Published : 24 Jun 2017 11:53 AM
Last Updated : 24 Jun 2017 11:53 AM
நிலவின் ஒளி தரை வரை ஊடுருவ முடியாத வகையில் சாலையை மூடியிருந்தன காட்டு மரங்கள். பூச்சிகளின் இடைவிடாத ரீங்காரம், தவளைகளின் இணையழைப்பு ஒலிகள், மரங்கள் வடிகட்டி அனுப்பிய மழைநீர்த் துளிகள், பசுமைமாறாக் காட்டுக்கே உரிய தனி நறுமணம், மின்மினிப் பூச்சிகளின் ஒளிநடனம் என காட்டின் இரவுச் சூழல் ரசனைக்கு விருந்து படைத்தது.
பறவைகள், காடுகள் மீது ஆர்வமுடைய நாற்பது பேர் கொண்ட குழு கேரள மாநிலம் தட்டக்காடு சாலிம் அலி பறவைகள் சரணாலயத்துக்குச் சமீபத்தில் சென்றிருந்தபோது கிடைத்த அனுபவத்தின் ஒரு துளி இது.
திகிலூட்டிய வழிகாட்டி
இரவு ஒன்பது மணி அளவில் அடர்ந்த காட்டுக்குள் இரவுப் பயணத்துக்குத் தயாரானோம். புறப்படுவதற்கு முன் மலையாளம் கலந்த தமிழில் திகில் உரை நிகழ்த்தினார் வழிகாட்டியும் காட்டுயிர் ஆர்வலருமான சுதீஷ்:
‘இப்போ நாம போகப்போற தட்டக்காடு சவுத் இந்தியாவிலயே கிங் கோப்ரா (கருநாகம்) அதிகமா இருக்குற இரண்டாவது இடம். அது அதிக விஷத்தன்மை கொண்டது. அப்புறம் சில பாம்புகள், வாய்ப்பிருந்தா சில விலங்குகளும் வரலாம். ரொம்ப அமைதியா இருக்கணும். யாரும் தனியா போகாதீங்க… குரூப்பா என் பின்னாடியே வாங்க. இல்லன்னா ஆபத்து அதிகம்… இரவுப் பயணம் கஷ்டம்னு நினைக்கிறவங்க இப்போவே ரிட்டர்ன் ஆகலாம்’ என்றார்.
தவளைவாயன்
அனைவரது முகத்திலும் கிலி… யாருக்கும் தெரியாமல் அமைதியாகத் திரும்பி விடலாமா என்று தோன்றியது. அதற்கு முன் பல காடுகளின் இரவு அழகை ரசித்திருக்கிறேன். ஆனால், அந்த காடுகளில் எல்லாம் கருநாகங்கள் இல்லையே! வழிகாட்டியின் உரை, சற்றே பய உணர்வைக் கூட்டியது! ஆனால், இரவில் காட்டின் ரகசியத்தைப் பார்க்கும் ஆசை விடவில்லை. கருநாகத்தை தேடிப் பயணம் தொடர்ந்தது.
இரவாடிப் பறவை
திடீரென சுட்டிக்காட்டப்பட்ட இடத்தை டார்ச் உதவியுடன் பார்த்தபோது, சிறிய தவளை ஒன்று ‘குர்குர்’ என சத்தமிட்டது. அது சத்தமிடும்போது அதன் தொண்டையின் இரண்டு பக்கமும் ‘பலூன்’ போல விரிவடைந்ததைப் பார்த்தோம். அருகிலேயே மிகப்பெரிய அளவில் வலை அமைத்திருந்த சிக்னேச்சர் சிலந்தியும் விடோ சிலந்தியும் மெல்லிய வலை இழைகளைப் பற்றிக்கொண்டிருந்தன. ‘பறக்கும் பல்லி’ எந்த மரத்துக்குத் தாவலாம் என்ற எண்ணத்துடன் ஒரு மரத் தண்டைப் பிடித்துக்கொண்டிருந்தது. இலையோடு இலையாக அந்த பச்சை நிறப் பல்லி ஆடிக்கொண்டிருந்தது.
கொடிகளும் செடிகளும் பாதையை ஆக்கிரமித்திருந்தது விநோத உணர்வை ஏற்படுத்தியது. அப்போது மரக் கிளை ஒன்றைப் பார்க்கச் சொன்னார் வழிகாட்டி. கருநாகமோ என்ற எண்ணத்தில் திகில் கலந்த பார்வையுடன் மரக்கிளையை நோக்கினோம். ‘பக்கி’ (Great eared night jar) என்ற இரவாடிப் பறவை சலனமின்றி அமர்ந்துகொண்டிருந்தது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தது அது. கருநாகத்தை கடைசிவரை பார்க்க முடியவில்லை. காட்டுலாக்களில் நாம் எதிர்பார்க்கும் உயிரினத்தைப் பார்ப்பதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம் என்பது புரிந்தது.
சேற்றில் மீன் பிடித்தல்
பகலில் சரணாலயத்தின் பசுமைமாறாக் காடுகள் கண்களுக்கு இதமளித்தன. தென்மேற்குப் பருவமழை வாஞ்சையோடு பூமியைத் தழுவிக்கொண்டிருந்தது. காட்டின் விளிம்பில் உயர்ந்திருந்த பலாமரக் கூட்டத்தின் உச்சிகளில் இருவாச்சி பறவைகள் (Malabar Grey Hornbill) வந்து அமர்ந்தன. நீளவால் கரிச்சான் (Rocket tailed Drongo) ஓடையின் மீது விருட்டென்று பறந்து செல்ல, எல்லோரும் தலையை உயர்த்திப் பார்த்தோம்.
நீர்க்காகம்
சரணாலயத்தில் இளைப்பாறிவிட்டு, ஆழம் குறைந்த ஆற்றில் அனைவரும் இறங்கினோம். சேற்றில் சிக்கிய மீன்களைப் பிடிக்கும் கலையை அங்கிருந்த பாரம்பரிய மீன்பிடிக் குழுவினரிடம் தெரிந்துக்கொண்டு, பல வகை மீன்களைப் பிடித்தோம். அவ்வப்போது பெரிய மீன்கொத்திகளும், சிறிய வெண்மார்பு மீன்கொத்திகளும் எங்களுக்கு போட்டியாக மீன்களை கொத்திப் பிடித்தன. அருகிலேயே சாரலில் நனைந்த நீர்க்காகங்கள் இறக்கைகளை விரித்து உலர வைத்துக்கொண்டிருந்தன. ஆர்வத்துடன் ஆற்றில் இறங்கிய எங்கள் உடலை சேற்று ஆடை மூடியிருந்தது.
25 பறவைகளைப்போல்
மதியம் மூன்று மணி அளவில் பறவை சரணாலயத்துக்குள் அழைத்து சென்று பல்வேறு பறவைகளைப் பற்றி சுவாரசியத் தகவல்களை பகிர்ந்துகொண்டே வந்தார் சுதீஷ். விடாமல் அடைமழை பொழிந்தது. மழையில் நனைந்தபடியே மரங்கள் அடர்ந்த சரணாலயத்துக்குள் சுற்றிக்கொண்டிருந்தோம். மழை ஓய்ந்த பிறகு, பறவைகள் தலைகாட்டத் தொடங்கின. வெவ்வேறு திசைகளிலிருந்து பறவைகளின் பாடல்களும் குரல்களும் கலவையாக ஒலித்தன. இருபத்தைந்து வகைப் பறவைகளைப் போல குரல் எழுப்பும் திறன் கொண்ட நீளவால் கரிச்சானின் திறமையைப் பற்றி சுதீஷ் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.
மரங்கொத்திப் பறவை ஒன்று ஈரமான மரத்தைக் கொத்திக்கொண்டிருந்தது. நிறைய ‘கொண்டு கரிச்சான்கள்’ கிளைகளிலும் மின்கம்பிகளிலும் வந்தமர்ந்து சீழ்க்கை ஒலி எழுப்பின. மாங்குயில், ஆரஞ்சு மின்சிட்டு, செம்மீசைச் சின்னான், பாம்புப்பருந்து என பல பறவைகளை அடுத்தடுத்து கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அருவியின் உச்சி
மறுநாள் காலை ஏழு மணிக்கு சரணாலயத்திலிருந்து பத்து கி.மீ. தொலைவிலிருக்கும் மலையில் ஏற அனைவரும் தயாரானோம். அப்போது மரத்திலிருந்து மனிதர்கள் சிரிப்பதைப் போன்ற சிரிப்புச் சத்தம் கேட்டது. அது இருவாச்சிப் பறவைகளின் குரல் என்றார் வழிகாட்டி. சிரிக்கும் ஒலிகளை வெளிப்படுத்துவதில் ‘நாங்கள் சளைத்தவர்கள் அல்ல’ என வால்காக்கைகளும் குரல் கொடுத்தன. மலையேற்றம் தொடங்கியது.
யானை லத்தியில் முளைத்திருந்த காளான்கள் மலை அடிவாரத்திலேயே தென்பட்டன. அதிகளவில் மழை பெய்திருந்ததால், மலை ஏறுவது கடினமாக இருந்தது. இரண்டு மணி நேரத்தில் மலை உச்சியை அடைந்து, அடுத்து செல்லவிருக்கும் அருவியின் உச்சந்தலையை ரசித்தோம். சிறிது நேர இளைப்பாறுதலுக்குப் பிறகு மலையிலிருந்து இறங்கத் தொடங்கினோம்.
செம்மீசைச் சின்னான்
விநோதப் பறவை
அந்த மலை அடிவாரத்தில் படைப்பின் அதிசயத்தை ஒரு பறவையின் வடிவில் கண்டோம். இலைச் சருகுகளையொத்த உடல். தவளை வாயையொத்த வித்தியாசமான முக அமைப்பு. நீண்ட நேரத்துக்கு அசையாதிருக்கும் தனித் திறமை. இதுவே உருமறைத் தோற்றத்துக்கு (Camouflage) சிறந்த எடுத்துக்காட்டு. இந்தத் தோற்றத்தில் இருந்தது Srilankan Frog Mouth எனப்படும் தவளைவாயன். இலங்கையிலும் மேற்கு தொடர்ச்சி மலையின் குறிப்பிட்ட பகுதிகளிலும் மட்டுமே இப்பறவையை காண முடியும். அன்றைக்கு எங்களாலும் அதை பார்க்க முடிந்தது.
பறவையின் நினைவுகளை சுமந்துக்கொண்டே அருவியை நோக்கி நடந்தோம். மழையோடு சேர்ந்து அருவியில் நனைந்தோம், பாறையில் சறுக்கினோம். இரண்டு நாட்கள் மழையில் நனைந்தும் யாருக்கும் உடல்நிலை பாதிக்கப்படவில்லை. இயற்கை என்றுமே நோய் உண்டாக்குவதில்லை. அந்த பசுமைமாறாக் காட்டை விட்டு திரும்பிச் செல்ல மனமில்லாமல், பசுமையான நினைவுகளுடன் ஊர் திரும்பினோம்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு:drvikramkumar86@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT