Published : 03 Jun 2017 10:10 AM
Last Updated : 03 Jun 2017 10:10 AM
ஒரு நேந்திரன் வாழைப் பழத்தை ஒருவர் சாப்பிட்டாலே மூச்சு முட்டும். அந்தச் சராசரி அளவு நேந்திரன் வாழைகளைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மெகா சைஸ் நேந்திரன் வாழைகளைத் தற்போது கேரளத்து விவசாயிகள் பயிரிட்டுக் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
புதிய வகை
பொதுவாக ரஸ்தாளி, பூவன், நாடன், விருப்பாச்சி, கற்பூரவல்லி, கதளி, மலை, நேந்திரன் எனப் பலவகை வாழைகள் பயிரிடப்படுகின்றன. இதில் கிடைப்பதிலேயே பெரிய அளவில் இருப்பது நேந்திரன் வாழை. அது கேரளாவில் சிப்ஸ் போடுவதற்கு பரவலாகப் பயன்படுகிறது. அங்கு நேந்திரன் வாழைக்கான தேவை அதிகம் இருப்பதால், தமிழக விவசாயிகள் நேந்திரன் வாழையைப் பயிரிட்டுக் கேரளத்துக்கு அனுப்பிவருகிறார்கள்.
இப்போது அந்த நேந்திரன் வாழைகளைப்போல் மூன்று மடங்கு பெரிய அளவில் புதிய வாழை ரகம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது திருவனந்தபுரம் வாழை ஆராய்ச்சி மையம். இதைப் பாலக்காடு மாவட்டம் உள்படக் கேரளத்தின் பல்வேறு மாவட்ட விவசாயிகளும் வாங்கிப் பயன்படுத்திவருகிறார்கள்.
பெரிய அளவு காய்கள்
இது குறித்து அட்டப்பாடியில் இந்த வாழையைப் பயிரிட்டுள்ள விவசாயி ராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டது:
“நேந்திரன் வாழைமரம் 15 அடி முதல் 20 அடிவரை உயரம் வளரக்கூடியது. 10 முதல் 12 சீப்புகள் வரும். அதில் ஒரு சீப்பில் 12 முதல் 18 காய்கள்வரை காய்க்கும். இப்போது திருவனந்தபுரம் வாழை ஆராய்ச்சி மையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாழை ரகம், நேந்திரன் வகையைச் சேர்ந்தது என்றாலும் காய் குண்டு குண்டாக உள்ளது. ஒரு குலை 30 கிலோ முதல் 40 கிலோவரை வருகிறது. ஒரு வாழைப்பழம் எனத் தனியாக எடுத்தால் அரை கிலோ முதல் முக்கால் கிலோ எடை வருகிறது. ஐந்து அல்லது ஆறு சீப்பு மட்டுமே காய்க்கிறது. ஒரு சீப்பில் 11 முதல் 13 வாழைக்காய்கள் காய்க்கின்றன. முற்றிய இந்த வாழைக்காயைப் பயன்படுத்திச் சிப்ஸ் போட்டால் அது பப்படம் போல் பெரிய சைஸில் இருக்கிறது. காயும் பழுத்த பின்பு சுவையாக உள்ளது. இந்த ரகத்தின் ஒரு முழு வாழைப்பழத்தை ஓர் ஆளால் சாப்பிட முடியாது.
சொந்தமாக வளர்க்க வேண்டும்
எனக்கு இரண்டு வாழைக் கன்றுகள் மட்டுமே கிடைத்தன. ஒரு கன்று ரூ. 30-க்கு வாங்கி வந்தேன். எனக்கு முன்னதாக அட்டப்பாடி அகழி பகுதியில் உள்ள சம்பார்கோடு கிராமத்தில் மாத்யூ என்பவர் பயிரிட்டிருந்தார். அவர் ஒரு விளைச்சலும் எடுத்துவிட்டு, தற்போது அதில் வந்த பக்கக் கன்றுகளைப் பயன்படுத்திப் புதிதாக இரண்டாவது விதைப்பும் செய்திருக்கிறார். நேந்திரன் வாழையைவிட இதில் சத்து அதிகம் என்று ஆராய்ச்சி நிலையத்தினர் அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆனால், போதுமான எண்ணிக்கையில் இவை கிடைப்பதில்லை. நாமே இரண்டு வாழைக் கன்றுகள் வாங்கிவந்து நட்டுவைத்து, பக்கக்கன்றுகள் மூலம் விதைக்கு எடுக்க வேண்டும்!”.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT