Published : 17 Jun 2017 11:49 AM
Last Updated : 17 Jun 2017 11:49 AM
- எதனை, எதனால், எவன்கண், எப்பொழுது வைத்தல் -
ஒரு பண்ணையில் பற்பல உறுப்புகள் (கிணறு, கட்டிடம் முதலியன) காணப்படும். பற்பல உறுப்பினர்களும் (மரம், கோழி, ஆடு, மாடு) காணப்படும். ஆனால், எந்த இடத்தில் யார் இருக்க வேண்டும்? எது இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய அறிவும் ஆராய்ச்சியும் ஒரு பண்ணையாளருக்கு இருக்க வேண்டியது அவசியம்.
எந்தப் பொருளை, எந்த முறையில், எந்த இடத்தில், எப்படி வைக்க வேண்டும் என்ற அறிவை ஒவ்வொரு பண்ணையாளரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு பண்ணையை வடிவமைக்க வெறும் நுட்பங்கள் மட்டும் போதாது. நுட்பங்கள் என்பவை ஒற்றைப் பரிமாணம் கொண்டவை - அதாவது, ஒரு குறிப்பிட்ட செயலை எப்படிச் செய்வது என்பது. ஆனால், அத்துடன் எந்தக் காலத்தில் எதைச் செய்ய வேண்டும்? எங்கு செய்ய வேண்டும் என்ற கூடுதல் அறிவும் தேவைப்படுகிறது. இடமறிதல், காலமறிதல் என்ற அறிவும் தேவைப்படுகிறது.
காலமறிந்து செய்தல்
'அருவினை என்ப உளவோ கருவியான்
காலமறிந்து செயின்' (குறள்: 483)
என்று திருக்குறள் கூறுகிறது. எனவே கருவி எனப்படும் கூறுகள் அல்லது எந்துகள் மட்டும் போதாது, அதில் காலமும் இணைய வேண்டும். அதுவே உண்மையான நுட்பச் செயல்பாடாக இருக்கும். இதை வள்ளுவர் வழியில் சொல்ல வேண்டுமானால் செயல்வகை (strategy) என்று கூறலாம். இதற்கு விரகு என்ற தூய தமிழ்ச்சொல் ஒன்றும் உண்டு. ‘தந்திர உபாயம்’ என்று சம்ஸ்கிருதத்தில் கூறுவர். சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தில் வரந்தரு காதையில் இந்த விரகு பற்றிக் கூறப்பட்டுள்ளது.
'கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்' (சிலப்பதிகாரம் - வஞ்சி: 198)
ஏற்கெனவே கூறியதுபோல ஒரு பண்ணை வடிவமைப்பு முறையில் பண்ணைக் கூறுகள் (உறுப்புகள், உறுப்பினர்கள்), நுட்பங்கள் (techniques), விரகுகள் (strategy) ஆகியவற்றோடு, அவற்றை முறைப்படப் பொருத்துதல் என்ற நான்கு வகையான பகுதிகள் உள்ளன.
(அடுத்த வாரம்: கைகொள்ள வேண்டிய பண்ணை உத்திகள்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT