Published : 11 Mar 2014 05:04 PM
Last Updated : 11 Mar 2014 05:04 PM

எய்தவர் இருக்க, நோகும் அம்புகள்

நண்பரின் அழைப்பின் பேரில், கிளப் ஒன்றின் ஆண்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். அது ஒரு பெரிய நட்சத்திர ஓட்டல். நிகழ்ச்சி முடிந்து, பஃபே முறையில் சாப்பிடத் தயாரானோம். சிலர் சைவத்துக்கு ஒரு தட்டும், அசைவத்துக்கு ஒரு தட்டுமாக மாற்றிக் கொண்டிருந்தனர். சிலரோ ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு தட்டைப் பயன்படுத்தினர். சிலர் சாப்பிடவில்லை என்றாலும் பெயர் தெரியாத உணவை, பேச்சுத் துணைக்குப் போட்டுக்கொண்டு, பேசி முடித்ததும் அப்படியே ஓரத்திலிருக்கும் பெரிய டப்பாவில் வைத்துவிட்டுச் சென்றனர்.

எடுத்த தட்டு, அதிலிருக்கும் உணவு, அப்போதைக்கு எடுத்துக் கொஞ்சமே கொஞ்சம் குடித்து மிச்சம் வைக்கப்பட்ட தண்ணீர் கிளாஸ், இப்படிப் பல விஷயங்கள் ஒவ்வொரு விநாடியும், எந்தவிதக் கூச்சமும் இன்றி வீணடிக்கப்பட்டன. இதையெல்லாம் பார்க்கப் பார்க்க சினிமா நாயகனைப் போல நரம்புகள் ஒரு பக்கம் புடைத்தாலும், ஏதும் செய்ய முடியாத இயலாமையால் செய்வதறியாது சிற்றுண்டியை மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.

அங்கிருந்து பாத்ரூமுக்குச் சென்றால் அடுத்த வயிற்றெரிச்சல். கையைச் சுத்தம் செய்யக் கோட் அணிந்து வந்தவர்கள் யாரிடமும் கைவசம் துடைக்க எதுவுமில்லை. ‘அதான் இருக்கிறதே டிஷ்யூ பேப்பர். எடு கையில் வருவதை' என்று ஒருவர் பிடித்து இழுக்க, மொத்தக் காகிதச் சுருளும் கீழே கொட்டியது. தனக்கு வேண்டியவற்றை எடுத்துவிட்டு அவர் போக. பின்னால் வந்தவர் கீழே விழுந்ததை எடுத்து வைத்துவிட்டு, அவர் பங்குக்கு 4 பேப்பர்களை எடுத்துக்கொண்டு போனார்.

இந்தக் கூத்துகள் இங்கு மட்டுமல்ல. தினம்தினம் உலகம் முழுவதுமே பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தப் புள்ளியில்தான் ‘சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வு' பிரச்சினை குறித்த கேள்வி எழுகிறது. நம் ஊரில் நாளையே தண்ணீர்த் தட்டுப்பாடு வந்தால், சிரமம் யாருக்கு? மின் பற்றாக்குறை வந்தால்? கண்டிப்பாக மேற்கண்டவர்களுக்கு அல்ல. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தில் தவிப்பவர்கள்தான் இந்தப் பாதிப்புகளை முழுமையாக அனுபவிக்க வேண்டிய நிலை உண்டாகிறது.

இப்படிச் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஏழை - எளியோர் பாதிப்புக்கு உள்ளாவது எந்த வகையில் நியாயம்? 70 லட்ச ரூபாயைத் தன் வீட்டுக்கான மின் கட்டணமாகச் செலுத்தும் உலகப் பணக்காரர்கள் உள்ள, இதே நாட்டில்தான் மின் வசதியற்ற பல லட்சம் மக்களும் வாழ்ந்துவருகின்றனர்.

சுற்றுச்சூழல் அநீதி

சமூக ஏற்றத்தாழ்வு பணத்தில் இருப்பதைப் போலவே, சுற்றுச்சூழலிலும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. இதைத்தான் ‘காலநிலை அநீதி' (Climate injustice) எனச் சொல்கிறார்கள்.

நீர், நிலம், காற்று மாசுபடுதல், பிளாஸ்டிக் பயன்பாடு, காடு அழிப்பு, மரம் வளர்ப்பு, காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல்... சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்றாலே மேற்கண்ட அம்சங்களில் நமக்குக்

கொஞ்சமாவது புரிதல் இருக்கும். நம்மிடையே காலநிலை அநீதி தொடர்பான விழிப்புணர்வு மிகமிகக் குறைவு என்று சுட்டிக்காட்டுகிறது பீபல் டிரீ (pipal tree) என்ற தன்னார்வ அமைப்பு.

இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பெங்களூரில் இந்த அமைப்பு சமீபத்தில் ஒரு சிந்தனைப் பயிலரங்கை நடத்தியது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், நிபுணர்கள் கலந்துகொண்டனர். இரண்டு நாட்கள் நடந்த இந்தச் சந்திப்பின் நோக்கம், ஊடகங்களின் மூலம், காலநிலை மாற்றத்தைப் பற்றியும், காலநிலை அநீதியைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே.

இந்த நிகழ்வில் சிந்திக்கவைத்த சில துளிகள்:

பயிலரங்கு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்துப் பேசிய பீபல் டிரீ அமைப்பின் நிறுவனர் சித்தார்த், “சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சரியான புரிதலும், எண்ணமும் கொண்ட பத்திரிகையாளர்களும் இணைந்தால், கண்டிப்பாகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்தக் கூட்டு முயற்சியால் எப்படிக் கர்நாடக அரசு பொது மக்களுக்குச் சிறு தானியங்களை விநியோகிக்க முன்வந்தது என்பதை விளக்கினார்.

மத்திய அரசின் பல்வேறு ஆற்றல் திட்டங்களில் ஆலோசகராக இருந்த சங்கர் சர்மா, “நமது நாட்டின் மின்சார உற்பத்தி, தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. சரியான முறையில் விநியோகம் நடப்பதில்லை என்பதாலேயே மின் பற்றாக்குறை ஏற்படுகிறது” என்று சுட்டிக்காட்டினார். எதிர்கால மின் தேவைக்கு, சூரிய மின்சக்தியே சரியான மாற்றாக இருக்கும் என்ற அவர், அரசின் சார்பில் நடத்தப்படும் ஆற்றல் சேமிப்புத் திட்டங்களெல்லாம் வெறும் கண் துடைப்புதானே தவிர, அவை ஆக்கப்பூர்வமாக எதையும் செய்வதில்லை என்றும் குறிப்பிட்டார்.

‘மின்சாரம் நமக்கு அத்தியாவசியத் தேவையா அல்லது ஆடம்பரமா?” என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அனைவருக்கும் சரிசமமாக மின் விநியோகம் இருக்கும்பட்சத்தில், அது அத்தியாவசியம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.

தமிழகப் பங்கெடுப்பு

காலநிலை மாற்றம் குறித்துத் தமிழில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் நக்கீரன், சதுப்பு நிலக் காடுகள் எவ்வாறு நம் சுற்றுப்புறத்தைக் காக்கின்றன, அழிவுப் பாதையில் இருக்கும் அந்தச் சூழல்தொகுதியை ஏன் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இயற்கை வேளாண்மை, சிறு தானியங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், கமல் சுந்தர் என்பவர் நிறுவிய தமிழகத்தைச் சேர்ந்த காண்டிஜெண்ட் அறக்கட்டளையின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் தலித் பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர் சாந்தா, கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் நாகேஷ் ஹெக்டே ஆகியோரும் பங்கேற்றனர். முடிவாக, பத்திரிகையாளரும் சுற்றுசூழல் ஆர்வலருமான நித்தியானந்த் ஜெயராமன், சுற்றுச்சூழல் பற்றி எழுதும்போது மனதில் கொள்ளவேண்டிய விதிகளைப் பற்றி விளக்கினார்.

காலநிலை அநீதி பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பதிலைத் தந்தது இந்தப் பயிலரங்கு. ‘நம்மை அறியாமல் நமக்கு இழைக்கப்படும் அநீதியை, கொஞ்சம் விழித்துக்கொண்டால் மாற்ற முடியும்' என்பதே அது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x