Published : 20 May 2017 11:06 AM
Last Updated : 20 May 2017 11:06 AM

கடலம்மா பேசுறங் கண்ணு 03: சீறும் கடலும் திமிறும் கடலோடியும்

`இவங்க ஏன் இப்படி இருக்காங்க!’

சுனாமியைத் தொடர்ந்து சமவெளி மக்கள் கடலோடிகளைக் குறித்துத் திரும்பத் திரும்ப அதிர்ச்சியுடன் எழுப்பிய கேள்வி இதுதான்.

ஒரு கடலோடியை இயக்குவது எது? சந்தேகமின்றி, கடல்தான். அச்சு அசலாக, அவன் கடலின் வார்ப்பு. அவனுக்குள் கடல் இயங்கிக்கொண்டிருக்கிறது.

கடல் முன் எல்லாம் சமம்

உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் இனக்குழு ஒவ்வொன்றும் பண்பாட்டு வரலாற்றின் ஈவுதான். கடல் தொல்லியல் வரலாற்றின் ஈவு. கடலின் குணக்கூறுகள் என்னென்ன? கணிக்க முடியாதது, சலம்பிக்கொண்டே இருப்பது. பிரம்மாண்டமானது, சக்தி வாய்ந்தது.

கடலின் அத்தனை பண்புகளிலும் புதிராய் நிற்பது அதன் மந்தண நிலை. எப்போது சீறும், எப்போது ஆறும் என்று எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இதற்கெல்லாம் மேலாக, கடல் சமத்துவம் பேணுவது. என் முன்னால் நீங்கள் எல்லோரும் சமமானவர்கள் என்று கடலோடிகளிடம் கடல் அறிவுறுத்திக்கொண்டிருக்கிறது.

உணவூட்டுவதற்கான தேடல்

கடல் புகுதல் வீரதீரமான தொழில். கடல் சீற்றமான காலங்களில்கூட வீரம் செறிந்த கடல் மகன், அலைகளை எதிர்த்துப் போராடிக் கடலுக்குள் சென்று மீனுடன் கரை திரும்புகிறான். சரியான அறுவடைக் களங்களைக் கடலில் கண்டடைந்து செழிப்பான அறுவடையுடன் கரைசேர்வதற்கு வீரம் மட்டும் போதாது. மதியூகமும் கணிப்புகளும் மிக முக்கியமானவை. அந்த வகையில் கடலோடியின் வாழ்வு அன்றாடத்தன்மை கொண்டது.

நாள்தோறும் தன் குடும்பத்துக்கு உணவூட்ட அவன் கடல் புகுந்தே ஆகவேண்டும். கடலுக்கு அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஆண் மகனுக்குக் கடலோடிச் சமூகத்தில் கிஞ்சித்தும் மதிப்பில்லை.

வீட்டில் நுழையும் தாய், தன் சோம்பேறி மகனுக்கு இளைய மகள் உணவு பரிமாறிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆத்திரத்துடன் அந்த உணவுத் தட்டை வெளியே தூக்கி வீசுகிறாள். `மெனக்கெட்டானுக்கு இந்த வூட்ல ஆகாரமில்ல’ என்று சினத்தோடு கத்துகிறாள். மானுடவியல் ஆய்வுக்காகச் சென்றிருந்தபோது கன்னியாகுமரியின் சின்னவிளைக் கடற்கரையில் இந்தக் காட்சியைக் கண்ணுற்றதாகக் குறிப்பிட்டார் அருட்திரு ஜெயபதி.

வீரம் நிறைந்த வேலை

சுறா வேட்டையின்போது நேர்ந்த காயத்தால் சிறிது காலம் ஓய்வில் இருந்த தந்தை மீண்டும் கடலுக்குள் போயிருக்க, தாய் உப்பு வணிகத்தை முன்னிட்டுச் சென்றிருக்கிறாள். மகள் வீட்டில் தனியாக இருக்கிறாள். குறுந்தொகை 269-வது பாடலில் வரும் காட்சி இது. சுறா வேட்டைக்கு மீனவச் சிறுவர்கள் தங்களைப் பயிற்றுவித்துக்கொள்ளும் காட்சிகள் நற்றிணை, அகநானூறு இலக்கியங்களிலும் காணக் கிடைக்கின்றன. இப்படிச் சங்க இலக்கியக் காலம்தொட்டே நெய்தல் நில மக்களின் அன்றாட இருப்பு கடலோடியின் வீரதீரத்தோடு இணைந்து கிடக்கிறது.

தாய்மை அக்கறை

அதேபோல, `தாய்மை அக்கறை’ பழங்குடிகளுக்கே உரித்தான பண்பு. கடற்கரை ஊரை நம்பி வந்த இரவலர் எவரும் உணவுக்கு வழியில்லாமல் இறந்ததாக வரலாறு இல்லை என்கிறார் எழுத்தாளர் மாலதி மைத்ரி. கைவிடப்பட்டவர்கள், கணவரை இழந்தோர், முதியோர் போன்ற எவரும் வயிற்றுக்கின்றி இறப்பது கடற்கரைகளில் கேள்விப்படாத ஒன்று.

`அறுவடைகளுடன் கரை சேரும் மீனவனை நோக்கி இரந்து நிற்போருக்குக் கலம் நிறையும்படி மீனை அள்ளி வழங்கிய அவன், மணல்மேட்டுக்குச் சென்று கையைத் தலைக்கு அணையாக்கி உறங்குகிறான்’. இப்படியொரு விவரிப்பு சங்க இலக்கியத்தில் வருகிறது (அகநானூறு, பாடல் 30).

ஒரு காலத்தில் வழிப்போக்கர்களுக்குப் பனையேறுபவர்கள் இலவசமாகப் பதனீர் கொடுத்ததுபோல, பாலூட்டும் தாய்மார்களுக்காகக் கடற்கரையில் தரப்படும் மீனுக்குக் காசு கேட்பதில்லை.

சொல் புதிது

மெனக்கெட்டான் - கடலுக்குள் போகப் பயப்படும் சோம்பேறி ஆண்.

கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x