Published : 18 Jun 2016 11:51 AM
Last Updated : 18 Jun 2016 11:51 AM
இயற்கை உழவர் அருள்மொழியின் பண்ணை முறை மிக எளிமையானதாக உள்ளது. மிகுந்த முனைப்புடன் ஏதும் செய்வதில்லை. கிடைக்கிற வேலையாட்களின் திறன்களை அடிப்படையாகக்கொண்டு தனது பண்ணையை இயக்குகிறார். ஓராண்டில் ஒரு முறை மட்டுமே நெல் சாகுபடி செய்கிறார். அதுவும் பெண்ணையாற்றில் கிடைக்கும் நீரால் அருகில் உள்ள ஏரி நிரம்புகிறது. அந்த ஏரியில் இருந்து கால்வாய் வழியாக வரும் நீரால் நெல் சாகுபடி செய்துகொள்கிறார்.
நெல் சாகுபடிக்கு வயலைத் தயார்படுத்தும் முகமாக முதலில் சணப்புத் தக்கை பூண்டு ஆகியவற்றுடன் பல பயிர்களை இணைத்து விதைக்கிறார். இதற்கு ஏக்கருக்கு 20 பூண்டு விதைகள் என்ற அளவில் பயன்படுத்துகிறார். இதனால் நல்ல பசுந்தாள் உரம் கிடைக்கிறது. அடி உரத் தேவையை இவ்வாறு நிறைவு செய்கிறார். யூரியா, டி.ஏ.பி. என்ற ரசாயன உரங்கள் தேவைப்படுவதில்லை.
நாற்றங்கால் தயார் செய்து அதில் நாற்றுகளை 14 முதல் 15 நாட்களே வளர்க்கிறார். அவற்றை இளம் நாற்றுகளாகப் பிடுங்கி நடவு செய்கிறார். ஒற்றை நாற்று முறையைப் பின்பற்றாவிட்டாலும் அதிலுள்ள அடிப்படை நுணுக்கமான இடைவெளி விட்டு நடும் முறையைப் பின்பற்றி, அரையடி இடைவெளியில் நாற்றுகளை நடுகிறார். தொடர்ச்சியாக அமுதக் கரைசல் எனப்படும் ஊட்டக் கரைசலைக் கொடுக்கிறார்.
தேவையான பொருட்கள்:
1. 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம் - 1
2. சாணம் - 1 கிலோ
3. மாட்டுச் சிறுநீர் - 1 லிட்டர்
4. வெல்லம் - 100 கிராம்
5. பழக் கூழ் - 1 லிட்டர்
6. தண்ணீர் - 10 லிட்டர்
தயாரிப்பு முறை
முதலில் நீரை எடுத்து அதில் மாட்டுச் சாணத்தைக் கரைக்கவும். பின்பு மாட்டுச் சிறுநீரை ஊற்றிக் கலக்கவும். பின்பு பொடி செய்த வெல்லத்தைப் போட்டு நன்கு கலக்கவும். பின்பு பழக் கூழையும் ஊற்றி நன்கு கலக்கவும். பின்னர் மூடி வைக்கவும். ஐந்து நாட்கள் நொதிக்க விடவும். அமுதக் கரைசல் பயன்படுத்தத் தயாராகிவிடும்.
பயன்படுத்தும் முறை
அனைத்து வகைப் பயிர்களுக்கும் மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை தெளிக்கலாம்.
அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் அமுதக் கரைசலில், 10 லிட்டர்வரை நீர் சேர்த்துத் தெளிக்கலாம்.
கரைசல் தரும் பயன்கள்
1. யூரியா, டி.ஏ.பி போன்ற ரசாயன உரங்களை நீரில் கலந்து பயிர்களுக்குத் தெளித்தால் மிக விரைவாக வளர்ச்சி கூடுவதுபோல அமுதக் கரைசலும் மிக விரைவாகப் பயிர் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
2. சாணம், மாட்டுச் சிறுநீர் கலவையாக இருப்பதால் பயிரைச் சேதம் செய்யும் புழு பூச்சிகளை விரட்டுகிறது. பயிரைப் பூச்சிகள் உண்ணவிடாமல் தடுக்கிறது. ஆக, பூச்சிவிரட்டியாகவும் இது செயல்படுகிறது.
இதன் பின்னர் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பு மூலம் பூச்சி விரட்டி, ஊட்டக் கரைசல் என்று ஏதாவது ஒரு கரைசலைக் கொடுத்துக்கொண்டே வருகிறார். பயிரின் தன்மை, வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு எதைக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார். இது பட்டறிவின் மூலம் கற்றுக்கொள்ளலாம். தேவையான நேரத்தில் பயிர் திரட்டி வேண்டும்போது கடலைப் புண்ணாக்கு, ஆமணக்குப் புண்ணாக்கு ஆகியவற்றையும் கொடுக்கிறார்.
இவர் பயன்படுத்தும் நெல் வகை வெள்ளைப் பொன்னி, சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா. இவர் பொன்னியில் ஏக்கருக்கு 30 மூட்டை வரையிலும், சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா ஆகியவற்றில் 25 மூட்டை வரையிலும் விளைச்சல் எடுக்கிறார்.
தொடர்புக்கு: adisilmail@gmail.com
அருள்மொழி, கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: 94873 81043
(அடுத்த வாரம்: முதலீடோ குறைவு, லாபமோ அதிகம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT