு கூட்டுறவுச் சங்கம் நடத்தும் ரேஷன் கடைகளில் பஞ்சப்படியாக மரவள்ளிக்கிழங்கும் அரிசியும் தருவதும் உண்டு.
(அடுத்த வாரம்: மனதைவிட்டு அகலாத சுவை!)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT