Published : 11 Jun 2016 01:28 PM
Last Updated : 11 Jun 2016 01:28 PM
கடற்கரை ஓரம் அமைந்த சென்னை மாநிலக் கல்லூரியின் புன்னை மர நிழலில் நானும் எனது நண்பர்களும் ஆற அமர்ந்து ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு உரையாடிக் கழித்த நாட்களும், சேலத்து நண்பர் சகஸ்ரநாமம் மாதந்தோறும் புன்னை மர நிழலில் வாசகர் கூட்டம் நடத்தியதும் (இந்தக் கூட்டத்தில் நானும் ஒரு முறை உரையாற்றியுள்ளேன்), உலர் பசுமையிலைக் காடுகளில் கள ஆய்வுகளின்போது நானும் எனது மாணவர்களும் புன்னை மரங்களின் நிழல்களில் பல முறை அமர்ந்து உணவு உண்டதும், ‘புன்னை இலையின் பசுமை’ போன்று என் நினைவில் நிழலாடுகின்றன.
அழகு இலை
தாவர உலகிலேயே பேரினப் பெயரையும் (Generic Name) சிற்றினப் பெயரையும் (Species Name) இலைகளின் அடிப்படையில் பெற்ற ஒரு சில தாவரங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது புன்னை. Calophyllum inophyllum என்ற இதன் தாவரப் பெயரில் Calophyllum என்ற பேரினப் பெயர் `அழகான இலை’ என்றும் inophyllum என்ற சிற்றினப் பெயர் `பச்சைப்பசேலென்ற இலை’ என்றும் பொருள்படும். இதைத் தமிழ்ப் புலவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து பதிவு செய்துள்ளனர்.
இலையின் அழகு அதன் பளபளக்கும் மேற்பரப்பிலிருந்து உருவானது (மின் இலை பொலிந்து அகநானூறு 80:11; மின்னிலைப் புன்னை குறுந்தொகை 5:2), இலையின் கரும்பச்சை நிறம், பார்ப்பதற்கு நீலநிறம் போன்றும் தோற்றமளிக்கும் (நீலநிறப் புன்னை நற்றிணை 4:2; 163:8) மரகதம் போன்றிருக்கும் (திருவிளையாடல் புராணம்: தருமி: 13:3,4) என்றெல்லாம் பண்டைய இலக்கியங்கள் புன்னையைப் பற்றிப் பேசுகின்றன. இலையின் நீள்வட்ட வடிவத்தையும், அடர் பச்சை நிறத்தையும், ஒளி பிரதிபலிக்கும் தன்மையையும் கண்ட பாவேந்தர் சிறு குழந்தைகளுக்கான தற்காலக் காலணியோடு அதை ஒப்பிட்டுள்ளார் (புன்னை இலைபோல் புதையடி செருப்புகள் சின்னவர் காலில் செருக குடும்ப விளக்கு, பக்கம் 16).
ஆரோக்கிய நிழல்
எவ்வளவு வறட்சியான சூழல் இருந்தாலும், புன்னை மரங்கள் எப்போழுதும் இலைகளைக் கொண்டிருக்கும். மரம் தொடர்ந்து பசுமையிலை (Evergreen) மரமாகவே காட்சியளிக்கும். எனவே, தமிழ்நாட்டின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ள உலர் பசுமையிலைக் காடுகளின் (Dry Evergreen Forests) ஒரு முக்கிய அங்கமாகப் புன்னை மரம் திகழ்கிறது. மேலும், புன்னை மரத்தின் நீண்ட கிளைகள் (நெடுஞ்சினைப் புன்னை) நெருக்கமாகவும், தடித்த மையத் தண்டின் (Trunk) அடிப்பகுதி தொடங்கி மரத்தின் நுனிவரை அவை உண்டாக்கப்பட்டும், அதிகச் சிறுகொம்புகளையும் இலைகளையும் மிகவும் நெருக்கமாகப் பெற்றும் காணப்படுவதால், இந்த மரம் நல்ல நிழலைக் கொடுக்கும்.
மரத்தின் நிழல் மிகுந்த குளிர்ச்சி தருவதாகவும், கடற்கரையோர வறண்ட சூழலில் ஆண்டு முழுவதும் ஆக்சிஜன் நிறைந்த ஆரோக்கியமான குளிர்க் காற்றைத் தருவதாகவும் இந்த மரம் அமைகிறது. இதை, “புன்னை பூத்த இன் நிழல் உயர்கரை…. மேக்குயர் சினை” என்னும் நற்றிணை வரிகளும், “புன்னையங் கொழு நிழல்” என்னும் அகநானூற்று வரிகளும் உறுதிப்படுத்துகின்றன.
சிலப்பதிகார மரம்
நெய்தல் நிலச் சங்கப் பாடல்கள் பலவும், சிலப்பதிகாரமும் புன்னை மர நிழல் பற்றி குறிப்பிடும்போது அதைப் புணர்ச்சிக்கு உரிய இடமாகச் சித்தரிக்கின்றன. குறிப்பாக களவுப் புணர்ச்சிக்கு. புன்னை நன்கு கிளைத்து, கடற்கரை மணலோடு கிளைகள் தாழ்ந்து சூழ்ந்திருந்து, சற்றே இருள் சூழ்ந்து காணப்படுவதால் அப்படிக் கூறுகின்றன. புன்னை மரத்தடியில்தான் கோவலன், மாதவிக்கு இடையே பூசல் நேர்ந்து கானல் வரி பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. புன்னை மரம் பூக்கும் காலத்தில் மர நிழலுக்கு நல்ல மணமான சூழலும் கிடைக்கும்.
புரூடம் என்ற மருத்துவப் பெயராலும் அழைக்கப்படும் புன்னை இலைகள், சிறந்த, மருத்துவப் பண்புகள் நிறைந்தவை. இலைகள் ஊறவைக்கப்பட்ட நீர் கண்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. பொடி செய்யப்பட்ட இலைத் துகள்கள் நெற்றியில் `பத்து’ போடப்பட்டால் தலைவலி, மயக்கம் நீங்கும். புன்னை இலையைத் தானியங்களோடு சேர்த்துச் சேமித்தால் பூச்சிகளைத் தவிர்க்கலாம்.
(அடுத்த வாரம்: முத்து போன்றது, நாற்றத்தையும் விரட்டும்)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT