Published : 18 Mar 2017 11:28 AM
Last Updated : 18 Mar 2017 11:28 AM
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC-2017) பிப்ரவரி 17-20-ம் தேதிகளில் உலகெங்கும் நடைபெற்றது. இந்தப் பறவைகள் கணக்கெடுப்பை இந்தியப் பறவைகள் கணக்கெடுப்புக் கூட்டமைப்பு (The Bird Count India Partnership) ஒருங்கிணைத்து இருந்தது.
தங்களைச் சுற்றியுள்ள பறவைகளைக் குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்குப் பார்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையையும் கணக்கெடுத்து eBird (www.ebird.org/india) இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்பதே இந்தக் கணக்கெடுப்புக்கான அடிப்படை நிபந்தனை.
தமிழகத்துக்கு முதலிடம்
இந்த ஆண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் நாடெங்கும் 1,100 பேர் பங்கேற்றனர். இதுவரையிலான ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் இதுவே அதிகம். மொத்தம் 6,500 பட்டியல்களைப் பதிவேற்றப்பட்டன. அந்த வகையில் இந்தியாவுக்கு உலகிலேயே மூன்றாவது இடம். 2590 பட்டியல்களைப் பதிவிட்டதன் மூலம் நாட்டிலேயே தமிழகம்தான் அதிகப் பட்டியல்களைப் பதிவேற்றி உள்ளது. தமிழகத்தில் அதிகப் பறவை ஆர்வலர்கள் இருப்பதன் வெளிப்பாடு இது.
343 வகைகள்
இந்தியாவில் இந்த முறை பதிவு செய்யப்பட்ட பறவையினங்கள் 750. அந்த வகையில் இந்தியாவுக்கு உலகிலேயே இரண்டாவது இடம். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட பறவையினங்களின் எண்ணிக்கை 343. இது கிட்டத்தட்டத் தேசிய அளவில் பாதி. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் 269 பறவையினங்கள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மசினகுடி, ராஜபாளையம் நீர்த்தேக்கம், திருச்சி தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி.) ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த முறை பறவை கணக்கெடுப்பில் கல்வி நிறுவனங்கள், மற்ற நிறுவன வளாகங்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் பங்கேற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT