Published : 13 May 2017 11:48 AM
Last Updated : 13 May 2017 11:48 AM
விதை என்பது ஒரு உயிர்ப்பெட்டகம், மண்ணால் உயிர் பெற்று, உயிரினங்களை வளர்த்தெடுத்து உயிரைக் காக்கக்கூடியது.
பஞ்சம் பாதித்த காலத்தில் விதையை உண்ண மறுத்து, உயிர் துறந்தவர்கள் குறித்து நம் வரலாறு பதிவு செய்துள்ளது. அடுத்த தலைமுறைக்கு விதையை விட்டுச் செல்வதற்காக உயிர் நீத்த பரம்பரை நம்முடையது! இப்படி உயிரைத் துறந்து காப்பாற்றிய விதைகளுக்கு எப்படி விலை நிர்ணயிக்க முடியும்?
உயிர் பரிமாற்றம்
சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை நம் ஊர் உழவர்கள் விளைவிக்கும் விதைக்கு விலை நிர்ணயிக்கப்படவில்லை. வியாபாரப் பண்டமாக விதை இருக்கவில்லை. எல்லாவற்றையும் செழிப்புறச் செய்யும் வித்தையைக் கற்றிருந்த நம் பெண்களின் கைகளில் விதை பாதுகாக்கப்பட்டு, அடுத்தடுத்த பருவத்துக்காகச் சேமிக்கப்பட்டது.
ஒருவருக்கு விதை தேவைப்பட்டால், அடுத்தவருக்குப் பரிமாறிக்கொள்வதாக மட்டுமே அது இருந்தது. அப்படி இல்லாத நிலையில் ஒரு விதைக்கு மற்றொரு விதை பண்டமாற்றாகக் கொடுக்கப்பட்டது. பின்னாட்களில் விலை நிர்ணயிக்க வேண்டி வந்தபோதும்கூட, கொள்ளை லாப விலை நிர்ணயிக்கப்படாமல் நியாய விலையிலேயே விதை சந்தைப்படுத்தப்பட்டது.
நுழைந்தது வெறி
மேலை நாட்டின் லாபவெறி நிறுவனங்கள் விதையை விற்பதற்காக நம் நாட்டில் நுழைந்தபோது, அடுத்த தலைமுறை விதை மீண்டும் முளைக்காத, மீண்டும் பயன்படுத்த முடியாத சோதா விதைகளாக வந்தன. அதன் காரணமாக, மீண்டும் மீண்டும் தனியார் நிறுவனத்தைச் சார்ந்திருக்க வேண்டிய சந்தைப் பொருளாக விதை மாற்றப்பட்டது.
மான்சாண்டோ நிறுவனத்தால் மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தி விதை, 2002-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சந்தையில் பாரம்பரிய மற்றும் வீரிய (சோதா) விதைகள் ரூ.20 -30 விலையிலும், பி.டி. பருத்தி விதை ரூ. 2,000-க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.
வீழ்ந்தது விதை
உழவனுக்கும் உணவுக்கும் ஆதாரமாக இருந்த விதை வியாபாரமாக, பெரும் லாபமளிக்கும் விற்பனைப் பண்டமாக நம் மீது திணிக்கப்படுவதை இன்றைக்குப் பார்க்கிறோம். இப்படி நம் விதை பறிபோவது சமீபத்திய விவகாரம் அல்ல. நமது நாட்டு விதைகள் பறிபோகும் அவலம் ரிச்சாரியா காலத்திலிருந்தே நடந்து வருவதுதான். இதன் பின்னணியில் அரசியல்வாதிகள், பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கு ஆதரவு அறிவியலாளர்கள் செயல்படுகிறார்கள்.
நமது மிகப் பெரிய சொத்தாகத் திகழ்ந்த பாரம்பரிய விதை வளம் அழிக்கப்பட்டு, ஓரிரு நிறுவனங்களின் விதை மட்டுமே சந்தையை ஆக்கிரமித்திருக்கும் மோசமான நிலைக்கு நம்முடைய வேளாண்மை தள்ளப்பட்டுள்ளது.
காப்புரிமை என்ற பெயரில் நம் பாரம்பரியப் பொருட்களான வேம்பு முதல் மஞ்சளின் பல்வேறுபட்ட பயன்பாடுகளை மொத்தமாக விழுங்க நடந்த அநீதிகள், தாவர-உயிரினப் பன்மையை முற்றிலும் சீரழிக்கும் மரபணு மாற்று விதைகள் அறிமுகம் போன்றவை நமது பாரம்பரிய விதைகள் மீதும் உழவர்கள் மீதும் வலிந்து திணிக்கப்படும் நெருக்கடிகள் என்பதில் சந்தேகமில்லை.
உழவர் தற்கொலை
விதைதான் உழவுக்கு முதன்மை இடுபொருள். ஆனால், இன்றைய சந்தை பொருளாதாரத்திலோ அது ஒரு விற்பனைப் பண்டம். அத்துடன் கூடவே ஒட்டிக்கொண்டுவரும் ரசாயன இடுபொருட்கள் என்ற நச்சு வட்டத்தின் பிரதிநிதி.
விதை என்றால் உயிர் வித்து, உயிர் காக்கும்-உயிருக்கு உணவூட்டும் பொருள் என்பதெல்லாம் போய், வெறும் சந்தைப் பண்டமாகிவிட்டது. இதனால் பேரிழப்பைச் சந்தித்தவர்கள் உழவர்கள் மட்டுமே. அதனால்தான் இன்றைக்கு இந்தியாவில் 95% பருத்தி விதைச் சந்தையைக் கொண்ட மான்சாண்டோ விதை நிறுவனம் கொள்ளை லாபத்தில் கொழிக்கிறது. அதை சந்தைப்படுத்திய இந்திய நிறுவனங்கள், இடுபொருள் விற்ற ரசாயன நிறுவனங்கள் லாபத்தில் திளைக்கின்றன. ஆனால், அந்த விதையை வாங்கிப் பயிரிட்ட பருத்தி உழவர்கள் தங்களையே மாய்த்துத் தற்கொலை செய்துகொள்கின்றனர். இன்றைக்கு இந்தியாவில் நடக்கும் உழவர்கள் தற்கொலையில் 70% பருத்தி உழவர்களே.
உயிரின் அடிப்படை
விதை என்பது உழவின்/உயிரின் அடிப்படை. அதை நாம் இழந்தால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம். விதைப் பன்மயம் என்பது நாட்டின், உணவு உற்பத்தியின், உழவர்களுடைய வாழ்வாதாரத்தின் அடிப்படை.
அப்படிப்பட்ட விதைப் பன்மயத்தைக் காப்பவர்கள், அதை அழிக்க முற்படும் விதை வியாபாரம், இதற்கிடையே நூற்றுக்கணக்கான பாரம்பரிய விதைகளைக் காப்பாற்றி வரும் விதை விற்பன்னர்கள், விதைப் பாதுகாப்பில் நிலவும் நெருக்கடிகள், அரசுகளின் தவறான கொள்கைகள்/அரசாணைகள், விதைப் பன்மயத்தின் முக்கியத்துவம், நமது விதைகளைப் பாதுகாக்க விவசாயிகள் - நுகர்வோர் என்ன செய்ய முடியும் ஆகியவை பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.
- கட்டுரையாளர், இயற்கை வேளாண் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT