Last Updated : 11 Mar, 2017 11:18 AM

 

Published : 11 Mar 2017 11:18 AM
Last Updated : 11 Mar 2017 11:18 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 24: வெயிலாற்றலை முழுமையாக அறுவடை செய்கிறோமா?

கரிசல் நிலத்தைவிட செம்மண் நிலம் குறைவாகவே வெப்பத்தை ஈர்க்கும் திறன் கொண்டது. அதைவிட மணல் அதிகமுள்ள நிலம் குறைவாகவே வெப்பத்தை ஈர்க்கும் திறன் கொண்டது. குறிப்பாக, வெண்மணற் பாறைகள் 5 முதல் 25 விழுக்காடு வெயிலை ஈர்க்கும் திறன் கொண்டவை. மணல் திட்டுகள் 60 முதல் 70 விழுக்காடு வெயிலை ஈர்க்கும் திறன் பெற்றவை. கரிசல் மண் 90 முதல் 93 விழுக்காடு வெயிலை ஈர்க்கும் திறன் கொண்டவை.

இப்படியாக வெயில் ஈர்க்கும் திறனைப் பொறுத்து, மண்ணின் வெப்பம் அமைகிறது. அதற்கேற்ற மரங்களும் செடிகளும் வளர்கின்றன. கரிசல் மண்ணில் இயற்கையாக நுணா என்ற மஞ்சணத்தி என்ற மரம் அதிகம் வளரும். இது வெப்பத்தை எடுத்துக்கொண்டு வளரும் திறன் கொண்டது. அந்நியத் தாவரமான சீமைக் கருவேல மரமும் வெப்பத்தை எடுத்துக்கொண்டு வளரும் தன்மை கொண்டதே.

அபரிமித ஆற்றல்

வெயிலால் ஏற்படும் வெப்ப மாற்றங்கள் தாவரங்களிலும் உரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தாவரங்களுக்கான உணவு உருவாக்கம் ஒளிச்சேர்க்கை மூலமாக முற்றிலும் வெயிலை நம்பியே உள்ளது. இதுபோல பூப்பூத்தல், விதை முளைத்தல் போன்ற யாவும் வெயிலைச் சார்ந்தே உள்ளன.

இந்த உயிரியல் சுழற்சியில் வெயிலின் பங்கே முழுமையானது. ஆனால் நம்மால் அந்த வெயிலாற்றலை முழுவதுமாக அறுவடை செய்ய இயலவில்லை. இந்த உயிர்க்கோளமான பூவுலகுக்குள் வெயில் வரும்போது, ஒரு சதுர அடியில் ஒரு நிமிடத்துக்கு 2 கிலோ கலோரி ஆற்றலைத் தருகிறது. கலோரி என்பது வேலை செய்வதற்கான ஆற்றல் தேவையைக் குறிக்கப் பயன்படும் அளவு.

ஒரு கலோரி என்பது ஒரு லிட்டர் நீரை ஒரு செல்சியஸ் அளவுக்குச் சூடாக்கத் தேவைப்படும் ஆற்றல் ஆகும். அப்படியானால் ஒரு நாளைக்கு 14,400 கிலோ கலோரி நமக்கு ஒரு சதுர அடியில் கிடைக்கிறது! அதுவே ஒரு ஏக்கரில் 62,78,40,000 (அறுபத்து இரண்டு கோடியே எழுபத்து எட்டு லட்சத்து நாற்பதாயிரம் கிலோ கலோரிகள்!). ஆக எவ்வளவு ஆற்றலை நாம் பெறுகிறோம் என்று கணக்குப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.

சிறந்த அறுவடையாளர்கள்

இந்த அளவு இடத்துக்கு இடம், மேகங்கள் தூசுகள் போன்றவற்றின் தன்மையால் முன்னர் குறிப்பிட்டதுபோல மாறுபடும். அத்துடன் புவிக்கு வரும் வெயிலாற்றலை பல வகைத் தாவரங்களும் பல்வேறு முறைகளில் அறுவடை செய்கின்றன. சி- 3 (கரிமம்- 3) வகைத் தாவரங்களைவிட, சி- 4 (கரிமம்- 4) வகைத் தாவரங்கள் சிறப்பாக அறுவடை செய்கின்றன.

கால்வின் சுழற்சி எனப்படும் ஒளிச்சேர்க்கைச் செயல்பாட்டின்போது, அதிகமாக கரிமத்தை எடுத்துக்கொள்பவை கரி- 4 வகைத் தாவரங்கள். அதேநேரம் கரி- 3 வகைத் தாவரங்கள் கரிமத்துடன், ஆக்சிஜனையும் சேர்த்து எடுப்பதால் குறைவான கரிமத்தையே எடுத்துக்கொள்கின்றன. இது இலைத் துளைகளின் அமைப்பைப் பொறுத்து மாறுபடுகிறது.

சான்றாக, தாவரங்களில் கரும்பு, மக்காச்சோளம், சிறுதானியங்கள் போன்றவை கரி- 4 வகை. நெல், கோதுமை, மொச்சை வகையினங்கள் கரி- 3 வகை.

இப்படியாக கரிமம், நீர், வெயில் ஆகிய முக்கூட்டுச் சேர்க்கையால் குளுகோஸ் எனப்படும் எளிய சர்க்கரை மூலக்கூறு தாவரங்களில் முதலில் உருவாகிறது. பின்னர் இவை சர்க்கரையின் பிற வடிவங்களாக மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச் சத்து என மாறுகின்றன. அனைத்து உணவிலும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய மூன்று மட்டுமே அடிப்படையாக உள்ளன.



(அடுத்த வாரம்: தேவை இலைபரப்பில் கவனம்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x